வளம்தரு வான்மழை

உயர்வானம் நிலைக்கொண்டக் கார்மேகம் நீர்தூவ
பிளவுண்ட நிலம்வழி உயிர்த்துளி உடன்பாயும்
மின்னலென மெலிந்தருவி வெள்ளமென உருக்கொள்ளும்
வானுயர் நெற்கதிர் மனம்நெகிழ்ந்து தலைசாய்க்கும்
அடுக்கடுக்காய் நிலம்தனையே புற்பூக்கள் தரைநிறைக்கும்
நிலம்கொண்டத் தாகமெல்லாம் நீர்வரத் தீர்ந்தடங்கும்
வறண்டிருக்கும் ஏரியெல்லாம் வான்பொழியப் பொங்கிவரும்
வளத்தோகைக் கொண்டமயில் நின்வரத்து உவந்தாடும்
துயில்கொண்ட விதையாவும் நிலம்பிளந்து துளிர்த்தெழும்
துறவியன்ன இலையுதிர்த்தக் கிளையாவும் உயிர்பெறும்
புவிவள்ளல் யாவர்க்கும் பொதுவிதியாய்த் தானமையப்
புகழ்படப் பொழிந்திடும் வளம்தரு வான்மழை

எழுதியவர் : பாலகிருஷ்ணன் (5-Dec-18, 6:41 pm)
சேர்த்தது : Balakrishnan VS
பார்வை : 2043

மேலே