களவாடல்
மாலை நேரப் பேருந்தில்
மண்டிக்கிடந்தக் கூட்டத்தில்
மானாவாரியகக் களவாடல்கள்!
அன்றைய உழைப்பில் ஆடி ஒடிய
ஆத்மா ஒன்றின் அலுப்பு,
விழித்திருந்து முன்னிரவு உழைத்திருந்த
விழிகள் இரண்டின் சோர்வு,
மூட்டையாய் தன்னையே சுமந்து நின்ற
முதுமை ஒன்றின் களைப்பு,
உரையாடல் தவிர்த்து பயணித்து வந்த
உறவு ஒன்றின் மனவிரிசல்,
பறக்க பயந்து விரிக்க மறந்த ஒரு ஜோடி
சிறகுகள் சூடியிருந்த நங்கூரம்,
என எல்லாம் களவு போனது!
எந்த சுவடுமின்றி, யாரது களவாடியது?
கூட்டத்தில் தோள் ஒன்றை
கட்டியிருந்த குழந்தை ஒன்று
அறிமுகமில்லா ஆன்மாக்கள் மீது
அள்ளி அள்ளி வீசிய
கள்ளமில்லா புன்னகைதானோ
களவாடல் அனைத்தும் செய்தது!
“களவாடல் தொடரட்டும்!”
விரும்பித் தொலைத்தவர்களின்
வேண்டுதல் இது..!