என் அறுபது வயது அழகிக்கு ஒரு அஞ்சலி...!
நடந்தும் கடந்தும் போன நாற்பது ஆண்டுகளாய்...
நிஜமாய்...நிழலாய்...என்தோள் தொட்டு...தொடர்ந்து...
ரணங்களையும் ரசித்து...,
மருந்துப் புட்டிகளோடு இருமலால் பேசும் என்னவள்,
வெள்ளைக் கூந்தல் அழகி...!
இல்லை இல்லை...,
வெள்ளிக் கூந்தல் அழகி...!
காதலென்று பெயர் சொல்லி...,
ஓடிப் போவதை கடிதமாய்ச் சொல்லி...,
இருபதாண்டு வளர்ப்பை...,
இருவரியில் முடித்து...,
ஊரார் அத்தனை பேரும் சுட்டுப் பேச...,
எங்களை விட்டுப் போனாள் மகள்...!
மகளை மறந்ததாய் ...,,
என்னிடம் மனதை மறைத்து...,
இத்தனை ஆண்டுகளாய் ...இரவு தோறும் அழுது...,
நான் கவனிக்காத அவள் தலையணை...,
கண்ணீரால் ஈரம்...!
உறைந்து போகையில் கூட...,
உணர்வுகள் குறைந்து போகையில் கூட...,
நசிந்து போகையில் கூட...,
உதட்டோரம் உயிர் கசிந்து போகையில் கூட...,
மனிதம் துறந்த மகளுக்காக என் கரம் அள்ளி...,
உயிர் பிரிகின்ற போதும் அவள் பெயர் சொல்லி...,
விட்டுப் போன அவளை எண்ணியே...,
என்னை தனிமை தணலில் இட்டுப் போனாள்...!
உணர்வோடு உயிர் விட்டு...,
விழியோர கண்ணீராய் வடிந்து போனாள்...!
தள்ளாடும் எனை விட்டு...,
அவள் மட்டும் முகரியை முடிந்து போனாள்...!
இறுதி அஞ்சலியாய் இருந்து இறந்துபோன அவளுக்கு...,
நானும் அறுபது வயது குழந்தை என்பது மறந்து போனதேன்...?