பெரிய மனுஷன்

அவர்
ஊரில் பெரியமனுஷன் என்று
பெயரெடுத்தவர்...
அவரை
மேடைதோறும் தலைமைதாங்க அழைக்கிறார்கள்...அவரும்
குறிப்பேடு பார்த்துப்பேசி கைதட்டல் வாங்கி விடுகிறார்....
யாருக்கு பேசுகிறோம் என்பது அவருக்கு புரிவதில்லை!
அவரை
தர்மகர்த்தா என்று அழைக்கிறார்கள்.... தர்ம
காரியங்கள் எல்லாம் செய்திருக்கிறார்...
ஆனால் எந்த உயிருக்காகவும் மனம் உருகியதில்லை!
அவர்
ஒரு புத்தக பிரியர்... வீட்டு
அலமாரியில் இல்லாத புத்தகங்கள் இல்லை..
ஒன்றையும் அவர் படிப்பதில்லை!
அவரை
இசை கச்சேரிக்கெல்லாம் அழைப்பார்கள்...
இசை வித்வான்கள் எல்லோருடனும் பழக்கமுண்டு
அவருக்கு ராகமும் தாளமும் தெரியாது!
அவர்
ஊர் ஊராக சென்று வழிபடும் பக்திமான்...
நெற்றியில் பட்டையும், கழுத்திலும் கொட்டையும் அணிந்திருப்பார்..
ஆனால் ஒருநாளேனும் பிறருக்காக வேண்டியதில்லை!!!
அவர்
செய்த பாவங்களுக்கு ஊர் ஊராக கடவுளின்
காலடியில் விழுந்து வணங்குகிறார்...
அவரது காலிலும் பலர் விழுகிறார்கள்...
அவர் ஊரில் பெரியமனுஷன்!