உயிர்த்துடிப்பு

இலைகளை எல்லாம் உதிர்த்துவிட்டு காய்ந்த விறகாக நின்ற அந்த மரம் பேய்யின் வீடென்று அக்கம்பக்கமெல்லாம் ஒரே பேச்சு,
காற்றில் மெல்ல மெல்ல வந்து போச்சு.
மற்ற மரங்களெல்லாம் பசுமை மாறாமல் பூத்து இலைகளோடு நிழலை உயிரினங்கள் இளைப்பாறக் கொடுக்க அந்த மரம் மட்டும் பசுமை மறந்து ஒரு பசுந்தளிர் இலைகூட இன்றி பூமிக்குப் பாரமாய் நின்றிருக்க இது செத்த மரமடா என்று பலரும் அது காதுபடவே கூறித்திரிய,
மனதிற்குள் குமுறியதோ?,
வசந்தகாலம் ஒன்று அதற்காக உருவாகாதோ?
வெட்டி வீழ்த்திட வந்த கும்பல் வெகுண்டோட சாய்ந்தது அந்த மரம்,
சாய்ந்ததைப் பல துண்டுகளாக்கி வாகனம் ஏற்றிச்சென்று சுடுகாட்டில் தனலாக்கிட கனவொன்று கண்டேன்.
பதறி எழுந்தே அம்மரம் நோக்கி ஓடி சென்று பார்த்தேன்.
சில பசுந்தளிர்களை வெளியே காட்டியபடி வீற்றிருந்தது.
காய்ந்துபோன பட்ட மரமென்று வெட்டி எறிய நினைத்தேன்.
வேரில் உயிர் உள்ளது என்று ஊக்கமாக உணர்த்தியது அந்த மரம்.
கோபங்கள், ஏமாற்றங்கள் நம்மை காய்ந்த மரமாக்கலாம்.
அதனால் வாழ்வே முடிந்ததாக அர்த்தமில்லை.
முழு பரவெளியே வெறுமையால் சூழ்ந்தாலும் அந்த வெறுமைக்குள் வீற்றிருக்கிறது அண்டசராசரங்களையும் இயக்கும் காணவியலாத உயிர்த்துடிப்பு.