சுடரில் சூரியன்

வஞ்சனைக் கூட்டம் பெருகுது –அதன்
வன்முறை பரந்து விரியுது
கொஞ்சமோ தொல்லைகள் கொடுக்குது-தினம்
கொலைக்களம் காண துடிக்குது.

வாளைக் கையில் எடுக்குது –பலர்
வாழ்வை அதனால் முடிக்குது.
தேளாய் கொட்டி வதைக்குது –அதன்
கொடுமை நித்தமும் பெருகுது.

பாலியல் வன்முறை கூடுது-அதைப்
படித்திடும் நெஞ்சமோ பதறுது
வேலியே பயிரினை மேயுது –எனும்
வேதனை நெஞ்சினை அடைக்குது.

பணத்தைத் தேடி அலையுது –உயர்
பண்புகள் அதனால் தொலையுது
தணலைக் கொட்டி எரிக்குது-ஒரு
தறுதலை ஆகித் திரியுது.

விளையும் நிலத்தை பறிக்குது-அது
வீணாய் போயிட வைக்குது
களையென பொய்யரை வளர்க்குது-அதைக்
கண்டும் காணா திருக்குது.

நஞ்சினை மனதில் தெளிக்குது-பெரும்
நம்பிக்கை தன்னை தொலைக்குது
பஞ்சம் பெருகிட வைக்குது –பலர்
பசியால் அழிந்திட முயலுது.

காட்டை அழித்து கொழிக்குது-தன்
கண்ணியம் மறந்து விழிக்குது
வீட்டின் நிம்மதி அழிக்குது – பின்
வெந்தணல் கொட்டி எரிக்குது.


இருண்ட வாழ்வில் ஒளியினை –இனி
இயற்றி வைத்திடல் அவசியம்
மருண்டார் மகிழ்வு கொண்டிட –அவர்
மனதை மாற்றிடல் முக்கியம்.

சுடரொளி வெளிச்சம் போதுமோ –அது
துயரம் தொடைத்திடல் கூடுமோ ?
இடர்தரும் முட்களை நீக்கு –பின்
இனித்திடும் வாழ்வினை தேக்கு !

சுடரென ஒளிர்ந்தது போதும் –ஒரு
சூரியன் போலநீ மாறு !
படரும் இருளை அகற்று –நல்
பாதையை எடுத்துக் கூறு.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (25-Sep-18, 9:21 pm)
Tanglish : sudaril sooriyan
பார்வை : 110

மேலே