கடல் நீர்
மீன்கள் சிந்திய
கண்ணீரா? இக்
கடல்நீர்!
மீனவனின்
வியர்வைத் துளிகளின்
சேகரிப்பா? இக்
கடல்நீர்!
பிறகு ஏன்?
இவ்வளவு
உப்பு கரிக்கிறாய்!
நீர் மட்டும்
நீர்(ஆ)க இருந்தால்
அது
பேரழகு!
ஆனால் உன்
நீர் மட்டம் உயர்ந்தால்
அது
பேரழிவு!
கடல் நீரே
நீர் மட்டும்
கரி நீராயில்லாமல்
நன் நீராயிருந்திருந்தால்
அதானிகளுக்கும்
அம்பானிகளுக்கும்
என்றோ ?
விலை போயிருப்பாய் !
உன்
குருதி (நீர்)
உரியப்பட்டிருக்கும்...
குப்பியில்
அடைபட்டிருப்பாய்...
ஒரு குப்பி
பத்து ரூபாய் வீதம்
விலை போயிருப்பாய்...
எங்கள் ஊரில்
என்றோ
இருந்து
ஊரினுள்பாய்ந்தது
ஊரெல்லாம்
வளம் கொழித்து
சென்ற
ஆறுகள் பலவும்
இன்று
இருந்த இடம்
தெரியாமல்
இறந்து போன
நிலைதான்
உனக்கும்
ஏற்பட்டிருக்கும்...
ஏ கடல் நீரே !
நீ
கரிநீராய் உள்ளவரையே
உனக்கு நல்லது...
இல்லையேல்
நீயுமொரு
காணல் நீர்..
இல்லை இல்லை
காணாமல் போன
நீர்!