நிறம் மாறும் மனிதர்கள்

ஈர்மூன்றறிவென்று மார்தட்டும் மனிதகுலம்
பார் நியதியிதை! ஓரொருவர்க் கோர்குணமாம்

குணத்தால் வேறுபட்டும், கணப்பொழுதே ஆயிடினும்
மனச்சாட்சிப் படிநடத்தல் மனிதரெம் மாட்சியடா!

ஆறறிவு படைத்திருந்தும் மாறுகிற குணம்படைத்தோர்
கூறியஇவ் இலக்கணம்அம் மாறுநிற மனிதர்க்கில்லை

கள்ளம், கபடமொடு காழ்ப்பு நிறைமனத்தோர்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிடுவார்

நிசத்தை நினைப்பறிந்தும் நேரமொரு மொழிபுகல்வார்
பசுத்தோல் அணிந்தபுலி! பத்திரம், என் நண்ப!

அகம்காட்டா முகமுடையார், அறமென்றால் ‘என்ன?’வென்பார்
முகத்துதி செய்வதிலோ முடிசூடா மன்னரிவர்!

காரியமாகும்வரை நீஅவர்க்குக் கறியாவாய்!
காரியமான பின்னோ கறிவேப்பிலை ஆவாய்!

செப்புவதைக் கேட்கும்படி செப்படி வித்தைசெய்வார்
எப்படியும் வலைவிரிப்பர், முப்போதும் முழித்தேநட!

ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோறு பதமாகும்
குருகாய் விலக்கவர்தம் குணமொன்றில் தரமறிந்து!

இச்சகம் பேசியே இச்செகத்தை வென்றிடுவார்
பச்சோந்தி யனையரவர்! பார்த்து விலகி நட!

~ தமிழ்க்கிழவி

குருகு = நீரொழியப் பாலுண்ணும் இயல்புடைய அன்னம்

எழுதியவர் : தமிழ்க்கிழவி (21-Feb-19, 10:42 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 719

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே