காற்று
பூஞ்சோலைகள் மீது பரவி வந்து
பூக்கள் மணமெல்லாம் உன்னுள் கொண்டு
பூங்காற்றாய் நீ வீசும்போது பூக்களின் மணம்
பரப்புகின்றாய்
தென்றலாய் நீ மூங்கில் காட்டில் வீசும்போது
மூங்கில்களை தடவி மெல்ல நோவாது வருட
கண்ணனின் வேணுகானம் காற்றில் மிதந்து வருகுதே
தென்றல் காற்றில்
ஓடும் ஆற்றின் அலைகள் மீதே தவழ்ந்து வந்து
நீ தெம்மாங்கு இசைக்கின்றாய் அங்கு
கட்டுமரத்தில் மீன் பிடிக்கும் மீனவர்க்கு
இதம் அளிக்கும் கீதம் பாடி இன்பமூட்டுகின்றாய்
மும்முரமாய் மீன் பிடிக்க.
இப்படியே நீ இருந்திருந்தால் காற்றே
உன்னை வாயுதேவனாய் போற்றி இருப்பர்
நீயோ ஏனோ தெரியலை திடீரென கோர தாண்டவம் ஆட
ருத்ரரூபம் எடுத்தாய் , 'கெஜா' என்ற பெயர்கொண்டு
புயலாய், சூழல் காற்றாய் எங்கள் தமிழ் நாட்டில்
நிலத்தையே நம்பி வாழ்வாரின் வயிற்றில் தீயாய் மாறினாய்
அவர்கள் பாடுபட்டு வளர்த்த தென்னை, வாழை, கரும்பை
தாக்கி தரைமட்டம் ஆக்கிவிட்டாய், மக்களையும் பசுக்களையும் கூட
மாய்த்து சென்றாய் , இன்னும் உன் தாகம் தீரவில்லையா
காற்றே, போதும் போதும் உன் இந்த ருத்ர தாண்டவம்
சாந்தம்கொண்டுவிடு , கருணைக்காட்டு வாயுதேவனாய்
நீ தென்றலாய் மட்டுமே இருந்துவிட மாட்டாயா ?