ஆசை பேராசை

ஆசை பேராசை

உன்னிரு விழிகளைப்
பார்க்கத் தவித்துப்
பார்த்திருக்க ஆசை...!
பின் பாராதிருந்தே
தவித்திடவும் ஆசை...!

உன்னோடு மட்டுமே
பேசத் தவித்துப்
பேசி விட ஆசை...!
பின் பேசாதிருந்தே
தவித்திடவும் ஆசை...!

கிஞ்சுகவாய் அஞ்சுகங்கள்
கொஞ்சிட, நாம் குதூகலித்து
மஞ்சுதாவு மானினம்நாணக்
கிஞ்சித்தும் வெளியின்றியுனை
நெஞ்சோடணைக்க ஆசை...!

உன் பவளவாயாழிதனுள்
எந்நாவிதழால் சுழியோடிக்
காதல் கள்மயக்கத்தில்
மூழ்கி முக்குளித்து
முத்தெடுக்க ஆசை...!

வீணையாய் நீயிருக்க
மேவும் விரல் நானாகி
மோனமாயொரு ராகம்
மீட்டியந் நாதமதில்
மீள்துயிர்க்க ஆசை...!

வேராக இருந்தநீ
விண்மீனாய்ப் போயிடினும்
பெண்ணேயுன் நிழலோடு
போராடியேனு மிவை
பெற்றுவிடப் பேராசை...!
~ தமிழ்க்கிழவி(2018)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (25-Oct-18, 10:18 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 647

மேலே