தை மகள் வந்தாள்

தை மகள் வந்தாள்

தமிழுக்கு நிறம் தந்த தை மகளே
தமிழர்க்கு உரம் தந்த புதுமகளே
உழவற்கு உயிர் தந்த தமிழ்மகளே
பிழைப்போரும் இளைப்பாறும் தரு நிழலே

அன்பில் யாம் நிலைத்திட அருள்செய்வாய்
பண்பால் பார் வெல்ல துணையிருப்பாய்
இல்லமெல்லாம் இன்பம் வாரி இரைத்திடுவாய்
வெல்லத்தோடு அரிசியில் வெந்தமுது தந்திடுவாய்

பந்தங்கள் கூடி பாசத்தில் திளைத்திடுவோம்
சொந்தங்கள் கூடி சோகமதை மறந்திடுவோம்
மஞ்சள் கரும்போடு நெஞ்சம் நிறைந்திடுவோம்
பஞ்சமில்லா வாழ்வு பாருக்கு தந்திடுவோம்

சேற்றுக்குள் களையெடுத்து வயிற்றுக்கு சோறிடுவோம்
நேற்றோடு வந்த சுமையை காற்றோடு கலந்திடுவோம்
கடந்தாண்டு கரைக்கண்ட புயலெல்லாம்
காவியமே உன் காலடியில் கரைந்திடட்டும்

சொத்தாக நாம் போற்றும் உழவரெல்லாம்
முத்தான வாழ்வு பெற தைமகளே வரம் அருள்வாய்
வற்றாத நீர்தனையே குன்றாமல் வழங்கிடுவாய்
பற்றாக்குறை நீக்கி பசிதன்னை போக்கிடுவாய்

பெற்றோரும் பெருமையுற உற்றாரும் உளம்மகிழ
நற்றமிழே நீ எமக்கு நல்வாழ்வு தந்திடுவாய்
முற்றிய பயிரெல்லாம் முண்டாசில் சுமந்துவர
வற்றிய வயிறெல்லாம் வளமிங்கு காணட்டும்

மங்கள வாத்தியங்கள் பொங்கியெழ
எங்குமதில் தமிழன்னை மகிழ்வுபெற
பொங்கட்டும் பொங்கல் இன்று
தங்கட்டும் இன்பெமெல்லாம் இல்லமெங்கும்

எழுதியவர் : இளவல் (14-Jan-19, 2:25 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 683
மேலே