ஜெயமோகன்--நெல்லை உரை, ----------------------பயண இலக்கியம்-------- கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்
நெல்லையில் கட்டண உரையை அமைக்கவேண்டும் என்பது நண்பர் சக்தி கிருஷ்ணனின் எண்ணம். பலஆளுமைகளின் தொகுப்பான சக்தி நெல்லையில் ஒரு நகைக்கடையை நடத்துகிறார். திருச்சியில் வழக்கறிஞராகவும் இருக்கிறார். நெல்லைக்கும் திருச்சிக்கும் நடுவே காரில் ஓடிக்கொண்டே இருப்பவர் நெல்லையில் சக்தி கலைக்களம் என்ற பேரில் கலை இலக்கியச் செயல்பாட்டுக்கான அமைப்பு ஒன்றையும் நடத்திவருகிறார். அவருடன் அகில இந்திய வானொலியில் பணியாற்றும் ஜான் பிரதாப்பும் இணைந்துகொண்டார். ஜான் பிரதாப்புடன் நாங்கள் மேற்குத்தொடர்ச்சிமலையில் பயணம் செய்திருக்கிறோம்.அவர்கள்தான் இந்த நிகழ்ச்சியை நெல்லையில் ஒருங்கிணைத்தவர்கள்
முதலில் எண்ணம் கட்டணம் கட்டி நூறுபேர் வருவார்களா என்பதுதான். ஆனால் தமிழகமெங்கணுமிருந்து என் நண்பர்களான வாசகர்களே கிட்டத்த அறுபதுபேர் வருவதாகப் பெயர் கொடுத்துவிட்டனர். ஆகவே மேலும் பெரிய கூடத்துக்கு நிகழ்ச்சி மாற்றப்பட்டது 230 பேர் அமரக்கூடிய கூடம். அதை நிறைக்கமுடியுமா என்பது அடுத்த கேள்வியாக இருந்தது. ஆனால் தொடர்ச்சியாக வருகையாளர்கள் பதிவுசெய்துகொண்டே இருந்தார்கள். நான் வண்ணதாசன், அ.ராமசாமி, லக்ஷ்மி மணிவண்ணன் உட்பட்ட சிலரை அழைத்திருந்தேன்.
9 ஆம்தேதி கோவைக்குச் சென்றிருந்தேன். விஷ்ணுபுரம் விழா தொடர்பான ஆலோசனைகள். அங்கிருந்து ரயிலேறி காலை 3 10க்கு நெல்லை வந்திறங்கினேன். பொதுவாக விடியலில் எழவேண்டுமென்றாலே நான் ரயிலில் ஆழ்ந்து உறங்குவதில்லை. முந்தைய நாள் முழுக்க கோவை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தமையால் குரல் கட்டியிருந்தது. ஆகவே மூச்சை சேமிக்கவும் தூங்கவும் விரும்பினேன். நெல்லையில் வெண்முரசின் தீவிர வாசகியான திருமதி சிவமீனாட்சி செல்லையா அவர்களின் விடுதிக்குச் சென்று படுத்து எட்டரை மணிவரை தூங்கினேன்.
அதன்பின் எழுந்து உரையின் பொதுவடிவை தயாரித்தேன். ஏற்கனவே உரையை கிட்டத்தட்ட முழுமையாகவே அஜிதனிடம் சொல்லிப்பார்த்திருந்தேன். இருந்தாலும் ஒரு நான்குமுறை எழுதிக்கொண்டால்தான் என்னால் தடையில்லாமல், செறிவாகப் பேசமுடியும்.
காலை முதலே நண்பர்கள் வந்துகொண்டிருந்தனர். பெங்களூர், சென்னை, காரைக்குடி, திருச்சி, பாண்டிச்சேரி என பல ஊர்களிலிருந்து வந்தார்கள். சென்னையில் இருந்து நண்பர்கள் ஒரு வேனில் கிளம்பி முந்தைய நாளே வந்து தாமிரவர்ணி நீராடல் என தனி பாதையில் சென்றுகொண்டிருந்தனர். ஈரோடு நண்பர்கள் ஒரு வேனில் காலையில் கிளம்பி மதியம் வந்தார்கள். அருண்மொழியும் அஜிதனும் எங்கள் காரில் நாகர்கோயிலில் இருந்து வந்தனர். நண்பர் ஷாகுல் ஹமீது ஓட்டிவந்தார். மெல்ல மெல்ல விஷ்ணுபுரம் நிகழ்ச்சியின் முன்னோட்டம் போலவே அனைத்தும் ஒருங்கிணையத் தொடங்கியது. பேச்சு, சிரிப்பு, நையாண்டி கூடவே தீவிர இலக்கிய விவாதம் என.
