ஓய்வு

சிறுகதை
ஓய்வு
(கோவி.தமிழ்ச்செல்வி, நீலாய்,நெ.செ )
காலையில் சந்தைக்குச் சென்று சமையலுக்குத் தேவையானவற்றை எல்லாம் தேடிப்பிடித்து வாங்கிக் கொண்டு , தனக்கும் மனைவிக்கும் காலைச்சிற்றுண்டியாக நான்கு இட்லிகளையும் வாங்கிக் கொண்டு களைப்போடு வாசலில் காரை நிறுத்திவிட்டு நெகிழிப்பைகளில் நிரப்பப்பட்ட பொருள்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைத்த கதிரேசன் “அப்பாடா? ” என்றவாறு வரவேற்பறையில் வந்தமர்ந்தார்.
உள்ளே இருந்து எட்டிப்பார்த்த பார்வதி வேகமாக வருவதைக் கண்ட கதிரேசன் “தண்ணி கலக்கியாச்சா? வா பசியாறலாம்! ராத்திரி சரியா சாப்பிடலை, பசி வயித்தைக் கிள்ளுது ” என்றவாறு இன்னும் சூடேறாத சொகுசு நாற்காலியை விட்டு மெதுவாக எழுந்தார். “இல்லைங்க, காயு போன் பண்ணுச்சி . பையனுக்கு ஸ்கூல்ல உடம்பு சரியில்லையாம்.புள்ள ரெண்டு தடவ வாந்தி வேற எடுத்துட்டானாம்.போய் கூட்டிக்கிட்டு வந்துடுங்க.சேர்ந்து பசியாறலாம்! சீக்கிரம் போயிட்டு வந்துருங்க , நவீன் காத்துக்கிட்டு இருப்பான் !” என்றவாறு அடுத்த பதிலுக்குக் காத்திராமல் சமையலறைக்குத் திரும்பிவிட்டாள்.
சுவரில் மாட்டப்பட்டு வெகு காலமாகச் சேவையாற்றிக் கொண்டிருக்கும் கடிகாரத்தைப் பார்த்தார்.காலை மணி 8.55 ஆகிவிட்டது.அந்தக் கடிகாரம் “என்னையா , உமது பதவி ஓய்வுக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசு நான்.வேலை செய்யும் வயதைக் கடந்துவிட்டீர் . . . .இனி ஓய்வு கொள்ளும் என்று சொல்லாமல் சொல்லி உம்மைப் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.ஆனால், அன்று முதல் வீட்டில் இருப்போருக்கு நீங்க தான் புதிதாய் சம்பளமேதுமின்றி வேலைக்கு அமர்த்தப்பட்ட முழுநேர ஓடும் பிள்ளை! பாவம் சார் நீங்க . . .” என்று எள்ளி நகையாடுவது போல் ஓர் அசரீரி அவர் காதில் மட்டும் ஒலித்தது.
சுவரில் மாட்டப்பட்டு இன்னும் ஆடிக்கொண்டிருந்த கார் சாவியைப் பற்றியவர் மறுவார்த்தை ஏதுமின்றி மீண்டும் காலணியை மாட்டிக் கொண்டு புறப்பட்டார். அவான்சா கார் தாமானைக் கடந்து கடைவீதியூடே நீலாய் தமிழ்ப்பள்ளியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதே பள்ளிக்குக் கம்பீரமாய் தலைமையாசிரியராய் தினசரி சென்றமைக்கும் இப்போது ஒரு தாத்தாவாகச் செல்வதற்கும் நிறைய வேறுபாடுகள்! முன்பு தான் தான் பள்ளிக்கே தலைமை.என்னே ஒரு மரியாதை;என்னே உபசாரம்? ஆனால் , இப்போது போகும் போது வருகையாளர் கையேட்டில் கையெழுத்திட வேண்டும்.காரைப் பள்ளி வளாகத்திற்கு வெளியே நிறுத்த வேண்டும்.முன்பு இருந்த பாதுகாவலர்களும் கூட இப்போது பணியில் இல்லை.இப்போது பணிபுரியும் புதியவர்களுக்குத் தன்னைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்!
