நாளுக்கு அணியென்றும் நன்றாற்றல் – அணியறுபது 37
நேரிசை வெண்பா
நாளுக் கணியென்றும் நன்றாற்றல்; நல்வீரர்
வாளுக் கணிவென்றி வாய்த்துவரல்; - சூளுக்குச்
சொன்னபடி ஆற்றும் துணிவே அணி;துணிவுக்(கு)
என்ன பணியும் அணி. 37
- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்
பொருளுரை:
நல்லதைச் செய்தலே நாளுக்கு அழகு; வீரரது வாளுக்கு அழகு சொல்லியபடி செய்து வெற்றி பெறுவதே ஆகும்; சூளுரைக்கு எவற்றையும் சொன்னபடி செய்வதே அழகு; நல்லனவாக எதையும் செய்து முடித்தலே துணிவுக்கு அழகு ஆகும்.
நாழிகை தோய்ந்துள்ளது நாள் என வந்தது. பகலும் இரவும் சேர்ந்தது ஒருநாள். மனிதனது வாழ்நாளின் இனமாய் வாய்த்துள்ள நாளை நன்கு பயன் படுத்தி வருபவன் எங்கும் வியனான பலனை அடைந்து கொள்கிறான்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். 38 அறன் வலியுறுத்தல்
வீணாக நாளைக் கழியாமல் நாளும் நன்மையைச் செய்துவரின் அவன் பிறவி தீர்ந்து பேரின்பம் பெறுவான் என்பதை இதில் அறிந்து கொள்கிறோம்.
வாழ்நாட்கு அலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ(து) எழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புரவு ஆற்றுமின் யாரும்
நிலவார் நிலமிசை மேல். 22 நாலடியார்
உங்கள் ஆயுள் நாளுக்கு அளவு கோலாய் அமைந்துள்ள சூரியன் நாளும் தவறாமல் எழுந்து வருகிறான். அவன் தோன்றி மறையுந்தோறும் நும் ஆயுள் தேய்ந்து மறைகிறது. முழுதும் மாய்ந்து படுமுன் நல்லதை ஒல்லையில் செய்து உயர்ந்து கொள்ளுங்கள் என இது உணர்த்தியுள்ளது,
தான் வாக்களித்த உறுதி மொழியைச் சரியாக நிறைவேற்றுபவனே நிறைந்த மதிப்பைப் பெறுகிறான். உள்ளம் துணிந்து ஊக்கி முயல்பவனுக்கு எல்லாக் காரியங்களும் இனிது முடிந்து வருகின்றன.