ஏற்பாட்டாளர்கள் அனைவரும் உற்சாகமாக இருந்தார்கள். வரும்காலத்தில் மேலும் சில துறைசார் அறிஞர்களை அழைத்து இதேபோல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவேண்டும் என்று சொன்னார்கள். எவரை அழைக்கலாம் என்று பேசிக்கொண்டோம். துறைசார் அறிவு கொண்டவராகவும் அதேசமயம் ஓர் அரங்கை எதிர்கொண்டு தெளிவாகவும் ஆர்வமூட்டும்வகையிலும் பேசக்கூடியவராக இருக்கவேண்டும் என்பது முக்கியம்.மேலைநாட்டு துறைசார் அறிஞர்கள் பெரும்பாலும் மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர்கள். இங்கே அந்த இணைவு மிக அரிதாகவே உள்ளது
நான் பகல் முழுக்க பெரும்பாலும் ஒதுங்கியே இருந்தேன். தூங்கினேன். உரையை சிலமுறை எழுதிக்கொண்டேன். உரை ஐந்தரைமணிக்கு. ஐந்துமணிக்கு அரங்குக்குக் கிளம்பினேன். நண்பர் செல்வேந்திரன் அவருடைய மகளின் எழுத்தறிவிப்புக்கு அளித்த சிவப்புச் சட்டை. உரிய பதற்றங்களுடன் கூடத்துக்குச் சென்றேன். தயாரித்தவை அனைத்தும் மொத்தமாகக் கலந்து ஒரு ரீங்காரமாக மண்டைக்குள் ஓடியது. எங்கே தொடங்கவேண்டும் என்பது மட்டும் எஞ்சியிருந்தது. பார்ப்போம் என ஒரு நம்பிக்கை
பொதுவாக இவ்வகை உரைகளில் இரண்டு விஷயங்கள் நிகழும். நாம் நன்கறிந்த, முன்னரே நோக்கிச் சரிபார்த்த சிலவற்றைச் சொல்வோம். இது பேச்சு என்பதனாலேயே அந்த ஒழுக்கில் அதுவரை இல்லாத பல புதிய கோணங்களும், முன்பில்லாத சில கருத்துக்களும் தோன்றும். அதன்பின்னரே அவற்றை மீண்டும் சரிபார்க்கவேண்டும். இந்த இரண்டாம்வகைக் கருத்துக்கள்தான் உண்மையில் மூளையை, கற்பனையைச் சீண்டுபவை. அவை இயல்பாக எழுந்துவந்தால்தான் ஓர் உரை சிறப்பாக நிகழ்ந்துள்ளது என்று பொருள். அவை பேசுபவனுக்கும் கேட்பவருக்கும் நடுவே ஓர் உரையாடலாகவே எழுகின்றன
கட்டண உரை என்றால் என்ன என்பதன் முதல் தடையம் தெரியலாயிற்று. அத்தனைபேருமே ஐந்தேகால் மணிக்குள் வந்துவிட்டனர். தமிழ்நாட்டு இலக்கியக் கூட்டங்கள் ஐந்தரை என்றால் ஆறரைக்குத் தொடங்கும். ஏழரைக்குத்தான் மைய உரை நிகழும். எட்டு மணிவாக்கில்தான் கேட்கவருபவர்கள் முழுமையாக வந்தமர்வார்கள். ஐந்துமுப்பதுக்கு அரங்கு நிறைந்தது. ஹவுஸ்ஃபுல் போட்ட ஒரே இலக்கிய அரங்கு இது என்றார் நண்பர். கேட்பவர்கள் அரங்கில் அமர்ந்தபின்னர் முழுமையான கவனம் கூடியிருந்தது. அரைக்கவனத்தில் ஒருவர் கண்கூட தென்படவில்லை. சொல்லப்போனால் இனிமேல் கட்டணம் கட்டாமல் வருபவர்கள் நடுவே பேசவே கூடாதோ என்ற எண்ணம்தான் வந்தது.
பொதுவாக உரைநிகழ்வுகளில் ஆட்கள் எழுந்துசெல்வது, செல்பேசியில் பேசிக்கொண்டிருப்பது, வந்து அமர்ந்துகொண்டே இருப்பது என ஒரு கலைவு இருந்துகொண்டே இருக்கும். மிகப்பெரிய கூட்டம் என்றால் அது விழியோ செவியோ அற்ற ஒரு திரள்தான். அதை கற்பனையில்தான் கேட்பவர்களாக உருவகித்துக்கொள்ளவேண்டும். இந்த அரங்கில் ஒவ்வொருவரும் கூர்ந்து அமர்ந்திருந்தனர். ஏனென்றால் இது அவர்கள் ‘விலைகொடுத்து வாங்கிய’ ஒன்று. அவர்களுக்கு உரிமையானது, ஆகவே வீணடிக்கப்படக்கூடாதது.
