உழுதவன் கணக்குப் பார்த்தால் -------------------------- அராமசாமி
இன்று படித்தது
நானும் ஒரு இயற்கை தென்னை விவசாயி .
எழுத்து எழுதப்படும்போது வலுவாக மாறும்
வாசிக்கும்பொழுது நிகழ்வுகளாக விரியும்
வேலாயுதம் ஆவுடையப்பன்
------------------------------------------------------------------------------------------
இன்று ஒரு விவசாயியின் தோட்டத்திற்குப் போயிருந்தேன். அவர் விவசாயி மட்டுமல்ல. என்னைப்போல மாதச்சம்பளக்காரர்’ என்றாலும் இப்போதும் விவசாயத்தை விட்டுவிடவில்லை. எனக்கும் விவசாயம் செய்வது எப்படி என்று தெரியும். ஆனால் கைவிட்டு கால் நூற்றாண்டு ஆகிறது. நான் ஒரு சிறுவிவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன், அதிகமாக இருந்தால் மொத்த நிலத்தின் அளவு 5 ஏக்கருக்குள் தான் இருந்திருக்கும்.
அவர் விவசாயத்தை விடாமல் இருப்பதற்குக் காரணம் அவரது கிராமம் திருநெல்வேலியிலிருந்து அதிக தூரமில்லை.20 கிலோ மீட்டருக்குள் இருக்கிறது.ஒருநாள் விட்டு ஒருநாளாவது போய்வர முடியும். அத்தோடு அவர் நடுத்தரவர்க்க விவசாயி. வெவ்வேறு இடங்களில் அவர் குடும்பத்திற்குச் சொந்தமான நிலபுலன்களாக 25 ஏக்கருக்கும் மேல் இருக்கும். எல்லா நிலங்களிலும் அவரால் விவசாயம் செய்யமுடியவில்லை. எட்டு ஏக்கரில் இருக்கும் இந்த இடத்தில்தான் பயிர்செய்ய முடிகிறது.
எப்போதும் அவரோடு நடக்கும் உரையாடலில் விவசாயம் தொடர்பான பேச்சு கணிசமாக இருக்கும். அதனால் ஒரு தடவையாவது அவரது தோட்டத்திற்கு வரவேண்டும் என்று அழைத்துக் கொண்டே இருந்தார். அவரது தோட்டத்திற்குப்
பல தடவை அழைத்தும் போகமுடியாமல் போனது. இன்றுதான் போக முடிந்தது.
நெல்லும் கரும்பும் வாழையும் என நீரையும் ஆட்களையும் நம்பி நடந்த நஞ்சை விவசாயத்தை முழுமையாகச் செய்யமுடியவில்லை. தேவையான தண்ணீரும் இல்லை. வேலைக்குத் தேவையான ஆட்களும் கிடைக்கவில்லை. நஞ்சையும் புஞ்சையும் தோட்டமும் தொரவுமாக இருந்த விவசாயம் இன்று இது கொஞ்சம்;அது கொஞ்சமாக விளைவிக்கும்படி மாறிவிட்டதைச் சுற்றிக் காட்டினார்.
அவரது குடும்பத்திற்குத் தேவையான நெல்லைப் பயிரிடுகிறார். அதுவே மொத்த நீரின் முக்கால்வாசியைக் குடித்துவிடுகிறது. மீதியுள்ள நீரில் சொட்டுநீர் பாசனம்.
தென்னை இருக்கிறது; புளி இருக்கிறது; மா இருக்கிறது. எலுமிச்சை இருக்கிறது. எல்லாம் கைவிரல்களில் எண்ணிவிடும் மரங்கள் அளவில் தான் இருக்கின்றன.
சிறுகிழங்கு, சீனிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு என கிழங்குவகைகள் பயிரிட்டுள்ளார்.
தக்காளி, கத்தரி, மிளகாய், வெங்காயம் விளைகின்றன
பருப்புவகைகளாக துவரை, உளுந்து, பச்சைப்பயறு எனப் பருப்புவகைகளும் விளைவிக்கிறார்..
எல்லாவிளைச்சல்களும் அவரது தேவைக்கு விளைவிப்பதுபோல விளைவிக்கிறார். ஒவ்வொன்றும் சில செண்ட் அளவில்தான். இவ்வகை விவசாயத்தைச் சந்தைப்படுத்த முடியாது. எல்லாவற்றையும் மொத்தமாக வாங்கிப் போக வியாபாரிகள் வரும் அளவிற்கு இல்லை.அளவு குறைவாக விளையும்போது சந்தைக்கு விவசாயியே கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும். தரம்பிரிக்க முடியாது. ஒவ்வொன்றையும் கடைகளுக்கு அவரே கொண்டு போய்க் கொடுக்கிறார். விவசாயியே கொண்டு வந்தால் கடைக்காரர்கள் சொல்லும் விலையைத்தான் பெறவேண்டும்.
மூன்று தலைமுறைக்கு முன்பு கட்டிய அவரது வீடு நடுத்தர விவசாயத்திற்கும் மேலே ஒரு நிலக்கிழாராக இருந்த குடும்பம் என்பதைக் காட்டுகிறது. சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட மரத்தாலான தூண்களும் மாடங்களும். விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு கோழி, ஆடு, மாடுகள் வளர்க்கும் கொட்டில்களால் விவசாய நிலைத்தை மாற்றலாமா என்று யோசித்து வானம் தோண்டிவிட்டார்.