நீதி சதகத்தில்

நிலையற்ற இந்த உலகத்தில் யார் பிறப்பு- இறப்புச் சுழலில் விழவில்லை? ஒருவனுடைய குடும்பத்தின் செல்வ வளத்தையும் பெருமையையும் அதிகரிக்கும் பிறப்பே சிறந்தது.

பிராணிகளும், தாவரங்களும் இறக்கின்றன, பிறக்கின்றன. ஆனால் மனிதனுக்கும் அவைகளுக்கும் வேறுபாடு இல்லாவிடில் மனிதர்களும் அவைகளுடன் எண்ணப்படும். ஆகையால் வளத்தையும் நல்ல பெயரையும் சம்பாதிக்கும் வாழ்வே வாழ்வு ஏனையவை மிருக வாழ்வு.

ஒருவனுடைய மகன் செய்யும் செயற்கரிய செயல்களைக் கண்டு, இவன் தந்தை என்ன தவம் செய்து இந்தப் பிள்ளையைப் பெற்றானோ என்று வியக்க வேண்டும் என்று வள்ளுவனும் சொல்வான்.

புகழோடு வாழும் வாழ்க்கையே வாழ்க்கை; அல்லது பிறக்காமல் இருப்பதே மேல் என்றும் வள்ளுவன் மொழிவான்.

அவன் செப்பிய குறள்கள் இதோ

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான்கொல் எனுஞ்சொல் –குறள் 70

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று- 236

எழுந்திரு! புகழ் அடை!!

–என்று அர்ஜுனனுக்கு கிருஷ்ணனும் பகவத் கீதையில் கட்டளை இடுகிறான் (11-33)



பூங்கொத்து இருக்கிறது;

அது காட்டிலும் இருக்கலாம்; அல்லது பெண்களின் தலையிலும் இருக்கலாம்

இதே போலத்தான் ஒவ்வொருவருக்கும் இரண்டு நிலைகள் இருக்கின்றன.

பூங்கொத்து, பெண்களின் தலையை அலங்கரிக்கையில் சிறப்பு பெறும்;

அதே பூங்கொத்து காட்டில் மலர்ந்து, யாரும் பார்க்காமல் உதிர்ந்தும் போவதுண்டு.

ஆக புகழ் பெறுவதும் புகழ் இல்லாமல் வாழ்வதும் நம் கையில் இருக்கிறது.

வள்ளுவன் இந்த உவமையை வேறு ஒரு இடத்தில் பயன்படுத்துகிறான்.

வாசனை இல்லாத கல்யாண முருங்கைப் பூ

வள்ளுவன் சொன்னான்:-

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையாதார் – குறள் 650

தான் படித்த விஷயத்தை அழகாக விளக்கத் தெரியாதவர்கள், மலர்ந்தும் மணம் வீசாத மலர்களுக்கு ஒப்பாவர்

தமிழில் இதை விளக்கும் அழகான பழமொழிகளும் உள

குடத்திலிட்ட விளக்கு போல (காட்டுப் பூ)

குன்றிலிட்ட விளக்கு போல (பெண்களின் சிகை அலங்காரப் பூ)

நல்ல குலத்தில் பிறந்து அழகாக, இளமையுடன் தோன்றினாலும், படிக்கா விட்டால், வாசனை இல்லாத (கல்யாண முருங்கைப் பூ போலத்தான்) மலர் போலவே இருப்பர்.

பெரிய செயல்களைச் செய்தால்தான் புகழ். நோஞ்சானை அடித்துப் போட்டுவிட்டு பயில்வான் என்று பெயர் வாங்குவதில் பொருள் இல்லை.

செத்த பாம்பை அடித்துவிட்டு வீரன் என்று சொல்வதிலும் பொருள் இல்லை. ஆக செயற்கரிய செயலைச் செய்க.

இதை வள்ளுவனும் ஒரு குறளில் விளம்புவான்:-

நிலவரைநீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு –குறள் 234

ஒருவன் பூவுலகத்தில் புகழ் மணக்கும் செயல்களைச் செய்வானாகில், தேவலோகத்தில் அவனுக்குத் தான் வரவேற்பு கிடைக்கும்; தேவர்களைப் போற்றமாட்டார்கள்.



லண்டன் ஸ்வாமிநாதன்

எழுதியவர் : (16-Nov-18, 5:16 pm)
பார்வை : 56

மேலே