உலகம் ஒருநாள் உணருமடா

நீதியும் நேர்மையும் நிலைகலைய –பல
சாதியச் சண்டைகள் நடக்குதடா
மோதலும் சாதலும் நிறைந்திருக்கும் –ஒரு
பாதகம் கொண்ட உலகமடா !

வன்முறை எங்கும் வலைவிரிக்க –வெடிக்
குண்டுகள் வெடித்திடும் உலகமடா
புன்னகை நெஞ்சில் பூப்பூக்க –ஒரு
புதிய உலகினி வருமோடா !

நஞ்சினை விதைத்திடும் மாந்தரினம் –ஒரு
நாயினும் கீழாய் ஆனதடா
பிஞ்சினைக் கூட பிய்த்தெறியும் –பெரும்
பேய்க்குணம் நிறைந்த உலகமடா !

மதமும் மதமும் மோதுவதால் –பல
மனித உயிர்கள் மடியுதடா
பதப்பட தோன்றிய மதமின்று –ஒரு
பதற்றம் நிறைந்து போனதடா...

அறிவுகள் வளர்ந்து உயர்ந்தாலும் –ஒரு
அணுவினால் உலகம் அழியுதடா
பறந்து சென்று வாழ்ந்திடத்தான் –ஒரு
புதிய உலகைப் பார்க்குதடா...

செவ்வாய் கிரகம் சென்றாலும் –நாம்
சிரித்து வாழ இயன்றிடுமா ?
இதயங்கள் இங்கினி மாறாமல் –நல்
இனிமைகள் வந்தினி புகுந்திடுமா ?

ஒருவரை ஒருவர் அழித்திடவே –தினம்
உறக்கம் இன்றிக் கிடக்கின்றார்
கருவறை புகுந்தே அழிக்கின்றார் –இக்
கயவர் கூட்டம் திருந்திடுமா ?

புத்தன் காந்தி வந்தாலும் –அந்த
புனித ஏசு விழித்தாலும்
உத்தம அல்லா சொன்னாலும் –இவ்
வுலகம் அவர்களைப் பழித்திடுமே !

குரானும் பைபிளும் அழிகிறது-பகவத்
கீதையும் இங்கே கிழிகிறது
தீராத் துயரங்கள் விழிக்கிறது-தினம்
தீங்கினை அள்ளித் தெளிக்கிறது.

மனித நேயம் செத்ததடா –மதி
மயங்கிக் கிடக்கும் உலகமடா
உலகம் ஒருநாள் உணருமடா –இனிய
உறவுகள் அப்போ மலருமடா ......

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (22-Dec-18, 8:30 pm)
பார்வை : 195

மேலே