ஒரு 18 ஆம் தேதியின் டைரி உளறல்கள்

ஒரு 18 ஆம் தேதியின் டைரி உளறல்கள்

அழகில்லாதப் பெண்களை அன்னையாக ஏற்கும் ஆண்கள்
அழகில்லாதப் பெண்களை
தங்களுடைய மனைவியாக ஏற்காதது ஏன் ..

சில வலிகளை சுமந்து கடப்பதைவிட
யாருமற்ற பயணத்தில்
உதிர்த்துப் போகலாம்

அன்று‌காலை சொந்த ஊரிலிருந்து கெளசல்யா அழைத்திருந்தாள்
செல்வியின் இறப்பை அறிவிக்க

அவ செத்ததுதான் சரி .. தாவணிப் போட்ட காலத்திலிருந்து தலைக்கு மல்லிகைப்பூ வச்சா எங்க அந்த வாசனை கல்யாண ஆசையைக் கொடுத்திடுமோ .. இந்த முகத்தை
எவனுக்குப் புடிக்கும் னு யோசிச்சு யோசிச்சு
பாக்கவர்ற ஒவ்வொருத்தன் முன்னாடியும்போயி அவஞ் சிரிக்க கூட ஊர் சிரிக்க நின்னு .. பட்டதெல்லாம் போக
இன்னுமொரு கல்யாண ஆசை மனசுக்குள்ள மலட்டுக் காண வாழ்ந்திருப்பதைவிட அவ செத்துப்போனதுதான் சரி .. ஆனா அரளி வெத அரைச்சு சாப்பிட்டு தற்கொலைப் பண்ணி செத்திருக்கவேணாம் அவ

செல்வி .. தொடர்ந்து நான்காம் முறையும் மகன்தான் வேண்டும் என முயற்சித்ததில்
நான்கும் வரிசையாய் பெண்களாகவே பிறந்த ஒன்றுவிட்ட எடுப்புப்பல் குறுவிவசாயி இளையப்பனின் மூத்தமகள்

செல்விக்கும் இரண்டாவதவள் ரமணிக்கும்
அப்பாவைப்போலவே எடுப்புப் பல் ஆனதால்
அவர்களுடைய அழகு அதில் மறைந்து போனது .. கடைசி இரு இளைய சகோதரிகள்
அம்மாவின் சாயலில் இருந்ததால் குறையில்லை

அல்ஃபோன்ஸா ப்ளே ஸ்கூலில் என்னுடன் ஒரே நாளில் சேர்ந்து ஆறாம் நாளில்
பிரித்துக் கொண்டுச் செல்லப்பட்டாள்
காரணம் .. குடும்ப சூழல் . ஊரில்
எலிமெண்டரி ஸ்கூலில் சேர்த்துவிட்டார்கள்

எங்க வீட்டிலிருந்து நேரே பார்த்தால் ஒரு 60 மீட்டர் தொலைவில் செல்வி வீடு முன் கதவும்
அவங்க கொல்லைப் புறமும் தெரியும்

நான் போர்டிங்கிலிருந்து லீவிற்கு ஊருக்குப் போகும்போதெல்லாம் அங்கிருந்து கவனிப்பாள் ..வாசல்வரை வந்து இங்க வா ன்னு பக்கத்தில் கூப்பிட்டு எடுப்புப் பல் தெரிய
எதார்த்தமா சிரிப்பா.. நீ வந்திருக்கன்னு சொன்னாங்கடா அதான் ஒரெட்டுப் பார்த்துட்டுப் போலாம்னு சொல்லி
அவங்க கொல்லை யிலிருந்து பறிச்ச மாங்காய் சீத்தாக் காய் எதுவானாலும்
ஒளிச்சுகொண்டாந்து .. இது காயா இருக்கு கொண்டுப்போயி அரிசித் தொட்டிக்குள்ள வச்சு பழமானதும் சாப்பிடு சரியா
நா போய்ட்டு வரவா ன்னு சொன்னவளை இருடி ஒருவாய் காப்பிக் குடிச்சிட்டுப் போலாம்னு சொல்லக் கூடத்தெரியாம
அவ கையில இருந்து பழத்தை வாங்குனதும் .. டிர்ர்ர்ர்ர் ன்னு வண்டி ஓட்டியமேனிக்கு அரிசி மூட்டைக்குள்ள
வச்சு தெனோ பழமாகிருக்கான்னு
தொட்டுத் தொட்டுப் பார்ப்பேன்
விவரம் தெரிஞ்ச பின்னாள் ல அந்த
அன்பை யோசிச்சு எத்தனையோ தடவை நெகிழ்ந்திருக்கேன் .. அப்படித்தான்
நல்ல ஒரு அன்பால் நாங்களும் அவங்களும்
சூழ்ந்திருப்போம்

