மானார் தமது சிரத்துக்கு அணி கூந்தலே – அணியறுபது 29

நேரிசை வெண்பா

கோலமத யானைக்குக் கொம்பே அணி;;சிறந்த
நீலமயி லுக்கணிநீள் தோகையே; - ஆல
மரத்துக் கணிவிழுதே; மானார் தமது
சிரத்துக் கணிகூந்த லே. 29

- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

கொம்பு மதயானைக்கு அழகு தோகை மயிலுக்கு அழகு; கிளை விழுதுகள் ஆலமரத்துக்கு அழகு; கூந்தல் மகளிர் சிரத்துக்கு அழகு ஆகும்.

சீவ சிருட்டிகள் யாண்டும் அதிசயமான நீண்ட காட்சிகள் உடையன. உற்ற உறுப்புக்களால் ஒவ்வொன்றும் சிறப்பான மாட்சிகளைப் பெற்றிருக்கின்றன. செறிந்து விரிந்த தோகையும் நீல நிறமும் அழகிய தோற்றமும் வளமாய் மருவியுள்ளதால் மயிலை உயர்குல மாதர்க்கு உவமை கூறுவது இயல்பான கவி மரபாய் வந்துளது.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ? கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. 1081 தகையணங்குறுத்தல்

பேரழகுடைய மங்கைக்கு மயில் இதில் ஒப்பாயுள்ளது.

மயிலுடைச் சாயலாள் என்று சீதை இவ்வாறு தெரிய வந்துள்ளாள். வனவாச காலத்தில் சீதையை பிரிந்த பின், இராமன் தம்பியுடன் மதங்கமலைச் சாரலை அடைந்தான். அங்கே மயில்கள் உலாவுவதைக் கண்டான். தனது அருமை. மனைவியை நினைந்து மயில்களை நோக்கிப் பரிதாபமாய்ப் பேச நேர்ந்தான்.

மயலோடு உரையாடியிருக்கும் முறையை ஒரு சிறிது அயலே அறிய வருகிறோம்.

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

ஓடா நின்ற களிமயிலே!
சாயற்(கு) ஒதுங்கி உள்அழிந்து
கூடா தாரின் திரிகின்ற
நீயும் ஆகம் குளிர்ந்தாயோ?
தேடா நின்ற என்உயிரைத்
தெரியக் கண்டாய்! சிந்தையுவந்(து)
ஆடா நின்றாய் ஆயிரம்கண்
உடையாய்க்(கு) ஒளிக்கும் ஆறுண்டோ?

- (இராமா: 4: 1: 26) பம்பை வாவிப் படலம், கிட்கிந்தா காண்டம்

எனது மனைவியின் உருவ அழகுக்குத் தோல்வியடைந்து பருவரலோடு உள்ளம் புழுங்கியிருந்த மயிலே! இப்பொழுது அவள் பிரிந்து போனதை நினைந்து உவந்து திரிகிறாய்!

என் உயிர் அனைய அவளை நீ நேரே கண்டிருப்பாய்! ஆயிரம் கண்களை உடைய நீ காணாமல் இருக்க முடியாது; அவள் போயுள்ள இடத்தை எனக்குக் கொஞ்சம் சொல்ல மாட்டாயா? என்று கெஞ்சிக் கேட்டிருக்கின்றான். பிரிவின் பரிதாபத்தால் உள்ளம் கலங்கிப் பித்தனைப் போல் பிதற்றியுள்ளான். அந்த உண்மையை இங்கே உய்த்துணர்ந்து கொள்கிறோம். தோகையில் தொடர்ந்து படர்ந்துள்ள எழிலான விழியுருவங்களை ஆயிரம் கண் உடையாய்! எனப்பட்டது.

ஆலமரம், விழுதுகளால் மேன்மையடைந்துளது கீழேயுள்ள பாடலில் சொல்லப்படுகிறது. .

இன்னிசை வெண்பா

சிதலே தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
குதலைமை தந்தைகண் தோன்றின்தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும். 197 நாலடியார்

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

நைந்தடி யற்ற ஆலம்
..நடுங்கிவீழ் கின்ற(து) என்று
வந்தவீழ் ஊன்றி வீழா
வகைநிலை விளக்கு மாபோல்
மைந்தர்கள் தமக்குள் நல்ல
அறிவினால் மகிழ்ந்து சேர்ந்து
தந்தையைத் தளரா வண்ணம்
தாங்குவர் தவத்தின் என்றான்; (இராமாயணம்)

ஆலுக்கு விழுதுகள் ஆதரவு புரிந்து வருதல் போல் தந்தைக்கு மைந்தர்கள் முந்துற உவந்து வந்து உதவி புரிவர் என இவை உணர்த்தியுள்ளன.

கோதையர் எனக் கூந்தலைக் கொண்டே மாதரைக் குறித்து வருதலால் பெண்மைக்கு அணியாய் அது மருவியுள்ள உரிமை அறியலாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-18, 1:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே