நிலையாமை

நிலையாமை
**************
அம்மா எனக் கூவி அழைத்து
அதிகாலையில் கீரை விற்கும் கிழவியை
சிலநாட்களாகக் காணவில்லை .

சகோதரி உன் கைமணம் பிரமாதம் என
சந்தோஷமாய் பாராட்டி காப்பிக்கு
வரும் அடுத்த தெரு
வரதன் எங்கே என்று தெரியவில்லை .

அடுக்கடுக்காய் பழம் அடுக்கி
அநியாய விலை என வாங்காமல்
ஒதுங்கிய ஓரக்கடை
ஒருமாதமாய் திறக்கவேயில்லை.

கடற்கரை நோக்கிச் சிறு கூட்டமாய்
காலையிலும் மாலையிலும் நடைப்பயிலச்
செல்லும் பெரியவர்களில் ஒரு
சில தலைகளைப் பார்த்து சில நாட்களாகின்றன.

எங்கே இவர்கள் என்று தேடும் போது எங்கும் இல்லை அவர்கள் இனி என உணர்வாய்!
உலகம் “நிலையற்றது” என்பதை அறிந்து கொள்!

‘நெருநெல் உளன் ஒருவன்’என்ற
குறள் பொருள் அறிவாய்! நீயும்
ஒருநாள் இவ்வாறு பலரால் தேடப்படுவாய்
என்ற உண்மையை நினைத்துப் பார்ப்பாய்
எனவே,

ஆர்வமுடன் ஆலயம் செல்,
ஆண்டவனை நெக்குருக வேண்டி நில்!
ஆலயம் செல்ல இயலவில்லையெனில்
அன்புடன் மனத்திலே ஆலயமமைத்து
அளவில்லா உவகையுடன் இறைவனை
அங்கே பிரதிஷ்டை செய்!
மெய்பொருள் நாயனார் நீதான் என
மெய்யாகவே எண்ணி விடு!

ஆறுகால பூசைகளும்
அருமையாக ஆற்று
அபிஷேக அர்ச்சனைகள் செய்!
அம்மை அப்பன் அருமையாய் வந்திடுவான்!
ஆனந்தக் கூத்தாடுவான்!
இம்மையிலேயே மறுமையின்பம்
இனிதாய் காட்டுவான்!
பிறவிப் பயனடைவாய்!
பேரின்பம் அதுதான் காண்!

எழுதியவர் : சாந்தா வெங்கட் (21-Feb-19, 11:21 am)
சேர்த்தது : சாந்தா
Tanglish : nilaiyaamai
பார்வை : 152

மேலே