தன்மீட்சி – ------------கடிதங்கள்

தன்மீட்சி
--------------
வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்களில் நாம் எதிலாவது மீண்டு மீண்டு அடுத்ததை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். மீட்சியின் தொடரே வாழ்க்கை.

ஒவ்வொருநாளும் காலையில் போர்வையை காலால் விலக்கி தூங்கி எழுவது ஒருவகை பிறப்பு என நான் நினைப்பதுண்டு. காலால் உதைத்து எம்பி எழுந்து முகம் வெளிக்காட்டி கருவறைநீங்குதல். இருண்ட சிறையிலிருந்து கருப்பாதை வழியாக ஒரு பயணம். ஓர் அதிர்ச்சி, கண்கூச்சம், மூச்சுத்திணறல். சூழ்ந்துகொள்ளும் புதிய உலகம். வாழ்க்கையின் ஒவ்வொரு கண்டடைதலும் ஒரு வகை மீட்சி.

அரிதாக நாம் ஆழமாக சிக்கிக்கொள்கிறோம். நுழைவு வாயிலில் தவறாக அடைத்துக்கொள்கிறோம். உயிரளிக்கும் தொப்புள்கொடியே கழுத்தை சுற்றிக்கொள்கிறது. ஒவ்வொரு பிறப்பும் ஒவ்வொருவகை மீட்சி. ஆகவே மீளுதலைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். மானுடக்கதையாகவே அது மாறக்கூடும்.

இந்தக் கட்டுரைகள் நேரடியாகவே வாசகர்களுடன் நிகழ்த்திய உரையாடலின் விளைவுகள். வாசகர்களுடன் உரையாடிக்கொண்டே இருப்பது எழுத்தாளர்களின் இயல்பு. சுந்தர ராமசாமி, வண்ணதாசன் அனைவருமே உரையாடியவர்கள். ஆனால் இத்தனை பெரிய உரையாடல்களை இணையமே இயல்வதாக்கியது. இந்த உரையாடல்கள் அனைத்தும் மீட்சியின் கதைகள். மீளவிழைவோருக்கு உதவக்கூடியவை.

நண்பர் அருணாச்சலம் மகாராஜன் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.

ஜெ


வெளியீடு:

தன்னறம் நூல்வெளி

புத்தகங்கள் பெற:

9843870059

-----------

------------------------------------------------------------------------------
அன்புள்ள ஜே.எம்,

தன்னறம் வெளியீடாக வந்திருக்கும் தன் மீட்சி புத்தகம் ஏற்கனவே இணையத்தில் படித்த கடித பரிமாற்றமாக இருந்தாலும் கூட சிறந்த தொகுப்பாக வந்திருக்கிறது.

இதே தலைப்பில் இதை உள்ளடக்கிய ஒரு உரை கூட ஒன்று நிகழ்த்தலாம் . திருக்குறள், கீதை , காந்தி , வியாஸர் வரிசையில் சிறந்த உரையாக அமையக்கூடும் ,

வாழ்க்கை , அறம் , உளச்சோர்வு பற்றி தொடந்து கேட்கும் வாசகர்களுக்கும் மீண்டும் மீண்டும் கேட்டு ஊக்கம் பெறக்கூடிய ஒன்றாக அமையும்.

நன்றி

விஜய்

அன்புள்ள ஜெ

தன்மீட்சி ஒரு க்யூட்டான அழகான நூல். அதிலுள்ள பல கட்டுரைகள் இணையத்தில் ஏற்கனவே வந்தவைதான். ஆனால் அவற்றை ஒரே நூலாக வாசிப்பது ஓர் அருமையான அனுபவம். ஏற்கனவே வெளிவந்த பொன்னிறச்சாலை என்னும் நூலின் நீட்சி போலிருக்கிறது இந்த நூல். ஆழமான நல்லுணர்வுகொண்ட கட்டுரைகள். பரிசளிக்க மிகமிக ஏற்ற நூல்.

சத்யமூர்த்தி.எஸ்

அன்புள்ள ஜெ

திங்கள் கிழமை காலை நான் எப்போதுமே நீங்கள் எழுதும் ஒரு நம்பிக்கையூட்டும் கட்டுரையை வாசிப்பது வழக்கம். இப்படித்தான் இங்குள்ள அனைத்தையும் கடந்து செல்ல முடிகிறது. அந்நம்பிக்கையூட்டல் என்பது மற்ற சுயமுன்னேற்ற கட்டுரைகளில் இருப்பதுபோல நீ பெரியவன் ,சாதிக்கப்பிறந்தவன் என்றெல்லாம் பொய்யான ‘ஊக்கம்’ அளிப்பதில்லை. நடைமுறைக்கு ஒவ்வாத கனவுகளையும் அளிப்பதில்லை. மிகமிக நடைமுறை சார்ந்த்தாகவே உள்ளது. அந்த அன்றாடத்தன்மையே அதன் அழகு என சொல்ல்லாம்.

அதேசமயம் இந்த நம்பிக்கைக்குப் பின்னால் ஒரு கொள்கை உள்ளது. நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள வேதாந்தம்தான் அது. தன்முன்னேற்ற நூல்களில் தத்துவம் இல்லை. அவை நுகர்வையே கொள்கையாக முன்வைக்கின்றன. அவை தன்னுடைய வெற்றியையே ஒவ்வொருவனும் இலட்சியமாகக் கொள்ளவேண்டும் என்கின்றன. அந்த தன்னலம் நுகர்வு ஆகியவைதான் அவற்றில் உள்ள உள்ளோட்டமான தத்துவம். நீங்கள் முன்வைக்கும் அத்வைதம் விவேகானந்தர், நாராயணகுரு, காந்தி போன்றவர்கள் சொல்வது. செயலினூடாக தன்னைக் கண்டடைவது, இயற்கையுடன் ஒத்திசைவது, அதன் வழியாக உண்மையில் மகிழ்ச்சி அளிப்பது எதுவோ அதைச் செய்வது. இந்த வகையான நம்பிக்கைதான் நீடிப்பது.

இதை உங்கள் சொந்த வாழ்க்கையில் இருந்து கண்டடைந்து சொல்கிறீர்கள் என்பதனால் பிறருக்கும் உண்மையிலேயே உதவியானது. உங்கள் அர்ப்பணிப்பு, நீங்கள் செய்யும் பயணங்கள், நகைச்சுவை என பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. எனக்கு உண்மையாக வழிகாட்டலாக அமைந்த பல கட்டுரைகள் உள்ளன. தன்மீட்சி அவற்றில் நிறைய கட்டுரைகளின் தொகுதியாக உள்ளது

செல்வம் ராஜேஷ்
------------------------------------------------------------------------------------
VAAN velayuthamavudaiappan248 Chinthamathar Pallivasal St Kadayanallur627751India

எழுதியவர் : (7-Feb-19, 8:00 pm)
பார்வை : 27

மேலே