கேடிலா ஆண்மைக்கு அடக்கம் அணி – அணியறுபது 40
நேரிசை வெண்பா
இம்மைக்(கு) இசையே இனியவணி; எய்தநின்ற
அம்மைக்(கு) அறமே அரியவணி; - செம்மைசேர்
கேண்மைக்(கு) அணிகிழமை கீழாமை; கேடிலா
ஆண்மைக்(கு) அடக்கம் அணி. 40
- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்
பொருளுரை:
புகழே இம்மைக்கு அழகு; அறமே மறுமைக்கு அழகு; உரிமை குலையாமையே நட்புக்கு அழகு: அடக்கமே ஆண்மைக்கு மேன்மையான அழகு.
ஒருவன் பெயரை உலகத்தார் உவந்து புகழ்ந்து வருவது புகழ் என வந்தது. பலரும் நலமுறும்படி அரிய இனிய செயல்களைச் செய்து வருபவனுக்கே சீரிய இசை இயல்பாய் நேரே சேர வருகிறது.
அறம், தருமம், புண்ணியம், நல்வினை என்று சொல்லி வருவன எல்லாம் ஒரு பொருளையே சுட்டி வருகின்றன. நெறி நியமங்களோடு ஒழுகி எவ்வுயிர்க்கும் இரங்கி எவ்வழியும் இதம் புரிந்து வருபவனே புண்ணியவானாய்ப் பொலிந்து திகழ்கிறான்.
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்
என்னும் ஈது அருமறைப் பொருளே. - இராமாயணம்
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம்
பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்
வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஓம்புமின்
கரும்பெனத் திரண்டதோட் கால வேற்கணிர்! – சீவகசிந்தாமணி
தருமம் ஆகிய கற்பகத் தரு அருளுகிற அற்புத இன்பங்களை ஈண்டு அறிந்து கொள்கின்றோம். பழகிய நண்பர்கள் பண்புரிமைகள் தோய்ந்து வரும் அளவே அன்புரிமையும் இன்ப நலன்களும் நன்கு அடைய நேர்கின்றனர்.
அடக்கத்தில் எல்லா மேன்மைகளும் அடங்கியிருக்கின்றன. அதனால் அரிய பல நன்மைகள் பெருகி இருமையும் இன்பம் மருவி வருகின்றன.
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். 121 அடக்கமுடைமை
மனிதனைத் தேவன் ஆக்கி அடக்கம் இன்ப உலகத்தில் ஏற்றியருளும்; அடங்காமை எவரையும் இழிவாக்கி நரகத் துயரத்தில் வீழ்த்தி விடும் என்னும் இது இங்கே நன்கு சிந்தித்துத் தெளியவுரியது.