உயிர்மை

உயிர்மை

உயிர்களை
உயிர்பித்த
உயிர்மை
தாய்.

நன்நெறிகளை
பயிற்றுவித்த
முதன்மை ஆசிரியை.

உலகின் முதல்
முகநூல்.

குழைய குழைய
பால் சோற்றுடன்
மொழியை
இழையவிட்டவள்.

எண்ணையும்
எழுத்தையும்
இதயத்தில்
தோய்த்தவள்.

மழலையர்
வகுப்பறை
புகுந்தவுடன்
மறந்ததும்
மறைக்கப்பட்டதும்
தாயின் மொழி.

பொருள் சேர்க்கை
அரசியலில்
வணிகம் வளர்க்கும்
பள்ளிகளில்
வெட்டப்பட்டன
எம்
மழலையர்களின்
கற்பனைச் சிறகுகள்.

தனியார்
பள்ளிகளில்
புகட்டப்பட்ட
புட்டிப்பால்
இன்று
அரசுப்பள்ளிகளிலும்
அல்லவா
திணிக்கப்பட்டுவிட்டது.

அன்னைமொழி
அனாதையானது.

ஒருமொழி
இருமொழியாகி
இருமொழி
மும்மொழியாகி
எம் இளையவர்கள்
சவலையாகினர்.

என்னதான்
உலகமொழி நாளில்
வாழ்த்துமழை
தூவிக்கொண்டாலும்
உயர்வழக்கு மன்றத்தில்
தமிழ் கைகட்டி
வாய்ப்பொத்தி
சிறைபட்டுள்ளது.

இன்றும்
இந்திய திருநாட்டில்
தமிழ்
அட்டைவணை
மொழியன்றி
ஆட்சிமொழியல்லவே.

எம்
உலகப் பொதுமறை
திருக்குறள்
தேசிய நூலாக
ஆகவில்லையே.

காக்கைக்கு
தன்குஞ்சு
பொன்குஞ்சு.
இந்த மண்ணின்
மனிதர்களுக்கு
மட்டும்
ஓடானது
ஏன்?

அவர்களுக்கு
இன்றொரு நாள்
ஓடினால்
ஓடிவிடும்
மொழியுணர்வு.

ஏனென்றால்
அவர்களுக்கு
இதுவொரு நாள்
மட்டும்.

நமக்கு
தாயோடும்
தாய் மொழியோடும்
வாழ்நாள் முழுதும்
வாழும் நாள்.

- முனைவர் சாமி எழிலன்
21 02 2019

எழுதியவர் : சாமி எழிலன் (21-Feb-19, 11:04 am)
Tanglish : uyirmai
பார்வை : 143

மேலே