ஏதோ சிந்தனையோடு வந்தவர் வழக்கம் போல் பள்ளி வளாகத்திற்கு வெளியே காரைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு கண்களை ஆசிரியர் அறைப் பக்கமாகப் பாயவிட்டார்.மருமகள் காயத்திரி எட்டிப் பார்ப்பது தெரிந்தது. கால்கள் வேகமாகப் பின்னின.அதற்குள் மகனின் புத்தகப்பையை ஒரு கையிலும் மகன் சுகேந்திரனை மறு கையிலும் பற்றியபடி தன் மாமனாரை நோக்கி வரலானாள். “ஏன் இவ்வளவு தாமதம் ? சீக்கிரமாக வரத் தெரியாதா மாமா ? ”என்ற மருமகளின் மௌனராகத்திற்கு “மார்க்கெட் போயிருந்தேன் மா ,போனை எடுத்துட்டுப் போகல ; வீட்டுக்குப் போனதும் அத்தை சொன்னா. உடனே கிளம்பி வந்தேன் மா.ஏன் யா என்னையா பண்ணுது? நேரா கிளினிக் போகலாமா? ” என்றபடி தாத்தா பேரனைக் கொஞ்ச ஆரம்பித்தார்.
“என்னமோ தெரியலிங்க மாமா .காலையில கிளம்பி வரும்போது நல்லா தான் இருந்தான்.இப்ப ரெண்டு தடவை வாந்தி எடுத்துட்டான்.உடம்பு கொதிக்குது.முடிஞ்சா கிளினிக்குக் கூட்டிட்டுப் போங்க.இல்லைன்னா சாயங்காலம் நான் வந்து பாக்கறேன்.மீட்டிங் வேற இருக்கு.எப்படியும் ஐந்து மணிக்கு மேலத்தான் முடியும்! ” முடித்தும் முடிக்காமல் நிறுத்தினாள் காயத்திரி.
“ சரிம்மா, முதல்ல வீட்டுக்குப் போய் பசியாறிட்டு அப்புறம் கிளினிக் கூட்டிட்டுப் போறேன்.நீ போய் பசியாறுமா; கவலைப்படாதே,” என்றவாறு பேரனின் புத்தகப்பையைத் தன் மருமகளிடமிருந்து பெற்றுக்கொண்டார். “அடேயப்பா ! என்ன இவ்வளவு பாரமா இருக்கு? எப்படித்தான் புள்ள இதைத் தூக்கறானோ ?” என்று தாத்தா முடிப்பதற்குள் “அவன் எங்கே தூக்குகிறான்.தரத்தரன்னு இழுத்துக்கிட்டுத்தானே வரான்? சரிங்க மாமா , எனக்குப் பாடத்துக்கு மணியாச்சி. நவீன்,சேட்டை பண்ணி தாத்தா பாட்டிக்குக் கஸ்டம் கொடுக்காம நல்ல பிள்ளையா இருக்கணும்.பாஃய் ”என்று கையசைத்தவாறு பின்னோக்கி நடைபோட்டு மறைந்தாள்.
பேரனை ஒரு கையால் பற்றிக்கொண்டு மறு கையால் புத்தகப்பையையும் சுமந்தபடி பள்ளியின் தடுப்புச்சுவருக்கு வெளியே நிறுத்திவைத்திருந்த அவான்சாவை நோக்கி நடந்தார்.அவான்சா நேரே வீட்டை அடைந்தது.கொக்கு போல் பேரனின் வருகைக்காகக் காத்திருந்த பார்வதி ஓட்டமும் நடையுமாக வாசலுக்கு விரைந்தாள். “என்னாயா பண்ணுது? ரொம்ப வாந்தியா கண்ணு? வா, கிளம்பு.கிளினிக் போகலாம்! என்னங்க.... . . கிளினிக் போகலாம் !” என்றவள் பேரனைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துப் போனாள்.காலணிகளை உதறித் தள்ளிவிட்டு காலுறைகளை உரித்து எறிந்தவன் ஓட்டமும் நடையுமாய் ஓடி சொகுசு நாற்காலியில் நீட்டிப் படுத்துக் கொண்டான்.
