எப்பிறப்பும் கடந்து வாழ்ந்திடும் மனிதம்

முன்பின் அறியா முகம் காணுகையில்
எங்கோ எப்போதோ அறிமுகம்போல் உள்ளுணர்வு
செல்லாத இடம்தனில் முதலாய் காலூன்றுகையில்
நாம்முன்பே வந்ததுபோல் இனமறியா புத்துணர்வு

அண்டசராசரத்தின் அங்கமாய் முன்பு இருந்தோமா...?
அடுத்து ஒருபுறவி மீண்டும் நாம் எடுத்தோமா....?
அறியாத புதிராய் ஆழ்மனதின் கேள்விகள்
அகழ்ந்தாய்ந்தால் விளங்கவில்லை ஆத்மாவின் சூட்சமங்கள்

மானிட ஆத்மா மரணம் கொள்ளாது
மறுபடியும் பிறந்து முற்பிறவி பலன் எய்திடும்
கலியுகவரதன் கீதையில் ஓதியது
கதையா கற்பனையா கருத்துக்குப் படவில்லை....

முடிவுறா சுழற்சி சம்சார வாழ்கை
நிறைவேறா கர்மபலனால் மீண்டும் மீள்பெறும்
பாவப்புன்னிய கணக்கு முழுதாய் தீர்ந்தபின்
ஆன்மா முக்திபெறும் புத்தமதக் கோட்பாடுயிது

ஆற்றல்கள் மாறும் ஆனாலவை அழிவதில்லை
ஆன்மாவும் ஆற்றலும் ஒன்றானதென்றால்
தோற்றப் பிழையாக மறைவதாய் தோன்றி பின்
மாற்றங்கள் ஏற்று மறுஜனனம் ஏற்றிடுமோ

ஜனனமே தொடக்கமா
மரணமே முடிவா....
விடை தெரியா தேடலாய் விரிகிறது பிறவிப் புதினம்
முறைகொண்டு வாழ்ந்து மகத்துவம் பேணின்
எப்பிறப்பும் கடந்து வாழ்ந்திடும் மனிதம்

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (28-Nov-18, 10:48 am)
பார்வை : 74

மேலே