வீட்டுமுட்டத்துல
குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்குறா
எங்க வீடு கதவு த் திறந்திருந்தா
அங்க இருந்து அவளால பார்க்கமுடியும்..

போனமுறை ஊருக்குப் போனப்போக் கூட
வீட்டில் நிறைய சொந்தங்கள் இருந்தாங்க
என்னைப் பார்க்கவந்தவ, நீ வந்திருக்கிறதா சொன்னாங்க . கோயிலுக்குப் போயிட்டு
வரும்போது "ஒசக்கேரி"யில உன் வண்டி நிக்கிறதப் பார்த்தேன் ... அதான்டா பார்த்துட்டுப்போலாம்னு வந்தேன் னு சொல்லி
கூடியிருந்த சொந்தக்காரங்க முன்னாடி
எனக்குக் கொடுக்கக் கூச்சப்பட்டு ஒரு சிறியப் பைக்குள்ள எதையோ சேல முந்தானைக் குள்ள ஒளிச்சுவச்சிருந்தா .. நான்தான் என்னடி அதுன்னு கேட்டேன் .. " இல்ல கொல்லையில் கொஞ்சம் பச்சை அவரைக்காய்ச்சிருந்துச்சு .. வீட்டுக்கு ஒருவேளை போக உனக்குக் கொண்டாந்தேன்னு சொன்னா " அதெல்லாம் எங்கயும் கிடைக்காதது .. நீலகிரிப் போயி
இறங்குனதுல இருந்து .. எங்க பூமியிலும் இல்லை .. எங்கம்மா ஊருக்குப் போயும் கிடைக்கலை போற படகாஸ் வீட்ல எல்லாம் வெட்கத்தைவிட்டுக் கேட்டப்போக் கூட கிடைக்கலை .. அவ கொடுத்தப்போ அது
அவ அன்போட பொக்கிஷமா தெரிஞ்சது..
எங்கே குடுன்னு ஆசையா வாங்கிட்டவன் .. அதையேப் பார்த்து பூரிச்ச நொடிக்குப் பின்னால அவ முகத்தைப் பார்த்து
என்னடி இப்டி ஆய்ட்ட நல்லா இருக்கதானே ன்னு கேட்டப்போ எப்போவும்‌போல எடுப்புப் பல்லுத் தெரிய எதார்த்தமா சிரிச்சிட்டு
எனக்கென்னடா குறை நல்லா இருக்கேன்னு சொல்றதைத் தவிர..அவ தேகம் இன்னும் ஒரு ஆண் விரல்கள் ஸ்பரிசிக்காத கொதிப்பில் கொப்பளித்து உணங்கிக் கருத்துவிட்டதை சொல்லிக் கொள்ளவா முடியும் அவளால்

