தமிழ் மின்னிதழ்

வந்தோரை வாழ வைக்கும் பூமியாக பண்டு தொட்டு தமிழ் மண் இருந்து வந்துள்ளது. சங்கப்பாடல்கள் பகரும் காட்சியில் யவனரும், சீனரும், இன்ன பிற ஆரிய இனத்தவரும் கலந்து உருவாக்கிய ஒரு சீர்மிகு பண்பாடு காட்சிப்படுகிறது. வேதஒலி விண்ணைப்பிளக்கும் அளவிற்கு மதுரை வீதிகளில் ஒலித்ததை சில பாடல்கள் செப்புகின்றன. அதே நேரத்தில் இறை மறுக்கும் தத்துவங்களுக்கும் அன்று தொட்டு இன்றுவரை ஆதரவும் இருந்திருக்கிறது. ஆரியமும், தமிழும் ஆரோக்கியமான சூழலில் தமிழின் தனித்தன்மையைப் பாதிக்காத வண்ணம் கூட்டுறவு கொண்ட நிலை அறியப்படுகிறது. யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்ற சீரிய தமிழர் பாங்கு பின்னால் இந்திய தேசியம் உருவான போது ஒரு model state என்று சொல்லுகின்ற அளவில் இருக்க உதவியது. இச்சூழலை சமகால அறிவியல் கண்டுபிடிப்புகளும் (மனித மரபியல் ஆய்வுகள்) அப்படியே படம் பிடிக்கின்றன. பின்னால் சேர, சோழ ஆட்சிக்காலங்களில் தென்னக மக்களுடன் (கலிங்க, ஆந்திர, கேரள) ஆன உறவு வலுப்பெற்றது. சரபோஜி வம்சத்தினர், சௌராஷ்டிர மக்கள் போன்றோர் எப்படி வேளிர் குடி சங்க காலத்தில் குடிபெயர்ந்ததோ அதே போல் பின்னால் வந்து இம்மண்ணில் நிலைக்கின்றனர். இந்தியாவையும் தாண்டி தமிழர்களின் ஊடாடல் தென்கிழக்கு, தூரக்கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. பரிணாமவியல் கூற்றுப்படியும், கலாச்சார பரிமாணத்திலும், ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதைத்தமிழ் மரபு இன்றளவும் தன்னுள் தக்கவைத்துள்ளது. இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட தமிழ் மரபை ‘உள்ளது உள்ளபடி’ அறிந்து, அதைப்பேதமின்றிப் போற்றி, இணைய வெளியில் பாதுகாக்க உருவான ஓர் முயற்சி ‘தமிழ் மரபு அறக்கட்டளை’. அதன் குரல்வளையாக செயல்படுகிறது, ‘மின்தமிழ்’ எனும் மடலாடற்குழு. மின் குழுமம் தரும் வாய்ப்பை முழுவதும் பயன்படுத்தி வெறுப்பற்ற, ஆரோக்கியமான சிந்தனைகளை சுதந்திரத்துடன் வெளியிடும் குழுமம், ‘மின்தமிழ்’. இக்குழுமத்தில் விவாதிக்கப்படும் கருத்துக்கள் குழு உருப்பினர்களின் தனிச்சுற்றுக்கு வரும் தனிப்பட்ட கருத்துக்கள். இதற்கு தமிழ் மரபு அறக்கட்டளை முழுப்பொறுப்பும் ஏற்காது. ஆயின் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்பாட்டை வெளியிடவும், அதை ஊக்குவிக்கவும் மின்தமிழ் தளம் பயன்படுத்தப்படும். தமிழ் மரபின் மீது, தமிழ் மொழியின் மீது, அதன் நீண்ட சரித்திரத்தின் மீது ஆர்வமுள்ளவர்கள், அதன் வளங்களை மின்வெளியில் பாதுகாக்கும் திறனுள்ள கணிப்பொறியாளர்கள் இக்குழுவில் வரவேற்கப்படுகின்றனர். இதன் இயக்கம் பெரும்பாலும் தமிழில் இருந்தாலும் ஆங்கில, பிற ஐரோப்பிய மொழிகளிலும் அவ்வப்போது மடல்கள் வருவதுண்டு. பொறுப்புள்ள தமிழ்ச்சமுதாயம் அமையவும், உலக அளவுச்சிந்தனை கொண்ட ஒரு திறந்த மனப்போக்கு வளரவும் மின்தமிழ் செயல்படும். நாளையத் தமிழர்களுக்கான இன்றைய செயற்பாடு மின்தமிழ். வருக! வளம் சேர்க்க! பயன்பெறுக

