அவனும் நானும்-அத்தியாயம்-16

....அவனும் நானும்.....

அத்தியாயம் : 16

ஹோலில் அமர்ந்து மும்முரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தவர்கள்,கீர்த்தனாவின் அரவம் தெரியவும் மௌனம் காத்துக் கொண்டார்கள்...இதே வேறொரு நாளாக இருந்திருந்தால் தன் பெற்றோர்களின் முகத்தினில் குடியிருந்த கவலையினை அவளும் கவனித்திருப்பாளோ என்னவோ...அன்று கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே செல்ல வேண்டிய பரபரப்பில் இருந்ததால் அவள் அதைக் கவனித்திருக்கவுமில்லை...

"என்னம்மா இவ்வளவு ஏர்லியாக் கிளம்பிட்ட..??.."

"ஒன்பது மணிக்கு முன்னாடி போய் அசைன்மென்ட் சப்மிட் பண்ணனும் பா..."

அவள் அதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அஸ்வின்னும் அங்கே தயாராகி வந்து சேர்ந்தான்..

"நீ எங்கடா கிளப்பிட்ட..??..."

"கொஞ்சம் ப்ரொஜெக்ட் வேலை இருக்கு மா...நைட் வரவும் லேட்டாகும்...நீங்க எனக்காக காத்திட்டிருக்காமல் சாப்பிடுங்க...சரியா..??.."என்றவன் அப்போதுதான் கீர்த்தனாவைக் கவனித்தவனாய்,

"ஆமா நீ எங்கடி ஏழு மணிக்கெல்லாம் ரெடியாகி நிக்கிற...எப்பவுமே உனக்கு விடியுற நேரமே எட்டு மணிதானே..இன்னைக்கு மட்டும் என்ன புதுசா இவ்வளவு அதிகாலையிலேயே எழும்பிட்ட.??.."என்று அவன் அவளைக் கேலி செய்யவும்,

"ஏன் உனக்கு மட்டும்தான் வேலை இருக்குமா...எங்களுக்கெல்லாம் வேலை இருக்காதா..??.."என்று அவள் பதில் சண்டைக்குத் தயாராகவும் இடையில் குறுக்கிட்ட பார்வதி,

"கடவுளே...இரண்டு பேரும் காலையிலேயே ஆரம்பிக்காமல் சீக்கிரமாய் கிளம்புற வழியைப் பாக்குறீங்களா..."

"ஹலோ மிஸஸ் ராகவன் உங்க பையன்தான் முதல்ல ஆரம்பிச்சான்...அவனை முதல்ல பேசாமல் போகச் சொல்லுங்க..."

"ஆமா இவ பெரிய மகாராணி...இவ சொன்னால் நாங்க அதைக் கேட்டுக்கனுமாக்கும்..."

அவர்கள் அப்படியே பதிலிற்கு பதிலென்று சண்டையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே சென்றதில்,ஏற்கனவே லேசாக ஆரம்பத்திருந்த பார்வதியின் தலைவலி இன்னும் அதிகரித்தது...ஆனால் ராகவனோ அவர்கள் சிறுபிள்ளைகள் போல் போட்டுக் கொண்டிருந்த சண்டையினை ரசித்துப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்...

இவர்களின் சண்டையை எப்படி நிறுத்துவதென்று தெரியாது முழித்துக் கொண்டிருந்த பார்வதிக்கு அவரின் முகத்திலிருந்த புன்னகையைக் கண்டதும் தலைவலி கூட இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது...இந்த ஒரு வார காலமாகவே ராகவனின் மனம் என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கின்றதை அவர் மட்டுமாகவே அறிவார்...தன்னையே மறந்து அவரின் சிரிப்பினையே பார்த்து தனக்குள் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தவர் அஸ்வின்,கீர்த்தனாவின் கேலியில் விழித்துக் கொண்டார்...

"இங்க பார்த்தியா கீர்த்து...நம்ம சண்டைக்குள்ளேயும் அம்மாவோட ரொமான்ஸை..."

"பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன்..."

ஆனால் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ராகவனோ பார்வதியைக் கவனித்திருக்கவில்லை...அவர்களின் கேலியிலேயே திரும்பி மனைவியைப் பார்த்தார்,ஏற்கனவே பிள்ளைகளின் கேலியில் முழித்துக் கொண்டிருந்தவர்,ராகவனின் அந்தப் பார்வையில் வெட்கம் வந்து அவரை அள்ளி அணைக்க என்ன செய்வதென்று தெரியாது அவர் முழிக்க ஆரம்பிக்கவும் ராகவன் அவருக்கு ஆதரவாய் கைகொடுத்தார்...

"ஆமா நீங்க இரண்டு பேரும் என்ன சீக்கிரமாய் கிளம்பனும்னு சொல்லிட்டு இன்னும் இங்கேயே நின்னு அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க...கிளம்புங்க...கிளம்புங்க.."

"என்ன பா அம்மாக்கு சப்போர்ட்டா...??சரி வா அண்ணா கிளம்பிடலாம்...இதுக்கு மேலேயும் இங்கேயே இருந்தால் அப்பாவே நம்மளை துரத்திடுவார் போலிருக்கு..."என்றவள் அதற்கு மேலும் தாமதிக்காமல் அண்ணணையும் அழைத்துக் கொண்டு வெளியேறிவிட்டாள்...

அவர்கள் இருவரும் வெளியேறியதுமே பார்வதி சமையற்பக்கமாய் செல்வதற்கு முனையவும்,அவரின் கரத்தினைப் பிடித்து தன் பக்கமாய் இழுத்துக் கொண்டார் ராகவன்...அவர் இழுத்த இழுப்பில் தடுமாறி அவர் மேலே அப்படியே விழுந்தவரிற்கு நிமிர்ந்து பார்க்கக்கூட முடியாமல் வெட்கம் வந்து அவரை முழுவதுமாய் அரவணைத்துக் கொள்ள,விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார் அவர்...

"அது எப்பிடிடீ கல்யாணத்தன்னைக்கு எப்படி வெட்கப்பட்டியோ,அதே மாதிரியே இப்போவரைக்கும் என்கிட்ட வெட்கப்பட்டிட்டே இருக்க...??..."

அவர் அப்படிக் கேட்டதும் லேசாக விழியுயர்த்தி அவரைப் பார்த்தவர்,

"ஏன்னா அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி என்னை வெட்கப்பட வைக்கத்தான் நீங்க இருக்கீங்களே..."என்று அதே வெட்கத்தோடே சொல்லி முடித்தவர் வெட்கத்தை மறைத்திட அவரின் நெஞ்சிலேயே மீண்டும் ஒன்றிக் கொண்டார்...

அவளது பதில் அவருக்குள் எப்போதும் போல் இப்போதும் ஓர்வித கர்வத்தினை ஏற்படுத்த அவரை அப்படியே மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார்...அந்தவொரு விநாடியில் அவர் மனதில் இத்தனை நாட்களாய் குடியிருந்த கவலைகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போனது...

கல்லூரியில் அவளை அஸ்வின்னே விட்டுச் சென்றிருந்ததால் விரைவிலேயே கல்லூரியினை வந்தடைந்திருந்தாள் கீர்த்தனா...அவளது மனம் தன் தந்தைக்கும் தாய்க்குமிடையிலிருந்த ஆழமான காதலையே எண்ணிக் கொண்டிருந்தது...காதலிற்கு வயதில்லை என்பதையே அவள் அவர்களுக்கிடையிலிருந்த ஆழமான காதலை உணர ஆரம்பித்த பின்னர்தான் அறிந்து கொண்டாள்...

நம்மில் பலரின் காதலிற்கு முன்னுதாரணமாய் இருப்பதே நம் பெற்றோர்கள்தான்...ஆண்கள் என்றால் தன் அன்னையைப் போல் ஓர் மனைவியை எதிர்பார்த்திருப்பார்கள்...பெண்கள் என்றால் தன் தந்தையைப் போன்ற கணவனை எதிர்நோக்கியிருப்பார்கள்...அதில் அவளும் விதிவிலக்கல்ல...

