நிழல் தேடிவந்த நிலா

அசதியால் வந்தது ஆழ்ந்த உறக்கம்
கணநேரத்தில் பிறந்தது கனவு ஒன்று !

உருவமிலா ஊர்தியில் தனியாக பயணம்
அண்டவெளி நோக்கி அரவமிலா பாதையில் !

எதிர்கால பூமியாக அங்குமில்லை பசுமை
பேருக்கொரு மரமில்லை பாலையின் நிலை !

தவிக்கும் விண்மீன்கள் தகிக்கும் வெப்பத்தில்
செப்பின கவலையுடன் பகல்நேர துயரத்தை !

முறையிட்டன குறையாக இரவில் எமைரசிப்பீர்
பாருக்கு உரைப்பீர் பகலில்படும் எம்துன்பத்தை !

நினைப்பவர் எங்களை நிலத்தில் எவருமில்லை
நிழலின் அருமையை நிலத்தவர் உணரவில்லை !

நினைவுக்கு வரவே நிலவின்நிலைக் கேட்டேன்
நிலத்தைக் குளிர்விக்கும் சந்திரன் எங்கேயென !

தள்ளியுள்ள எங்களைவிட அருகிலுள்ள அவர்
தாங்காத நிலையால் சுற்றிச்சுற்றி வருகிறார் !

வந்தது திங்களும் வருத்தமுடன் என்னருகே
வினவியது என்னை புரிந்ததா எம்நிலையென !

மனிதரும் இல்லையிங்கு மரங்களும் இல்லை
மண்ணில் நீங்களோ மரங்களை !வெட்டுவதேன் !

பலனை அனுபவித்து பாவமும் செய்வதேன்
மழைவேண்டி பின்பு பூசைகளும் செய்வதேன் !

ஒதுங்கிட விண்வெளியில் நிழலே இல்லை
ஒருநொடி நின்றிடுக உன்நிழலில் நிற்கிறேன் !

நிழல்தேடி வந்த நிலாவை வரவேற்றேன்
நிஜமென நினைத்து உள்ளம் குளிர்ந்தேன் !

வந்தாரை வரவேற்பவன் தமிழனின் பண்பாடு
வந்தபின் வாழவைப்பது தமிழகமும் அன்போடு !

பழனி குமார்
02.11.2018

எழுதியவர் : பழனி குமார் (3-Dec-18, 7:53 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 460

மேலே