நெல்லின் பா - - - - - நெற்பயிரின் புலம்பல்

நெல்லின் பா -- - - - - நெற்பயிரின் புலம்பல்
*********************************************************************************
நெல்லென்று எமைச்சொல்வார் மண்மேல் ! எப்பொருளால்
நெல்லானோம் என்றுரைக்க எவருண்டு ? தோன்றியநாள்
நிலத்தையுண்டு நீரையுண்டு நீண்டெழுந்து நின்றிருப்போம்
நிலத்தினினும் நீர்நிறைந்த இடம்தானே எமக்காகும்
எப்பொழுதோ எமையறிந்து கண்டுகொண்டார் மானிடரும்
இப்பொழுதும் எமதுசக்தி அவருயிர்க்கு ஆகும்உரம்
தமக்கெனவே இருக்குமவர் எவர்க்கெனவும் வாழ்வதில்லை
எமக்கெனவே யாம்வளர்ந்தும் பிறர்க்குதவ மறுப்பதில்லை
எமதுடலின் கதிர்பிரிந்து மணிமணியாய் அணிவகுப்போம்
நவநவமாய் புதுமணிகள் ஒருமணியுள் ஒளித்திருப்போம்
வயல்வெளியின் எலிகளெமைத் தம்வளைக்குள் சேர்த்துவைக்கும்
பயமறியா பறவைகளும் எமைப்புசிக்கப் பறந்துவரும்
வெட்டுக்கிளிக் கூட்டங்களும் வண்டினத்தின் ஓர்வகையும்
வெட்டிவெட்டி உண்பதற்கு வட்டமிட்டுக் கூத்தடிக்கும்
எமைக்கடிக்கும் பூச்சிதின்னத் தவளைகளும் தத்திவரும்
எமைவளைத்துப் பாம்புகளும் தவளைகளைத் தேடிவரும்
விளைவதிலே அதிகமாக மானிடரே கொண்டு செல்வர்
விளையும் பயிர் பலஎனினும் எமக்கேமுதல் இடம்தருவார்
பிறந்தது ஏன் ? வளர்ந்தது ஏன் ? என்றுஎன்றும் கேட்டதில்லை
பிறந்ததுஇப் பலனுக்கென்றால் எமக்கதிலே துக்கமில்லை
வளர்ந்துவிளை பயனின்றிப் போவதற்குப் பிறப்பெதற்கு ?
மடிந்தும்கூட உணவுஆவோம் இதைவிடஓர் சிறப்பெதற்கு ?
நானிலத்து பிறக்குமுயிர்கள் தொடந்துவாழ நாங்களும்
பிறந்து பிறந்து இறந்திறந்து இருந்துவாழ்வோம் மண்ணிலே !

எழுதியவர் : சக்கரைவாசன் (10-Nov-18, 5:14 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 39

மேலே