நான் இரு பகுதிகளாகப் பேசினேன். முதல் ஐம்பது நிமிடம் இந்திய வரலாற்றுப்பின்னணியில் நம் சிந்தனை மரபை உருவாக்கியிருக்கும் கூறுகள் என்னென்ன என்று. அடுத்த ஒரு மணிநேரம் நம் இன்றைய சிந்தனையை கட்டமைத்திருக்கும் கூறுகள் என்னென்ன, அவற்றின் சிக்கல்கள் என்னென்ன என்று. பெரும்பாலும் இலக்கியப் படைப்புகள் வழியாக, இலக்கியம் சார்ந்த உருவகங்கள் வழியாக அமைந்த உரை இது இரு உரைகளுக்கு நடுவே பத்து நிமிட இடைவெளி
எட்டு பத்துக்கு உரை முடிந்தது. அடுத்த அரைமணிநேரம் நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி. நூல்களுடன் வந்து கையெழுத்து பெறுபவர்கள். கை குலுக்குபவர்கள். எல்லா நிகழ்ச்சிக்குப்பின்னரும் இது ஒரு நிறைவூட்டும் தருணம். வாசகர்களை நேருக்குநேர் சந்திப்பது. ஒவ்வொருநாளும் வாசகர்களின் கடிதங்கள் பெறும் எழுத்தாளன் நான். எழுத ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை வாசகர்கடிதம் வராதநாள் மிக அரிது. ஆயினும் நேருக்குநேர் சந்திப்பதென்பது முற்றிலும் வேறொன்று. பிரியம் நிறைந்த கண்கள், தயங்கும் சொற்கள், கைகுலுக்கல்கள் வழியாக நிகழும் ஒரு ஆழ்ந்த உறவு அது
இரவு வெவ்வேறு விடுதிகளிலாக அறைகள் போட்டிருந்தோம். நான் நண்பர்களுடன் சென்று தங்கினேன். பன்னிரண்டு மணிவரை உரையின்மீதான் ஐயங்கள் மறுப்புகள் என பேசிக்கொண்டிருந்தோம். ஆறு படுக்கைகள் கொண்ட பெரிய அறைக்குள் நாற்பதுபேர் அமர்ந்து ஒரு தீவிரமான விவாதம். பல கோணங்களில் கேள்விகளும் விளக்கங்களும் எழுந்து வந்தன.
ஓர் உரையின் முதன்மைநோக்கமே கேட்பவர் தானே தேடிச்செல்லும் சில அடிப்படை வினாக்களை அளிப்பதுதான். சில குழப்பங்களை, முட்டிமோதல்களை அவர்கள் அடைந்தாலே போதுமானது. என் உரை விரிவான ஓர் அடிப்படைவரைவை அளிக்கிறது. அதை நிரப்பிக்கொள்ளும் பணி கேட்பவர்களுக்கு உண்டு அந்தக்குழப்பங்கள் எழுந்து வந்தபடியே இருந்தன. ஒருகட்டத்தில் வலுக்கட்டாயமாகப் பேச்சை நிறுத்தவேண்டியிருந்தது.
நிகழ்வரங்குக்கும் விடுதிகளுக்கும் அருகே சர்க்கார் படத்தின் பெரிய சுவரொட்டிகள், ராம் முத்துராம் அரங்கில் பெருங்கூட்டத்தின் பரபரப்பு. நாளிதழ்களில், ஊடகங்களில் சரவெடிச் சர்ச்சைகள். இன்னும் பத்துநாட்களில் ஒருவேளை தமிழில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே அதிகமான பணமீட்டிய படமாக சர்க்கார் அமையக்கூடும் என்றது சினிமா வினியோக வட்டாரத்திலிருந்து வந்த செல்பேசிச் செய்தி. நான் அறியாத வேறேதோ உலகில் அதெல்லாம் நடந்துகொண்டிருந்தன. நான் அந்தப்படத்தை இன்னமும் பார்க்கவில்லை.
சர்க்காரின் வெற்றி எதிர்பார்த்ததுதான். அதன் மாபெரும் வெற்றி சினிமாவில் எப்போதுமுள்ள ஆச்சரியங்களில் ஒன்று. அதைவிட எனக்கு மகிழ்வை அளித்தது என் நண்பர் மதுபால் ஒழிமுறிக்குப் பின் இயக்கிய குப்ரஸித்தனாய பய்யன் என்ற சிறிய மலையாளப் படம் ஒன்பதாம் தேதி வெளியாகி வெற்றிபெற்றிருப்பது. மதுபாலைக் கூப்பிட்டு வாழ்த்தினேன்.
