பங்காளியின் கடிதம்
பிறந்த மண்ணை பிறந்த நாட்டை
மதத்தைக் காரணமாக்கி விரட்டி அடிக்கப்பட்டோம்,
அல்லா ஒருவனே அறிவான் எங்கள் மனம் பட்ட வேதனையை,
எதற்கு இடம்பெயர்க்கப்பட்டோம்?
நாடு கடத்தப்பட்டோம்?
சில இரத்தவெறி பிடித்த மிருகங்கள் மனித வடிவில் நம்முள் நுழைந்ததாலே.
எஞ்சியவர் தங்கிட மிஞ்சிய வெறியர்களாய் நாங்கள் விரட்டப்பட்டோம் பங்காளிகளால்.
பகிர்ந்துண்ண, பகிர்ந்து வாழ விரும்பாத பங்காளிகள் மதத்தால் பகையாளிகளாய் மாறியே விரட்டி அடித்தார்கள் அநாதைகளாய்.
வீம்பு கொண்டோர் அழிக்கும் ஆயுதம் ஏந்த,
பகுத்தறிவு தெளிவு பெற்ற நானோ எழுதுகோலில் என் கண்ணீரை மையாக்கி மனச்சாட்சியால் எழுத்துகளாக்கி பங்காளிகள் மீது பாசமே உள்ளது,
பகையில்லை என்கிறேன்.
கேட்பவர்கள் யார்?
ஆயுதங்களின் பெருக்கம் அரசியலிற்கு துணை போக பங்காளிகளின் உயிர்கள் பறிக்கப்படுகிறது பல ஆண்டுகளாக.
எதற்காக சாகடிக்கிறோம்?
எய்யப்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் தான் அறியுமா?
பங்காளிகள் பாகம் பிரித்தாலும் பேராசையில் வரப்புகளைக் காவு கொள்ளும் போராட்டமாய்
உயிர்களை கொன்று குவிக்கிறோம் என்று அறியுமோ?
வெறிபிடித்த மிருகங்களுக்கு நவீனயுக ஆயுதங்கள்,
பங்காளிகள் உயிர்களை வேட்டையாட பாழும் நெஞ்சே உண்மை அறிவாயோ?