குணவான் நையாண்டி மேளம் 2
குணவான்
வழக்கமாக இந்த நேரம்
இங்கு உட்கார்ந்திருப்பார்
இதோ வந்து விட்டார்
உள் மடிந்த சட்டை பேண்ட்
அனாயசமான சிரிப்பு
கையிலிருந்த
நாளிதழைப் பிரித்து
நாட்டு நடப்பில் ஆய்வு
கைகளை நீட்டி நீட்டி
விமர்சனம்
நடுநடுவே
கைபேசியில் உரையாடல்
தொண்டை கரகரப்பான போது
கொண்டு வந்த
பாட்டிலில் தண்ணீர்
அருகில் சென்றேன்
புன்னகைத்தார்
நான் கொடுத்த
உணவுப் பொட்டலத்தை
நன்றி சொல்லி ஏற்றார்
நான் புறப்பட்டேன்
அவர் பேசிக் கொண்டே
இருந்தார் -
எதிரில் யாரும் இல்லாமல்.