முக்கூடற் பள்ளு
தமிழ்நாட்டில் வளமான ஒரு பகுதி திருநெல்வேலி மாவட்டம். திருநெல்வேலியை 'நெல்லை' என்றும் கூறுவர். இதோ தாமிரபரணி ஆற்றைக் காணுங்கள். திருநெல்வேலிக்கு வடகிழக்கே சித்திரா நதி, கோதண்டராம நதி ஆகிய இரு நதிகளும் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடம் முக்கூடல் என்று அழைக்கப்பட்டது. இவ்வூரில் எழுந்து அருளி இருக்கும் அழகர் என்னும் தெய்வத்தின் மீது பாடப்பட்டதே முக்கூடற் பள்ளு ஆகும்.
பெயர்க் காரணம்
முக்கூடற் பள்ளு என்பது இடத்தால் பெற்ற பெயர் ஆகும். முக்கூடல் இன்று சீவலப்பேரி எனக் குறிக்கப்படுகிறது. பாண்டியன் மாறவர்மன் ஸ்ரீவல்லபன் கி.பி. 12- ஆம் நூற்றாண்டில் தன் பெயரில் ஓர் ஏரி கட்டினான். அது ஸ்ரீவல்லபன் ஏரி எனப்பெயர் பெற்றது. இதனால் இவ்வூர் சீவலப்பேரி என வழங்கப்படுகிறது. இங்கு மூவேந்தர் கல்வெட்டுக்களுடன் கூடிய தொன்மையான திருமால் கோயில் உள்ளது. இங்குக் கோயில் கொண்டிருக்கும் திருமாலை 'அழகர்' என்றும் 'செண்டு அலங்காரர்' என்றும் முக்கூடற் பள்ளு புகழ்ந்து போற்றுகின்றது.
காலம்
இந்நூலின் காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு எனலாம். காவை வடமலைப் பிள்ளையன், ஆறை அழகப்ப முதலியார், திருமலைக் கொழுந்துப் பிள்ளையன் ஆகிய செல்வர்கள் முக்கூடற் பள்ளில் பாராட்டப்பட்டுள்ளனர். இவர்களின் காலம் கி.பி. 1676 முதல் கி.பி. 1682 வரை ஆகும். எனவே முக்கூடற் பள்ளுவின் காலத்தை 17-ஆம் நூற்றாண்டு என்று கணக்கிடலாம்.
ஆசிரியர்
இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை. புலவர் பெயரை அறிய முடியாவிட்டாலும் அப்புலவர் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழையும் நன்கறிந்த கவிஞர் என்பதைப் பாடல்கள் புலப்படுத்தி உள்ளன.
நூலின் தன்மை
பாத்திரங்கள் நாடகத் தன்மையுடன் அறிமுகப்படுத்தப் படுகின்றன. மேலும் உரையாடல் வழியே கதை நிகழ்த்தப்படுகின்றது. இந்நூல் இயல், இசை, நாடகம் கலந்த முத்தமிழ் நூல் என்று கூறுவது மிகையாகாது.
சிறந்த சந்த நயமும் நாட்டுப்புறவியல் கூறுகளும் வளமான கற்பனைகளும், உவமைகளும் நிறைந்து முக்கூடற் பள்ளு விளங்குகிறது. நண்பர்களே!
புலவர் முக்கூடல் நகரின் சிறப்பினைக் கற்பனை நயம்பட விவரித்துள்ளார் முக்கூடலில் அழகர் கோயில் கொண்டிருக்கும் கோயிலின் கோபுரம் மிக உயரமானது. மேகத்திரள் அந்தக் கோபுரத்தைச் சூழ்ந்து நிற்கும்; வானத்திலிருந்து மழைத்துளிகள் படியும். கொடி மரத்துக் கொடிகள் வானத்தையே மூடி மறைத்துக் கொண்டு இருக்கும். பேரண்டப் பறவைகள் கோயிலின் உச்சியை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும். பொற்கோயிலின் முற்றத்தில் உள்ள மழைநீரில் அன்னங்கள் விளையாடிக் கொண்டிருக்கும். சூரியன், கோயிலின் மதிற்சுவர்களில் தான் புகுந்து செல்வதற்குரிய வழியைத் தேடிக் கொண்டிருப்பான். இவ்வாறாக முக்கூடல் நகரைப் புலவர் வருணித்துள்ளார்.
வீதியும் சோலையும்
ஒளி வீசும் சிறந்த மணிவகைகள் பதித்த மாளிகைகளை உடையன வீதிகள். வீதிகளின் நெருக்கம் அதிகமாக இருக்கும். மலர்ச் சோலைகளில் திரியும் வண்டு இனங்கள் தம் ரீங்காரப் பண்ணினைப் பாடும். அப்பாடல் இரும்பு உள்ளங்களையும் உருகச் செய்துவிடும். நால்வகை வருணத்து மக்களும் தம் வேற்றுமையை மறந்து ஒன்றுபட்டு நீதியைப் பெருக்குவர். நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள் நீர் முகப்பார் குடங்களில் புகும். புகுந்து குடத்தை நெருக்கும். இளம் எருமை மாடானது கழனிகளிலே உள்ள நீர்ப்பூக்களை மேயும்; அதில் உள்ள மதுவை உட்கொண்டு செருக்கித் திரியும். மேட்டு நிலங்களில் எல்லாம் குளிர்ந்த மலர்கள் இதழ் விரித்து மலர்ந்திருக்கும்.
இவ்வாறாக முக்கூடல் நகரின் இயற்கை வளத்தையும் செயற்கை வளத்தையும் புலவர் பாடியுள்ள திறத்தை அறிந்து மகிழலாம்.
மூத்த பள்ளியின் தொல்குலம்
சித்திரா நதியானது முக்கூடலுக்கு வடப் பக்கமாக ஓடுவது. அதற்குத் தென்பக்கமாக ஓடுவது பொருநை ஆறு ஆகும். இவ்விரு நதிகளும் தோன்றி ஓடிவந்து முக்கூடலில் ஒன்று கலந்த காலம் மிகத் தொன்மையான காலம் ஆகும். உலகம் தோன்றிய தொடக்கக் காலத்திலேயே அவை ஒன்று கலந்தன. அப்படி அவை ஒன்று கலந்த காலம் தொட்டு வழி வழியாகத் தோன்றி வரும் மிகப் பழமையான குடும்பத்தில் பிறந்தவள் மூத்தபள்ளி ஆவாள். (முக்.பள். 13)
இளைய பள்ளியின் பெருமை
செஞ்சி நாட்டிலும, கூடலாகிய மதுரை நாட்டிலும் தஞ்சை நாட்டிலும், தம் ஆணையைச் செல்வாக்குடன் செலுத்தும் ஆட்சியாளன் வட மலையப்பப் பிள்ளையன் ஆவான். அவர் ஊரும் இளையபள்ளி ஊரும் ஒன்றே ஆகும். வடமலையப்பப் பிள்ளையன் உலக நன்மைக்காக ஐந்து குளங்களை வெட்ட நினைத்தான். குளம் வெட்ட, சக்கரக்கால் நிலை இட்ட போது (குளம் வெட்டுவதற்குரிய எல்லைகளை அளந்து எல்லைக் கற்கள் பதிப்பித்த போது) அந்த நாளிலேயே இளைய பள்ளி பண்ணையில் வந்து சேர்ந்தாள் என்று இளைய பள்ளியின் பெருமை பேசப்பட்டுள்ளது. (முக்.பள். 15).
முனைவர் சிலம்பு நா.செல்வராசு
.
வளரும்