தந்தையின் தவிப்பு

மஞ்சத்தில் உன் தாயுடன் - நான்
மகிழ்ந்தவுடன் நீ கருவாக உருவாகவில்லை
கடும் போருக்குப் பின்னே - நீ
கருப்பையில் சிறு அரும்பாய் ஆனாய்
அதற்கு பின்னே தான் அக்கத்து பக்கத்தாரின்
அறுவெறுப்பான பேச்சுகள் அவியத் தொடங்கின
சின்னஞ்சிறு பிராயத்தில் விழுந்து எழுந்து – நீ
சிறு சிறு சிராய்ப்புடன் வருவாய் - இதயம்
சிதறும் அளவுக்கு பதறிப் போவேன் நான்
அரும்பாகி மொட்டாகி அழகு காயானாய்
அகிலத்தில் உள்ள அனைத்திற்கும்
அடங்காத ஆசைக் கொண்டாய் - நான்
இயன்றவரை முயன்று பெற்று உன்னுடைய
முழு ஆசையில் பாதியேனும் சாதிக்க செய்தேன்
எந்நாளும் படிப்பில் நீ படுசுட்டி இல்லையேனும்
வாழ்த்தேவையானவற்றிற்கு வளமுற கற்றாய்
ஏளனப் பேச்சிற்கு இடமில்லாமல்
ஏற்றமிகு வாழ்க்கைக்குத் தயாரானாய்
தமிழக அரசின் மதுக்கொள்கைக்கு முரணான
என்னிலிருந்து முரண்பட்டாய் நீ
திங்களுக்கு ஒரு முறையேனும் அரசுக்கு
திரவியம் கொடுக்க தவறவில்லை நீ என அறிந்தேன்
என் தோளினும் உயரமான நீ - உன் சக
தோழர்களுடன் சாகசங்கள் செய்ய முயன்றாய் - நான்
சட்டென கண்டித்து சாட்டையை சுழட்டியதும் உண்டு
சத்தமும் போட்டாய் சாதுவாய் பயந்தும் சென்றாய்
எண்ணிக்கை இல்லா நாட்கள் இப்படி கழிந்தன
உன் தாயவள் என்னில் பன்மடங்கு பாசமாய் உன்னிடம்
அன்று நீ அழகாய் உடையணிந்து அதிவேகமாய்
இருசக்கர வாகனத்தில் சென்றாய் - பின்
இடிகேட்ட நாகமாய் நான் இழந்தேன் என்னை
தரைப்பாலத்தில் மோதி தவிடாய் நீ ஆனாய் என்றும்
உயிர் தாளமுடியா செய்திக் கேட்டு தகர்ந்தேன் நான்
உன்னின் நிழலில் வாழலாம் என்றெண்ணினோம் - இன்றோ
எங்களையே நாங்கள் சிதைக்க துணிந்துள்ளோம்.
__ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (22-Jan-19, 7:36 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 118

மேலே