நல்லா நினைவிருக்கு, ஆறுவருஷம் முன்னாடி நடந்த விஷயம்.. அன்னைக்கு மணிமாரன் மாமா பொண்ணு சரண்யாவோட வளைகாப்பு,
சரண்யாவோட அண்ணா பொண்ணு
செல்விக்கிட்டதான் டியூஷன் போறா .. அன்னைக்கு லேட் .. கைய்யில பலகாரத் தட்டோட போனா .. அப்போ செல்வியோட அம்மா அவ தங்கச்சி ரமணிய சத்தம்போட்டு திட்டி அடிச்சிக்கிட்டிருந்தாங்க .. என்ன ஏதுன்னு விசாரிக்கப் போனப்போதான் தெரிஞ்சது .. சரண்யாவும் அவ புருஷனும் தனியா இருக்கிறதை ஜன்னல் வழியா பார்த்த ரமணி ..
புள்ளத்தாச்சிக் கணக்கா. வயித்துல தலையணையை வச்சிக்கிட்டு ..அந்த குழந்தையை புருஷனா நடிக்கச் சொல்லி .. கட்டிப்புடிச்சு நின்னிருக்கா .. அந்த ஆசைய நிறைவேத்திக் கொடுக்க முடியாத ஆற்றாமை அவங்கம்மாவுக்கு

நா ஊருல இருக்கிறப்போ .. ஊரு பள்ளீக்கூடம் போய்ட்டு வார புள்ளைங்க எல்லோரும்
நம்ம தெருவ கடந்துபோறப்போ தலைக்குனிஞ்சு வெக்கப்பட்டுக்கிட்டேப் போகுங்க .. அப்போ போயி இடைக்கு நின்னு
அழகா இருக்குற பொண்ணுங்களைவிட்டுட்டு
செல்வியைப் பார்த்து லவ் யூ சொல்லுவேன்
அதே எடுப்புப்பல் விரிய அதே சிரிப்பு அம்முறை முகம் சிவந்திருக்கும் அவளுக்கு .. ஒரு கைய்யால ஸ்கூல் பைய்யோட வாரைப் புடிச்சு, இன்னொருக் கைய்யால ஒருபக்க முகத்தை மூடி ச்சீ ன்னு சொல்லும் .. அப்போப் பார்த்து சொல்லுவேன் .. ராசாத்திப் பூவாட்டம் அழகா இருக்க .. ச்ச முறை இருந்திருந்தா நானே உன்ன கட்டிக் கொண்டுப் போயிருப்பேன்னு சொல்லும்போது .. அவ கண்கள் ல ஒளிஞ்சிருக்கிற, தா அழகில்லன்ற குறுகிய மனப்பான்மைப் போயி எல்லாரு முன்பிலும் ஒரு கர்வம் தலைக்கெடுப்பதைப் பார்ப்பேன் ..

வேறென்ன எனக்கு செய்துவிட முடியும்
இப்படிப்பட்ட வார்த்தைகள் சரியாத் தவரான்னுக்கூட எனக்கு யோசிக்கத் தோணலை .. ஆனா அந்நொடி இப்படிப் பட்ட வார்த்தைகளைக் கொடுக்கும்போது
அவை சிரிச்சா ஆமா அதுமட்டுமே மனசுக்கு முன்னாடி நின்னுச்சு

வேறன்ன செய்யப்போறேன் பெருசா
இந்த வார்த்தைகள்
வேண்டுபவர்களுக்கு
இம்மாதிரி
நாலு வார்த்தைகள் கொடுக்கிறதைத் தவிர
என் பார்வை
யாரும் பார்க்கவே விரும்பாத
ஒருத்தியின்‌ கண்கள்
சிலநொடி
நிலம் சாய வேண்டுமென்றால்
வீசுகிறேன்
என் சிரிப்பு
அவள்களில் ஒருத்தியை
முகம் நாணிக்கச் செய்வதானால்
நகம் கடிக்க
பாத கோலங்கள் நிலம் வரையுமென்றால்
அவளுக்கென
சிரித்துவிட்டுதான் போகிறேனே

