கடவுளின் மைந்தன்
ஆயிரம் பல்லாயிரம் கைகள்
கூடி ஆர்ப்பரித்து பாடி பரவசம் கொண்டு
தேடித்துழாவும் வெளிக்கு அப்பால்
மெல்லிய வருத்தப்புன்னகையுடன்
நீ நின்றிருப்பதைக் காண்கிறேன்.
தனித்து, பசித்து, விழித்திருக்கும் ஒருவன்
தனக்கு தான் மட்டுமே என
தன் நெஞ்சில் கை வைக்கும்போது
அந்தக்கை உன் பாதங்களில் படுவதையும்
இனிய சிரிப்புடன்
அவன் தலையை நீ வருடுவதையும்
கண்டிருக்கிறேன்.
என்ன விளையாடுகிறாயா?
நாங்கள் எளியமக்கள்.
வெள்ளத்தில் செல்லும்போது
ஒன்றோடொன்றுபற்றிக்கொண்டு பந்தாக ஆகிவிடும்
எறும்புகளைப்போன்றவர்கள்.
கூடி நிற்கையிலேயே நான் என்று உணர்பவர்கள்
தனித்திருக்கையில் நாம் நாம் என்று தவிப்பவர்கள்
வெறுப்பு இல்லாமல் பிரியத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள்.
பிரித்துக்கொள்ளாமல்
ஒன்றுபட முடியாதவர்கள்.
இதோ உன் அடையாளத்தை ஒட்டிக்கொண்டுவிட்டோம்
இதோ உனக்கான சிம்மாசனம்
இதோ உனக்கான பலிகள், காணிக்கைகள்.
உன் சொற்களாலேயே உன்னைச்சுற்றி
ஓர் உறுதியான முள்வேலி
வந்து இங்கே அமர்க.
எங்களுக்கு தெய்வமாக இரு.
ஆனால் நீ தெய்வமல்ல என்கிறாய்.
நீயும் என்னைப்போல் ஒரு மனிதன் தான் என்கிறாய்.
நீயும் கண்ணீர் விட்டதுண்டு,
நீயும் நம்பிக்கை இழந்ததுண்டு,
நீயும் நெஞ்சில் கைவைத்து
கடவுளென உணர்ந்ததுண்டு,
என்கிறாய்.
புரிந்துகொள்ள முடியவில்லை உன் புன்னகையை.
மனிதர்களால் தோற்கடிக்கப்பட்ட நீ
மனிதர்களின் தெய்வமாகத்தானே இருக்கவேண்டும்?
தோற்கடிக்கப்படும்போதுதானே
தெய்வங்கள் விண்ணுலகுக்கு மீள்கின்றன?
ஆனால்
இந்த குளிர்ந்த தனித்த இரவில்
வெளியே உனக்கான பாடல்கள் கேட்கும்போது
உனக்கான தீபங்களின் ஒளி அறைக்குள் நடமாடுகையில்
உன் சொற்களில் ஒன்று என் மீது தைக்கிறது
‘என் கிருபை உனக்குப் போதும்’
தனித்தவனே, பசித்தவனே, விழித்திருப்பவனே,
உன்னால் எங்களை புரிந்துகொள்ள முடியும்
ஏனென்றால் நீயும்
மனிதனாக இருந்திருக்கிறாய்.
கண்ணீருடன் உன் கரங்களை
உன் நெஞ்சில் வைத்து
‘நான் கடவுளின் மைந்தன்’ என்று சொல்லியிருக்கிறாய்!
------------------------------------------------------------
2 comments1 ping
tdvel
December 25, 2009 at 2:08 pm (UTC 5.5)
இக்கவிதையில் மதம் என்ற சிலுவையில் பிணைக்கப்பட்ட இயேசுபிரான் இறங்கிவந்து என் தோளைத்தொடுவதை உணரமுடிகிறது.
த.துரைவேல்
oshonis
March 11, 2010 at 9:20 pm (UTC 5.5)
ஐயா ,,,சிலை வடிவமாக இருக்கும் என் உணர்வுகளை நிஜத்தில் பார்கிறேன் உணர்கிறேன்…உங்கள் வார்தைகள் என் உணர்வுகளை தட்டும் பொழுது…..
ஓஷோ.