பட்டனை அழுத்திக் காரைப் பூட்டியதை உறுதி செய்து கொண்டு கதிரேசனும் வீட்டிற்குள் வந்தார்.மேசை மீது தன்னுடைய கோப்பையில் மைலோவும் காலையில் தான் வாங்கி வந்த இட்லி பொட்டலமும் இருக்கக் கண்டார். “ வா,பாரு.பசியாறு.மாத்திரை சாப்பிடனும். அப்புறம் கஸ்டமாப் போயிடும்.வா.... . . .! நவீன் , பசியாறுயா வா ; இட்லி இருக்கு !’’ என்று தன் மனைவியையும் பேரனையும் அழைத்தார் கதிரேசன்.
“எனக்கு ஒன்னும் வேணாம்.சாப்டா வாந்தி வரும். .. ” என்று சிணுங்கியவாறு சுருண்டு படுத்தான். “என்னங்க ,முதல்ல நவீனைக் கிளினிக் கூட்டிட்டுப் போயிட்டு வந்துருவோம்.பாருங்க ,எப்படித் துவண்டு கிடக்கறான்னு? ” பார்வதி பேரனின் தலைமுடியைக் கோதிவிட்டவாறு கணவனை வேண்டினாள்.”சரி புறப்படு ,” என்றபடி மேசை மீது தனக்காகக் காத்திருந்து ஆறிப்போன மில்லோவை எடுத்து ஒரே மூச்சில் உறிஞ்சினார். மீதத்தை மீண்டும் மூடி வைத்துவிட்டுப் பேரனுக்கான மாற்றுடையை எடுத்துக் கொண்டு வந்து அவனை எழச்செய்து உடையை மாற்றி விட்டார்.
வெளியில் எங்கும் போவதானால் ஆற அமர ஆடி அசைந்து கிளம்பும் பார்வதி பேரனுக்கென்றானவுடன் மட்டும் நொடிப்பொழுதில் கிளம்பிவிட்டதைக் கண்டும் காணாததுபோல் கதிரேசன் மீண்டும் சாவியைப் பற்றிக் கொண்டதோடு வீட்டுக் கதவுகளையும் பாதுகாப்பாக மூடிப் பூட்டினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பசியை அவர் மறந்தாலும் அவரது வயிறு மறக்கவில்லை. காலை மணி பத்தை நெறுங்கிவிட்டதால் சாலையில் வாகன நெரிசல் ஓரளவு குறைந்திருந்தது.அவான்சா வழக்கமாக அவர்கள் போகும் குடும்ப மருத்துவரின் கிளினிக்கின் முன் போய் நின்றது.நல்ல வேளை கார் நிறுத்துமிடத்தில் ஓரிடம் மட்டும் காலியாக இருந்தது.இல்லையேல் அதற்குச் சில நிமிடங்களைச் செலவிட வேண்டியிருக்கும்.தம்பதியர் இருவரும் ஒருவர் முன் செல்ல மற்றவர் தொடரப் பேரனை அக்கறையோடு பதிவு செய்துவிட்டு இருக்கையைத் தேடி அமர்ந்தனர். திங்கட்கிழமை என்பதால் நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
மருமகள் காயத்திரியும் இரு முறை அழைத்து மகனின் நிலை குறித்து விசாரித்துக் கொண்டது தம்பதியருக்கு ஒரு புறம் ஆறுதலாகவும் மறுபுறம் நெருடலாகவும் இருக்கச் செய்தது. மருத்துவரைக் கண்டு பேசிப் பின்னர் காத்திருந்து மருந்துகளை வாங்கிக் கொண்டு வெளிவந்தபோது மணி பன்னிரண்டுக்கு மேலாகிவிட்டது. “இதற்கு மேல் எங்கே சமைப்பது? உடல் நலம் குன்றிய பேரக்குழந்தைகளைச் சமாளிப்பதென்பது தனிக் கலை!ஆகவே இன்று அடுப்புக்கு விடுப்பு தான் ” என்பதை நன்கு அறிந்தவன் கதிரவன்.
