உருவம் தவிர்
உருவம் தவிர்!!!!
==================================
ஒரு நாள் ஒரு யானை நட்புக்கொள்ள நல்ல நண்பர்களை தேடி காட்டிற்குள்
அலைந்தது.வழியில் குரங்கு ஒன்றை பார்த்தது. குரங்கிடம் என்னை நண்பனாக ஏற்றுக்கொள் என்றது.அதற்கு குரங்கு உன்னால் என்னைப் போன்று மரத்திற்கு மரம் தாவ முடியுமா நீ மிகப் பெரிய உருவமாக உள்ளாய் .உன்னை நண்பனாக ஏற்றுக் கொள்ள முடியாது போ போ என்றது.
யானை அடுத்ததாக வழியில் முயலைக் கண்டது.என்னை நண்பனாக ஏற்றுக்கொள் என்று முயலிடம் கூறியது.அதற்கு முயல் உன்னால் என் வளைக்குள் வந்து என்னோடு விளையாட முடியாது.நீ மிகப் பெரிய கருத்த உருவமாய் உள்ளாய் உன்னை என் நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது போ போ என்றது.
அடுத்ததாக வழியில் மானைப் பார்த்தது.மானே என்னை நண்பனாக ஏற்றுக்கொள் என யானை கேட்டது.அதற்கு மான் என்னைப் போன்று உன்னால் வேகமாக ஓடி விளையாட முடியாது .மிகப் பெரிய உருவமாய் இருக்கிறாய் போ போ என்றது.
கடைசியாக நரியைப் பார்த்தது என்னை நண்பனாக ஏற்றுக்கொள் என கேட்டது.மன்னிக்கவும் நீ மிகப் பெரிய உருவமாக உள்ளாய் உன்னை நண்பனா ஏற்றுக்கொள்ள முடியாது போ போ எனக் கூறியது.
மறுநாள் எல்லா விலங்குகளும் பதறி அடித்து ஓடி ஒளிந்ததை யானைப் பார்த்தது.வழியில் ஓடிய கரடியை நிறுத்தி ஏன் எல்லோரும் இப்படி பயந்து ஓடுகிறார்கள் எனக் கேட்டது.அதற்கு கரடி இந்த காட்டில் புலி ஒன்று உள்ளது.அது இங்குள்ள விலங்குகளை எல்லாம் கொன்று கொன்று விழுங்குகிறது.எங்களை காப்பாற்றிக் கொள்ளத்தான் ஓடுகிறோம் என்றது
இதற்கிடையில் புலி ஏதோ ஒரு விலங்கைக் கொன்று லபக் லபக்கென முழுங்கிக் கொண்டிருந்தது.யானை புலியிடம் சென்று பாவம் இந்த விலங்குகள் அவற்றைக் கொள்ளாதே என்றது.அதற்கு புலி மரியாதையாக உன் வேலையைப் பார்த்துக் கொண்டுப் போ நீ யார் எனக்கு புத்திமதி கூறுவது.நான் இந்தக் காட்டிற்கே ராஜா என காடே அதிரும்படி உறுமியது.
யானை புலி கூறியதை பொருட்படுத்தாமல் உடனே தனது பெரிய காலால் புலியை ஓங்கி எட்டி உதைத்தது.அடி வாங்கிய புலி பயந்து விட்டால் போதுமென்று அந்தக் காட்டை விட்டே ஓடியது
புலி ஓடிய மகிழ்ச்சியான செய்தியை யானை எல்லா விலங்குகளிடமும் கூறியது.எல்லா விலங்குகளும் யானைக்கு நன்றி கூறி அதனுடன் நட்புக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தன.உருவத்தில் என்ன உள்ளது.உள்ளம்தான் முக்கியம் !!!!!