மறுநாள் காலையில் பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐம்பது நண்பர்கள் அதில் கிருஷ்ணாபுரத்திற்கும் ஆழ்வார்திருநகரிக்கும் சென்றோம். கிருஷ்ணாபுரம் சிற்பங்களை முப்பதாண்டுகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ந.சுப்புரெட்டியார் ஆகியோர் அந்த ஊர், கோயில்களின் சிற்பங்கள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். தொ.மு பாஸ்கரத்தொண்டைமான் சிற்பங்களைப்பற்றிய செய்திகளை அழகுறச்சொல்பவர். ந.சுப்புரெட்டியார் தொன்மங்களுக்கு அதிக இடம் கொடுப்பார். தமிழக ஆலயங்களைப்பற்றி விரிவாக எழுதி ஒரு தொடர்கவனத்தை நிலைநிறுத்திய முன்னோடிகள் இவர்கள். இவர்களின் நூல்கள் மறுபதிப்பாக வரவேண்டும்
ஒருகாலத்தில் நான் அவர்களின் பெரிய வாசகன். அவர்களிடமிருந்தே கிருஷ்ணாபுரம் கோயிலைப்பற்றி அறிந்துகொண்டேன். கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது நண்பர்களுடன் கிளம்பி வந்து இக்கருங்கல் கலைவடிவங்களுக்கு முன் நின்றேன். வண்ணங்களின் அன்னை கருமையே என அன்று உணர்ந்தேன். அதன்பின் எப்படியும் பத்துமுறையேனும் இங்கு வந்திருப்பேன்.
ஒவ்வொருமுறையும் அங்கிருந்த சிற்பங்கள் ஒருவகையான சொல்லின்மையை அளிக்கின்றன. இம்முறை முதல்முறையாக அவை காலமில்லாதவை என்றும் நான் காலத்தில் சென்றுகொண்டிருப்பவன் என்றும் தோன்றியது அவற்றின் கல்விழிகளை நேர்நின்று நோக்க முடியவில்லை. அணிச்செதுக்குகள். நடனநிலைகள். அசைவின் அசைவிலாநிலை. கால ஒழுக்கு கல்லில் நிலைகொள்ளுதல்.
ஆழ்வார் திருநகரியில் ஐப்பசி மாத மூலநட்சத்திரம். அது மணவாளமாமுனிகளின் பிறந்த நாள். ஆகவே கோயிலில் திருவிழா. அருகிலி இருந்த மணவாள மாமுனிகளின் ஆலயத்திலிருந்து அவர் எழுந்தருளி பெருமாளையும் நம்மாழ்வாரையும் வணங்கிச் செல்கிறார். அதற்கான கூட்டம். தமிழகத்தில் கவிஞன் தெய்வமாக அமர்ந்திருக்கும் ஆலயங்களில் ஒன்று. அங்கே ஆலயத்தை அறிமுகம் செய்துவைத்த நண்பர் “இன்றைக்கு மணவாள மாமுனிகள் வந்திருக்கார். பெருமாளை சேவிச்சுட்டு போவார்” என பேசிக்கொண்டே சென்றபோது மீண்டும் அந்தக் காலமின்மை உணர்வை அடைந்தேன். ”பகல்பத்து விழாவுக்கு இங்கே நம்மாழ்வார் உக்காந்திருப்பார். இதோ இங்கே ராமானுஜர்….” அவர்கள் அனைவருமே என்றுமுள்ள நிகழ்காலத்தில் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆழ்வார் திருநகரியில் நண்பர் வெங்கட்ராமன் எங்களுக்காகக் காத்திருந்தார். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புடன் தொடர்பு கொண்டவர். அம்பேத்கார் -காந்தி இணைப்பைப்பற்றிய சிந்தனைகளை தொடர்ந்துவருபவர். நண்பர் சேஷகிரி ஆர்வார்திருநகரிதான். அவர் அங்கே திருவிழாவில் ஈடுபட்டிருந்தமையால் தொலைபேசியில் தொடர்புகொள்ளமுடியவில்லை. ஆனால் தற்செயலாக நேரில் பார்க்கமுடிந்தது. நண்பர்கள் அனைவருக்குமே அவர் தன் கடிதங்கள் வழியாக நன்கு அறிமுகமானவர். கட்டித்தழுவல்கள், கிண்டல்சிரிப்புகள்.
மதியம் நெல்லை வந்தோம். அங்கிருந்து காரில் ஊர். மூன்றுநாட்களுக்குள் இத்தனை ஊர்கள், இத்தனை நண்பர்கள், இவ்வளவு சொற்கள். வாழ்க்கையை அள்ளியள்ளி நிறைத்துக்கொள்வது என்றால் இதுதான்.
ஜெ
மின்னஞ்சல்
12.11.2018