“சரி, கடையிலே சாப்பிட்டு விடுவோம் ,பசிக்குது. பாரு! மணி ஆகுது. இதுக்கு மேல நீ போய் சமைக்க கஸ்டம். நவீனுக்கு வேற உடம்பு சரியில்ல.இவன வச்சிக்கிட்டு உன்னால சமைக்க முடியாது, ” வழக்கம் போல் சொல்லிக்கொண்டே நடக்கலானார். “சரிங்க , நீங்க இன்னும் பசியாறக்கூட இல்லை! என்ன செய்யறது ? சின்னப் பிள்ளைங்களுக்கு உடம்பு சரியில்லேன்னா மனசு கேக்க மாட்டுது. அதான் அவசரமா கூட்டிட்டு வர வேண்டியதாப் போச்சி. சரி , நல்ல கடையா பாருங்க !” என்றபடி பின் தொடர்ந்தாள்.
சென்ற மாதம் இதே போலத்தான் நாற்பத்திரண்டு வயது மகனுக்கு உடம்பு சரியில்லை என்று மருமகள் அழைத்துச் சொன்னவுடன் வீட்டைப் பூட்டுவதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல் இறக்கை கட்டிக் கண்டு பறந்ததை எண்ணி ஒரு வெற்றுப் புன்னகையோடு தலையை அசைத்தவாறு பேரனின் கையையும் அன்பு மனைவி பார்வதியின் கையையும் பற்றிக் கொண்டு சாலையைக் கடந்து உணவகத்தில் நுழைந்தார் .
மிகவும் களைப்புடன் மின்விசிறியின் அடியில் இருந்த மேசையாகப் பார்த்து “அப்பாடா....!” என்று உள்ளூர பெருமூச்சொன்றை வெளியிட்ட வண்ணம் பேரனை உட்காரச் செய்து விட்டு பார்வை குறைந்த தன் மனைவியையும் அமரச் செய்தபின் அமர்ந்தார்.
“வாங்க சார். . . எப்படி இருக்கீங்க? என்ன சாப்பரறீங்க? இலை போடட்மா ? லஞ்ச் ரெடியாயிடுச்சி! ’’ என்றவாறு பக்தியோடு பக்கத்தில் வந்து நின்றார் செல்வம் உணவக முதலாளி பன்னீர்.அதற்கிடையில் “நீங்க எப்படிம்மா இருக்கீங்க ? பேரனா? ஏன் சோர்வா இருக்கார்? உடம்பு சரியில்லையா?” என்ற கேள்விக் கனைகளைத் தொடுத்தவாறு கதிரேசனைப் பார்த்தார். பார்வதி தன் பங்கிற்கு ஒரு புன்னகையை மட்டும் பகிர்ந்து கொண்டாள்.
“ஆமாம் பா, பேரனுக்கு உடம்பு சரியில்லை ; நம்ம டாக்டர் ரவி கிட்ட மருந்து எடுத்தால் தான் இவனுக்குக் கேட்கும்.சரிப்பா! நல்ல சைவ சாப்பாடா கொண்டு வாங்க! ரசம் இருக்கா? ” என்றபடி மனைவியைப் பார்த்து “உனக்கேதும் வேணுமா? மீன் பொறியல் கொண்டு வரச் சொல்லவா? ஐயாவுக்கு என்ன வேண்டும்? ” என்றபடி பேரனைக் கனிவுடன் பார்த்தார். “ எனக்கு ஒன்னும் வேணாம்... ” என்று சிணுங்கினான்.
“விடுங்க , நான் ரசம் ஊற்றிக் கொஞ்சம் ஊட்டி விடறேன்.அப்புறம் போகும் போது மெக்டீ ல கஞ்சி வாங்கிட்டு போயிடுவோம். அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்!” பாட்டி பார்வதி பரிந்துரைத்தார். இந்த உரையாடலுக்கிடையே சுடச்சுடச் சாதமும் காய்கறிகளும் வாழை இலையில் பரிமாறப்பட்டன.பசியோடு நடமாடிக்கொண்டிருந்த கதிரேசனும் பார்வதியும் பேரனுக்கு மாறி மாறி ஊட்டியபடி தன் பசியையும் போக்கிக் கொண்டனர்.
