அறமறந்து போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே – நாலடியார் 32
நேரிசை வெண்பா
ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறமறந்து
போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாள்கள்
சென்றன செய்வ(து) உரை. 32
- அறன் வலியுறுத்தல், நாலடியார்
பொருளுரை:
தாழ்ந்த தன்மையையுடைய நெஞ்சமே! நாம் இவ்வளவு விரைவில் இறந்துபோக மாட்டோம் என்றெண்ணி, அறத்தை மறந்து பொருளை விரும்பி முயன்று நாம் மேலும் மேலும் பெருஞ் செல்வராவோம் என்று இடைவிடாமல் தொழிலில் நிலையாயிருந்து முயன்று நீ நினைத்தபடியே வாழ்கின்றாய் என்றாலும், நின் ஆயுள் நாட்கள் இதோ கழிந்துவிட்டன.
மறுமைக்காக இனி நீ என்ன செய்யப் போகிறாய் என்று சொல்! என்கிறார் இப்பாடலாசிரியர்.
கருத்து:
பொருள்வாழ்வு முதன்மையன்று; அறவாழ்வே முதன்மையானது.