வெள்ளிக்கிழமை திங்கட்கிழமைக் கோயில்கள்
பெண்களால் ஆனது
ஒரு மணிக்குப் பள்ளிக்கூடம் முடிந்து
மூன்றரை மணிக்கு
ஊருக்கு வந்தால்
எதிர்ப்படும் ஒருத்தி அழகாய் இருப்பாள்
என் கண்களால் பார்க்கின்ற
வினாடிகளைக்கூட
அவள் கண்களால் கணக்கிடமுடியாது
குளிச்சி ரெடியாகி
ஆறு மணிக்கோ அது கடந்தோ
கோயிலுக்குப் போனா
எல்லோரும் வந்து போனப்புறம்
அந்தப் பார்வைகள் என்னைத் துலக்கிக் கொண்டு
உட் கா ந் திரு க்கும்
பின்னாடிவழியேப் பார்த்தவனாக
படியேறும் முன்னால்
கம்பத்து மணியை ஓங்கி அறைகிறேன்
இருமுறை அலறும்
திரும்பிப் பார்க்கும்
பார்வைகளனைத்தும்
தப்புத் தப்பாய் சிதறிவிழும்
கடைசி நொடி
விடைப் பெறும் பார்வைப் பூரிப்பை
பொய்யாயேனும்
செல்வியிடம் பகிர்ந்தால் தான் என்ன
பகிர்கிறேன்

அந்த முதிர்ந்தவர்
ப்ரியப்பட்ட ஒரு மகனைப்போல
சிற்பத்தில் நல்ல ஒரு தோழனாய்
குழந்தைகள் விரும்பும் ஒரு அண்ணனாய்
என்னை ஏற்றவர்களுக்கென
இன்னும் வாழ்ந்து முடிக்கவில்லை,,
இது குறைதான்
ஊரில் அதிகப்படியாக வசிக்க முடியாததால்
குற்ற உணர்ச்சியும் தான்

கடவுள் எனக்கு ஒரு பத்து பதினைந்து
அவதாரம் கொடுத்திருக்கலாம்
அன்று இறந்தவளைப்போல
நிறையப் பேருக்கு
முறையிருப்பின்
கல்யாண வரம் அளித்திருப்பேன்

கட்

எங்கோ தூரமாய்
நடந்து போகையிலோ
பேருந்தில் ஒரு இருக்கையைக் கைப்பற்றி
இருந்துவிட்டு
அது நகர்கையில்
எதையோ வெறித்தபடி
எனக்குள் சில குணங்களை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
எழுதி எழுதி வரும்போது
எனக்குள் நான் எஸ்டாப்ளிஷ் ஆகிறேன்
காரணம்
நன்கு எஸ்டாப்ளிஷ் ஆன குணத்துவங்களுக்கு தான்
எல்லா சூழல்களிலிருந்தும்
குதிர்ந்த பக்குவத்தோடு நழுவிப் போய்விடக் கழியும்

கட்

கொஞ்சநேரம் முன்பு
அவள் அழைத்திருந்தபோது
ஒரு சந்தோஷவார்த்தை அறிவித்திருந்தேன்
தற்போது அது முடங்கியிருந்தது
மீண்டும் அழைக்கக்கூடும்
எதனாலோ நான்
நிலைத் தாழ்ந்திருப்பதை அறிந்தால்
அழுவாள்
சந்தோசமாய்
இருக்கட்டுமே என்று சொல்லியதை
அழைக்கிறபோதெல்லாம்
அழுதுப் பழக்கப்பட்டவளுக்கு
எதையும் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம்தான்
சாலையில் சிரிப்பொலிகளின் நெரிசல்கள்
மூச்சிறைக்க ஸ்தம்பிக்கிறேன்
இதுப்போல கழுத்து நெரிக்கும் அவஸ்த்தைகளிலிருந்து
கொஞ்சம் தனித்திருக்கலாமா என்றேத்
தோன்றுகிறது
கண்கள் இருண்மை அடையும்போது
பாதை அறியாமல்
அறைமாறி கதவுத் திறக்க சிரமிக்கிறேன்
முன்னறையிலிருந்து
புறத்துவரும்
பரிட்சயமில்லாதவரைக் காணும்போது
அறைமாறிப் போனதை
உள்ளுணர்கிறேன்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (21-Dec-18, 6:26 am)
பார்வை : 124

மேலே