அவளுக்குள்ளும் இது போன்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் அதிகமாகவே இருக்கின்றன...ஆனாலும் அவள் எப்போதுமே நினைத்துக் கொள்வது இது ஒன்றைத்தான்...அவளின் அன்னையைப் போலவே அவளும் அவளுக்கு மட்டுமே சொந்தமான ஒருவனின் பார்வைக்கு மட்டுமாய் வெட்கத்தில் தலை குனிய வேண்டும்...அந்த வெட்கத்தினை மறைத்துக் கொள்ள அவனின் மார்பிலேயே சரணடைந்து கொள்ள வேண்டும்...அப்போது அவளுக்கு மட்டுமாகவே கேட்கும் அவனின் இதயத்துடிப்பினை அவள் உணர ஆரம்பிக்கும் அந்தவொரு விநாடியில் அவனொருவனின் காதல் அவளின் இருதயத்தினை ஊடுருவிச் செல்ல வேண்டுமென்பதே அவளின் ஆசையாகும்....

அவ் ஆசையினை மீண்டும் ஓர் முறையாய் மீட்டிப் பார்த்துக் கொண்டவளிற்கு அந்தவோர் நினைப்பிலேயே உடலெங்கும் புல்லரிக்க,முகத்தினில் புன்னகையோ பூவாய் மலர அந்தக் குதூகலத்தோடே விரிவுரை மண்டபத்தினுள் நுழைந்து கொண்டாள்...ஆனால் அந்தக் குதூகலம் எதிரினில் வந்த சௌமியைக் கண்டதுமே இருந்த இடம் தெரியாமல் காணாமற் போனது...

அன்றைய அந்த நிகழ்விற்குப் பின் கீர்த்தனாவை அவள் முழுதாகவே தவிர்க்கத் தொடங்கியிருந்தாள்...ப்ரீத்தியின் முன்னால் மட்டும் எதையும் காட்டிக் கொள்ளாதவள்,தனிமையில் அவளைக் கண்டுகொள்வதேயில்லை...கீர்த்தனாவிற்கும் சௌமியின் கோபத்தின் அளவு தெரிந்திருந்ததால் இரண்டு மூன்று நாட்களில் அவள் சமாதானமாகி விடுவாள் என்றுதான் நினைத்திருந்தாள்...ஆனால் இப்போதும் அவள் அறிமுகமற்ற பார்வையினையே அவளை நோக்கிப் பார்த்து வைக்கவும்,வரவா என்று துடித்துக் கொண்டிருந்த கண்ணீரை அடக்கியபடியே வெளியேறினாள்...

வெளியில் வந்ததுமே வந்து விழுந்த கண்ணீரோடே பென்ஞ்சில் வந்தமர்ந்தவளிற்கு உள்ளமெங்கும் சோகம் வந்து அடைத்துக் கொண்டது...அவர்களுக்குள் சண்டைகளே வந்ததில்லையென்று சொல்ல முடியாது...ஆனால் இது போல் எப்போதுமே அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் பேசாமலேயே இருந்ததில்லை...

முதற்தடவையாக உயிர்த்தோழியின் பாராமுகம் அவளைப் பெரியளவில் பாதிக்க அழுத வண்ணம் அப்படியே அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தாள்...அப்போது அவள் முன்னாக நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தவள்,அங்கே சௌமி நிற்கவும் கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்...எழுந்து நின்றவளையே ஓர் நிமிடம் ஊன்றிப் பார்த்தவள்,

"அசைன்மென்டை கொடுக்காமல் இங்க வந்து என்ன பண்ணிட்டிருக்க..??.."

ஒரு வாரத்திற்குப் பின் அவள் வந்து கதைத்ததே கீர்த்தனாவிற்குப் பெரும் ஆறுதலாய் இருக்க,

"உனக்கு இன்னும் என் மேல இருக்குற கோபம் போகல ல..??.."

