ஏகலைவா எவ்வாறு ஜீரணிக்க
#ஏகலைவா… எவ்வாறு ஜீரணிக்க..?
குலம் பார்த்தது
குருகுலக் கல்வி
வேடுவக்குலமாம் ஏகலைவன்
மறுக்கப்பட்டது
வில்வித்தைக்கான பயிற்சி..!
அப்பாவின் ஜீன்களோ
இல்லை ஆர்வக்கோளாரோ
குறிபார்த்து அம்பெய்துவதில்
குருவின்றியே
குருவை மிஞ்சும் சிஷ்யனாய்
ஏகலைவா…
நீ துரோணருக்கும் அப்பனடா..!
காட்டில் ஓடிய நாய்க்கு
வாய்க்கட்டு ஒரே வீச்சில்
குறி பார்த்து நான்கு அம்புகள்
குறுக்கும் நெடுக்குமாய்
நாய் வாயில்
குருதி ஏதுமின்றி..!
ஏகலைவா
நீ துரோணருக்கும் ராஜகுருவடா..!
யாருடைய வில்வித்தை இது..?
நானும் அறியாத வித்தை..!
துரோணன் வியந்தானா
இல்லை அச்சம் கொண்டானா..?
ஏகலைவா…
நீ துரோணரை மிரள வைத்த
வில்வித்தை வல்லவனடா....!
தம்மை மிஞ்சிவிடுவானோ..?
அர்ச்சுனனையும் வெல்வானோ..?
அச்சங்களும் இயலாமையுமே
துளிர் விடுகிறது சூட்சிகளாய்..!
ஏகலைவா
உன் அற்புத வில்வித்தைக்கு
ஆபத்து வந்ததடா..!
பயிற்றுவிக்காத வித்தைக்கு
குரு தட்சணை
நரித் தந்திரமென்று
கூறி விட இயலாது
கொலைவெறிக்கும் கொடுமையாய்
விலேந்தும் வித்தகனின்
கட்டைவிரல் தட்சிணையாய்..!
ஏகலைவா
துரோணன் உன் முன்
பிச்சைக்காரனடா..!
பாண்டவர்கள் உத்தமர்களாமே
தர்மர்களாமே…?
உன் விரல் வாங்கப்படுவதை
விரல் சூப்பி பார்த்துக்கொண்டிருந்தார்களா..?
ஏகலைவா..
கொடுக்க மறுத்த போதும்
வீரர்கள் கொண்டு
உன் விரல் வெட்டிய பாவியை மறைத்து
நீயாக கொடுத்ததாய் கூறும்
மகாபாரதக் கதையை
என்னால் எவ்வாறு
ஜிரணிக்க இயலும்..?
#சொ.சாந்தி