வழியில் பேரனுக்கு மேக்டீ கஞ்சியையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய அந்த ஜோடி பேரனுக்கு வேண்டியவற்றைச் செய்து மருந்து கொடுத்து தூங்கச் செய்த பின்னர் பார்வதி தொலைக்காட்சியின் முன் அமர , கதிரேசன் தன் அறைக்குச் சென்று தலை சாய்ந்தார்.
“ அப்பாடா! ” நீண்டதொரு பெருமூச்சு வெளிப்பட அந்த அறையே சூடேறிப்போனது போலாயிற்று….அந்நாந்து பார்த்தார்.மீண்டும் எழுந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மின்விறிசியைச் சுழலச் செய்தபின் மீண்டும் சாய்ந்தார்.உடம்பெல்லாம் ரணமாக வலித்தது.பணியில் இருந்த காலத்தில்கூட இப்படிக் களைப்பும் சோர்வும் ஏற்பட்டதாக நினைவில்லை. கண்ணை மூடித் தூங்க முயன்றவரின் கண்களை உறக்கம் தழுவவில்லை …….பழைய நினைவுகள் சிலந்தியைப் போல் வலைபின்னத் தொடங்கின.
இரு பெண்கள் இரு ஆண்கள் என நான்கு பிள்ளைகள்.மனைவி பார்வதி இல்லத்தரசி. ஆரம்பக்காலத்தில் ஆரம்ப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய போது , கஷ்டத்தோடு கஷ்டமாகத் தனது உயர்கல்வியையும் முடித்துக் கொண்டார்.ஆகவே, தனியார் கல்லூரிகளில் பகுதி நேர விரிவுரையாளராகச் சில பாடங்களைப் போதிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.அந்த வருமானம் தொடர் வீட்டுத் திட்டத்தில் ஒரு வீட்டை வாங்குவதற்கும் பிள்ளைகளைப் பட்டதாரிகளாக்குவதற்கும் துணை புரிந்தது.
மூத்த மகனும் கடைக்குட்டி மேகலையும் வெளிநாட்டிற்குக் குடிபெயர்ந்து விட்டனர்.சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வந்து போவர்.விருந்தினர் போல் வந்து சில தினங்கள் மட்டும் தங்கிவிட்டுப் போவர்.வரும் போதெல்லாம் ஏதாவதொரு வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனக்கசப்புடன் புறப்பட்டுச் செல்வது வழக்கமாகிவிட்டது. எவ்வளவு கவனமாக இருந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை உருவாகி அது வெடித்துச் சிதறி தெளிந்த நீரோடை போலிருக்கும் சூழலைப் பேரலைக்கு உள்ளாக்கி விடும். உள்ளும் புறமும் வேறுபட்ட உணர்வோடு பிரிந்து விடைபெற்றுச் செல்வர்.சில வாரங்கள்,மாதங்கள் தொடர்பின்றி இருப்பர்.பின்னர் கதிரேசனும் பார்வதியும் பல முறை அழைத்துப் பேசி சமாதானப் படுத்துவர்.ஆராய்ந்து பார்த்தால் குற்றம் யார் பக்கம் என்பது புரியாப் புதிராகிப் போகும்.
குமாரும் பிருந்தாவும் உள்நாட்டிலேயே தான் இருக்கின்றனர்.சில நேரத்தில் இவர்களும் தொலைவில் இருந்திருந்தால் நல்லதோ என்று எண்ணும்படியான சூழல் உருவாகிவிடுகின்றன.வாடகை வீட்டில் குடியிருந்த மகள் குடும்பத்தினரைச் சொந்த வீடு வாங்கச் செய்து குடியேறச் செய்ததில் கொஞ்சம் நஞ்சம் சேர்த்து வைத்திருந்த சேமிப்பும் நகைகளும் காலாவதியாகிவிட்டன. “ மகளுக்கு மட்டும் கொடுத்து உதவுங்கள்.எனக்கு மட்டும் அஞ்சி காசு குடுத்து உதவி செஞ்ஞிடாதீங்க .உங்களுக்கு ஒன்னுன்னா பக்கத்துல நான் தான் இருக்கேன்.அங்கே ஆஸ்திரோலியாவுல இருக்குற மகனும் ,பாரிஸ்ல இருக்குற மகளுமா ஓடி வரப்போறாங்க?உங்க சொத்தையெல்லாம் தந்திரமாக அபகறிச்சிக்கிட்டு இருக்குற மகளும் உங்க செல்ல மருமகனும் கூட வர மாட்டாங்க . . . .!” குமாரின் தேசிய கீதம் இதுதான்.இதற்கெல்லாம் கதிரேசன் இப்போது கலங்குவதில்லை.வஞ்சமின்றி நான்கு பிள்ளைகளுக்கும் கல்வி கொடுத்தாகிவிட்டது.அதை மூல தனமாகக் கொண்டு முன்னேறவேண்டியது அவரவர் திறமை என்று எப்போது பிள்ளைகளுக்காகக் கலங்கும் பார்வதியைத் தேற்றுவார் கதிரேசன்.