"ம்ம்...கோபமாய் இருந்திருந்தால் அது என்னைக்கோ போயிருக்கும்...ஆனால் நீ என்கிட்டையிருந்து எதுவோ ஒன்றை மறைச்சிட்ட என்குற வருத்தம்தான் என் மனசிலயிருந்து போகவே மாட்டேன் என்குது.."

"இதுவரைக்கும் நான் உன்கிட்டேயிருந்து எதையுமே மறைச்சதில்லை...ஏன் நமக்குள்ள காதலே வந்தால் கூட நமக்குள்ளதான் அது யார்ன்னு முதல்ல சொல்லிக்கனும்னு நீதான் எப்பவுமே சொல்லுவ...ஆனால் இன்னைக்கு அந்தக் காதல் உனக்குள்ள வந்ததும் எல்லாமே மறந்து போச்சில் ல..."

"என்ன அப்படிப் பார்க்குற...இவளுக்கு எப்படித் தெரியும்ன்னா..??..நீயும் நானும் பிறந்ததில இருந்தே ஒன்னாத்தான் கையைப்பிடிச்சு நடந்துக்கிட்டு இருக்கோம்...உன்னோட முகத்தை வைச்சே என்னால உன் மனசைப் படிக்க முடியும்...நீயாவே சொல்லுவாய்ன்னு நினைச்சேன்...ஆனால் நானாக் கேட்டப்போ கூட நீ மறைக்கத்தான் பார்த்தாய்...அப்போவே புரிஞ்சிடுச்சி உனக்குள்ள காதல் வந்தப்போவே கள்ளமும் சேர்ந்து வந்திடுச்சின்னு..."

கீர்த்தனாவிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை...அவள் சொன்னவற்றில் இருந்த உண்மை அவளின் இதழ்களைத் திறக்கவிடாது மூடிக் கொண்டதில் அவள் மௌனமாகவே நின்றாள்...

"எப்போ என்கிட்டயிருந்து மறைக்கனும்னு நினைச்சிட்டியோ அதை இனி நீயாவே சொன்னாலுமே நான் கேட்டுக்கிறதாயில்லை...இனி இதைபத்தின பேச்சு நமக்குள்ள வேண்டவும் வேண்டாம்..."என்று அதுவரையிலான பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தவள்,

"சீக்கிரமாய் முகத்தைக் கழுவிட்டு வா...க்ளாஸ்க்கு டைமாச்சு..."

ஏற்கனவே உடைந்போயிருந்த அவளின் உள்ளம் சௌமியின் இந்தப் பேச்சினில் மொத்தமாகவே நொறுங்கிப் போனது...ஆனாலும் அவள் சொன்னதற்காகவே முகத்தினைக் கழுவிவிட்டு வந்தவள்,அவளுடன் இணைந்து வகுப்பை நோக்கி நடக்கத் தொடங்கினாள்...

அவளது பார்வையோ எதிரில் நிலைத்திருக்க,மனமோ சௌமியின் வார்த்தைகளையே சுற்றிக் கொண்டிருந்தது...காலையில் மனம் முழுதும் சந்தோசத்தை மட்டுமாகவே நிரப்பிக் கொண்டு வந்தவள்,இப்போது துயரத்தை மட்டுமாகவே சுமந்து கொண்டிருந்தாள்...

இதே யோசனையாகவே வந்தவள் எதிரில் வந்து கொண்டிருந்த அவனையும் கவனித்திருக்கவில்லை...ஆனால் அவளின் அந்தவோர் பார்வைக்காகவே ஏக்கத்தோடு வந்து கொண்டிருந்தவனிற்கு அது மிகுந்த ஏமாற்றத்தினையளிக்க அவன் முகத்திலும் சிந்தையின் சாயல் ஒட்டிக் கொண்டது...

தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (29-Oct-18, 10:14 pm)
சேர்த்தது : உதயசகி
பார்வை : 440

மேலே