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளியாகும் மின்னிதழான ’தமிழ்’ நேற்று பிரசுரமாகியிருக்கிறது. இதை பரீக்‌ஷா ஞாநி வெளியிட்டிருக்கிறார். வெளியீட்டு விழாவும் இணையத்திலேயேதான்

இணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக இணையதளம் என்பதே இணையஇதழாக இங்கே கொள்ளப்படுகிறது. ஆனால் இவ்விதழ் இணையம் மூலம் வாசிக்கக் கிடைக்கும் இதழ்.தரவிறக்கம் செய்தோ நேராகவோ வாசிக்கலாம்

ஏற்கனவே வெளிவந்த சில இணையஇதழ்கள் கணிசமான பங்காற்றியிருக்கின்றன. குறிப்பாக சொல்வனம் இதழ் தமிழ் இணையஇதழ்களில் முக்கியமானது என நினைக்கிறேன் பதாகை என்ற இணைய இதழும் குறிப்பிடத்தக்கது.

இணைய இதழ்கள் பல உற்சாகமாக ஆரம்பிக்கப்பட்டு காலப்போக்கில் வாசகர்கள் இல்லாமலாகின்றன. இணைய இதழின் ஒரு சாதக அம்சமே பாதகமாகவும் ஆகிவிடுகின்றது என்பதே காரணம். இணைய இதழுக்கு அச்சிதழ்போல பக்க வரையறை ஏதுமில்லை. ஆகவே அதில் எவ்வளவு வேண்டுமென்றாலும் பிரசுரிக்கலாம். மறக்கப்படும் விஷயம் என்னவென்றால் வாசகர்களுக்கு வாசிப்புக்கான வரையறை உண்டு என்பதே.

ஆகவே பெரும்பாலான இணைய இதழ்களில் எதுவும் வெளியாகும் என்ற நிலை உள்ளது. அதை ஆசிரியர்கள் வாசிப்பதில்லை. அதில் ஒரு தேர்வு இல்லை. விளைவாக ஏராளமான தரமற்ற பக்கங்கள் முன்வைக்கப்படும்போது வாசகன் காலப்போக்கில் சலித்து விலகிவிடுகிறான்

எந்த இதழிலும் அதன்பின் உள்ள ஆசிரியருக்கு என ஓர் ஆளுமை தேவை. அவரது ரசனை, நேர்மை போன்றவற்றை வாசகன் நம்பவேண்டும். அதிலுள்ள படைப்புகள் முதன்மையாக அவ்வாசிரியரால் பரிந்துரைக்கப்படுபவையாக இருக்கவேண்டும். அந்த அடிக்கோடுதான் உண்மையில் வலைத்தளங்களில் பிரசுரம் பெறுவதற்கும் இணைய இதழில் பிரசுரம் பெறுவதற்குமான வேறுபாடு

இவ்வகையான ஒரு கறார் தன்மையை இணையத்தில் கடைப்பிடிப்பதும் கடினம். பொதுவாக இணையம் ஒரு நட்பு வெளி. [சரி, பகைவெளியும் கூடத்தான்] நட்பு கொடுக்கும் கரிசனங்களுக்கு அப்பால் சென்று கறாரான மதிப்பீடுகளைக் கொண்டு தேர்வுகள் நடந்த்தப்பட்டாகவேண்டும். அதுவே அதில் எழுதுபவர்களுக்கும் நல்லது

தமிழ் மின்னிதழ் அவ்வகையில் ஒரு நற்பெயரை ஈட்டிக்கொள்ளும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்

ஜெ
மின்னஞ்சல்

எழுதியவர் : (23-Oct-18, 5:25 pm)
பார்வை : 96

மேலே