யாதுமாகி

கருப்பு வெள்ளைக் கனவுகள்
கண்ணெதிரே வர்ணஜாலம் தீட்டுதே...
யாதுமாகிய என் துணை
என்றும் நீயே உறுதுணை !

சுவைக்கூட்டும் நிமிடங்கள் நீ கொடுக்க
சுவைக்க தொடங்கிவிட்டேன் நான் !
நம்முள் கொண்டாடப்படுவது சந்தோஷம் மட்டுமல்ல
வருத்தங்களும் வரவேற்கப்படுகின்றன !!

சுக -துக்க சம பங்கீட்டுடன்
வாழ்வியல் பாடத்தை
கற்பிப்பது நீயானால் !
கற்றறிவது நானாவேன் !!

அறிந்தும் அறியாமலும் சேர்ந்த இந்த பந்தம்
பாசக்கயிறா ? இல்லை பாசத்தின் கயிறா ?
குழப்பம் நீங்க கண்டேன் ...
சொல்லிலடங்கா என்னாசைகளை
குறிப்பறிந்து அறியும் மாயம்
உன்னிடத்தில் கண்டநொடியில்...

விதிவிலக்கில்லா விதி இல்லை
அதற்கு நானும் விதிவிலக்கில்லை...
நீளும் ஆசையில் அருகில் அணுக
வந்ததொரு சபலக்கேடு !!!
நாற்புற சுவற்றில் நான்கடியும் தூரமானதோ...

பருவநிலை மாற்றம் !!
வானிலையில் மட்டுமல்ல - என்
மனநிலையிலும் தான்!
இரண்டிலும் வெப்பச்சலனம் கரை கடக்க
மழைப்பொழிவு நின்றபின்னும்
இதமாய் நனைகிறேன் உன்னுடன் !

கன்னமாடிய பூசுமஞ்சள் வெட்கத்தில் சிவந்தேற
நிறமாற்ற அறிவியல் அரங்கேற்றம் உன்னுடன்!!

கேள்வி மட்டுமே கேட்டு பழகிய எனக்கு
பதிலாய் நீயே வந்தாய்....
சிலநேரம் சராசரி பதிலாய் !!
சிலநேரம் சரியான பதிலாய் !!!
பாழாய்ப்போன பழக்கம்
இப்போதும் கேள்வி கேட்கிறேன்
உனக்கான கேள்விகளுக்கும்
நான் தான் பதிலா ?...
கேட்டதிலேயே விடையென நீ புன்னகைக்க
வினகிக்கும் என் குணம் கண்டது
வினாஎழுப்ப முடியா விடையை !!!

எழுதியவர் : சௌந்தர்யா (7-Dec-18, 6:54 pm)
Tanglish : yathumaagi
பார்வை : 501

மேலே