நல்ல வேளையாக குடியிருக்கும் வீட்டை யாருக்கு உயில் எழுதி வைத்தார் என்பது ரகசியமாகவே இருக்கிறது.தானும் தன் துணையாளும் கடைசி நிமிடம் வரை தன் சொந்த நிழலில் இருக்க வேண்டும் என்பது அவரது ஆசை.பிள்ளைகளுக்கு ஒரு பொழுதும் சுமையாய் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதோடு இந்த நிமிடம் வரை இவர் தான் அவர்களுக்குத் துணையாக இருந்து வருகின்றார்.
இந்த நினைவுகளினூடே எப்படியோ கண்ணயர்ந்து போனார். வீட்டுத் தொலைபேசி தொல்லைபேசியாக மாறி இலித்துக் கொண்டிருந்தது.கதிரேசன் அவசர அவசரமாக எழுந்து வரவேற்பறைக்கு விரைந்தார்.பேரனை மடியில் கிடத்தியவாறு பார்வதி தொலைக்காட்சி தொடர் நாடகத்தில் லயித்துப் போயிருந்தாள்.அவளையும் குற்றம் சொல்வதற்கில்லை.பேச்சுத் துணைக்குக் கூட வேறு யாருமில்லா நிலையில் தன்னைத் தொல்லை செய்யாமலிருக்க அந்தத் தொலைக்காட்சி தெய்வம் போல் கைகொடுக்கிறது.இல்லையேல் அவளைத் தனியே விட்டுவிட்டு ஆலயம்,தமிழ் மன்றம் என ஒவ்வொரு நாளும் பொது சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இயலுமா?
அலறிய தொலைபேசியின் மறுமுனையில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் மகன் தான் பேசினான். “ நாங்க கே.எல்.ஐ.ஏ ஏர்போட்ல இருக்கோம்.வந்து பிக் ஆப் பண்ணிக்கங்க!சீக்கிரம் வந்துருங்கப்பா! மாமனாருக்கு உடம்பு ரொம்ப முடியலையாம்.அதான் பாக்கனும்னு சொன்னாங்க.கிழம்பி வந்துட்டோம்.சரிப்பா…எப்போதும் வெயிட் பண்ற இடத்துலயே வெயிட் பண்றோம் !” பதிலுக்குக் காத்திராமல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அதே சுவர் கடிகாரத்தைப் பார்த்தார். மாலை மணி நான்கை எட்டிப்பிடிக்க இரண்டு முட்களும் போட்டியிட்டுக் கொண்டிருந்தன.மீண்டும் நகைத்தபடி அடுத்த சில தினங்கள் என்னாகுமோ என்ற வினாவோடு அக்கடிகாரம் கதிரேசனை இரக்கத்தோடு பார்த்தது.மனைவியிடம் தகவலைச் சொன்னவர் மீண்டும் சாவியைப் பற்றினார்.அவான்சா அனைத்துலக விமான நிலையம் நோக்கிப் பயணித்தது.மகிழ்ச்சியும் அச்சமும் சரிபாதியாக கதிரேசனின் அகத்தையும் புறத்தையும் நிரம்பச் செய்திருந்தது.

முற்றும்

எழுதியவர் : தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ (21-Sep-18, 9:03 pm)
Tanglish : ooyvu
பார்வை : 234

மேலே