ஒழிந்தாரைச் சிரித்து ‘போற்றி நெறிநின்மின்’ என்று சாற்றுங்கொல் – நாலடியார் 49
நேரிசை வெண்பா
கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து. 49
- தூய்தன்மை, நாலடியார்
பொருளுரை:
இறந்துபோனவரது எரிக்கப்பட்ட தலை ஓடு பார்த்தவர் மனம் அஞ்சும்படி உட்குழிந்து ஆழ்ந்த கண்ணிடங்களையுடையனவாய் இடுகாட்டில் தோன்றி, இறவாதிருக்கும் மற்றவரை ஏளனமாக நகைத்து இவ்வுடலின் இயல்பு இப்படிப்பட்டது அறத்தைக் கடைப்பிடித்து அவ்வழியில் நில்லுங்கள் என்று சொல்லும் போலும்!
கருத்து:
அறம் கடைப்பிடித்து அந்நெறியில் நிற்க வேண்டும்.
விளக்கம்:
இடுதலை என்பதில், இடுதல் நெருப்பிலிடுதல் என்னுங் கருத்துடையது; இடுகாடு எனப்பட்டதும் இப்பொருட்டு. ‘ஒழிந்தாரைச் சிரித்துச் சாற்றுங்கொல்' என்று கொள்க. கழிந்தார் என முன் வந்தமையின் ஒழிந்தார் இனி இறக்கவிருப்பார் மேல் நின்றது. இயல்பு கூறுதலின் ‘இற்று'1 எனப்பட்டது.