இரண்டு வருட சிறைக்கைதியாய்

தூர தேச வாழ்க்கை
தொலைவில் பார்ப்பவனுக்கு என்னவோ அது பவுசு
வெளிநாட்டு வாழ்க்கைக்கு எப்பவும் ஒரு மவுசு
அங்கு வாழ்வதெல்லாம் என்னவோ பாரம் கொண்ட மனசு
ஒவ்வொரு மனசும் தாய் மடி தேடும்
ஒவ்வொரு இதயமும் தந்தை முகம் தேடும்
ஒவ்வொரு மனிதனும் தாய்மண்ணை தேடுவான்

தூர தேசத்தில் இந்தியன்
ஒருவனை எதிரே கண்டால்
எந்த மாநிலக்காரன் என்றாலும்
அன்று புதிதாய் பார்த்தவன்
அந்த ஒற்றை நொடியில்
இவனின் சகோதரன் ஆகிறான்
அதுவும் தமிழனை கண்டால்
தன் பங்காளியைக் கண்டதுபோல
மச்சி என்று தோள் சேர்ப்பான்

அம்மா முகம் அருகில்
இல்லாவிட்டாலும் கூட
அலைபேசி திரையிலாவது
அவள் முகம் பார்த்து
ஒரு மணி நேரம்
பேசிப் பேசி
ஆசைத் தீர்த்து
ஆறுதல் கொண்டு
அலைபேசி அணைத்து
அரை மணி நேரம்
கழித்து மீண்டும்
அவள் முகத்தை
தேடும் நினைவலைகளை
என்ன செய்வான்

தோசை சுட்டுக்கொண்டே
நல்லா இருக்கியா தம்பி
என்று கேட்கும் அம்மாவிடம்
நல்லா இல்லாத போதும்
நல்லா இருப்பதாக சொல்லியே
பழக்கப்பட்ட நாக்கு
நல்லா இருக்கிறேன்மா என்று
சொல்லி தன கடன் முடிப்பது
எத்தனையோ இரவுகளின்
வெளிச்சம் தீட்டமுடியாத
மெல்லிருட்டைபோல நிதர்சனம்

தூர தேச மனைவி
கழுத்தில் தாலியோடும்
கனத்த ஆசையோடும்
இந்த திருவிழாவுக்காவது
கட்டாயம் வரணும் என்று
அடம்பிடிக்கும் போது
விடுமுறை எல்லாம்
இல்லைன்னு கத்தி
போடி என்று அலைபேசியை
வைத்த பின்னாலே
விடுமுறையில் திருவிழா
போனால் எப்படி இருக்கும்
என்று நப்பாசையில் தன்னை அறியாமல்
அசைபோடும் ஆசைகளை
அவனணுக்களின் ஓசைகளை
யாரிடம் சொல்வான்

அடித்து பிடித்து எப்படியோ
வருடம் கடந்து வாங்கி
வரும் விடுமுறையில்
பை நிறைய சாக்லேட் நிறைத்து
பல்லைக் காட்டிக்கொண்டு
வந்து இறங்கி பவுசு காட்டி
வண்டி எடுத்து ஒவ்வொரு
சொக்காரன் வீடாய் தலை காட்டி
குல தெய்வம் கோவிலில் நேர்த்தி செலுத்தி
இன்னும் எத்தனை நாட்கள்
என எண்ணி எண்ணி
நாட்குறிப்பை கிழிக்கும்
கடைசி வாரத்தின் ஒவ்வொரு
நாட்களும் அவனும்
பிரசவ வலிக்காரன் தான்

பை எடுத்து
தாடி மழித்து
ஜீன்ஸ் போட்டு
சொக்கா மாட்டி
பாதி சிரிப்பும்
மீதி சோகமுமாய்
தாய் முகம் நேசத்தோடு முகர்ந்து
மனைவியின் விக்கல் கலந்த
முத்தம் பெற்று
விவரம் அறியா மழலைககளுக்கு
மழையென முத்தம் பொழிந்து
தோளிலிருந்து மெல்ல இறக்கி
மனைவி கையில் திணித்து
நகர்ந்து செல்கிறான்
நத்தையென ஊர்ந்து
நரகத்தை நோக்கி

தோளில் போட்ட
பையை தூர வீசி
திரும்பி ஓடிவரத்
தோன்றும் சிறுவனாய்
அழுதிடும் மனதை
அவன் வெளி காட்டியதே இல்லை
அவன் தான் ஆண்மகன் ஆயிற்றே
அவன் தான் அப்பா ஆயிற்றே

மேகங்களுக்குள் திரண்டிருக்கும்
நீரைப்போல அவனுக்குள்
உறைந்திருந்த கண்ணீர்த்துளிகள்
தலையணை நனைத்து
உறங்கிய அந்த இரவு கடந்து
போன விடிகாலையில் அவன் இருப்பான்
இன்னொரு ஊரில் அகதியாய்
இரண்டு வருட சிறைக்கைதியாய் .

எழுதியவர் : யாழினி வளன் (18-Oct-18, 10:00 pm)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 158

மேலே