நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் தாரித்திருத்தல் தகுதி – நாலடியார் 72
இன்னிசை வெண்பா
நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற் - றோரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும். 72
- பொறையுடைமை, நாலடியார்
பொருளுரை:
தமக்குச் சமானமல்லாதவர் குணமல்லாதனவான சொற்களைச் சொன்னால் சான்றோர் அதனைப் பொறுத்திருத்தல் தகுதியாகும்;
அங்ஙனம் பொறுத்திராமையை கருதத் தகுந்த புகழ்க்குரிய குணமாகக் கொள்ளாமல், கடல் சூழ்ந்த இவ்வுலகம் பழிப்புக்குரிய இழிகுணமாகக் கருதிவிடும்.
கருத்து:
தமக்குச் சமானமல்லாதவர்கள் தம்மை ஒன்று சொன்னால் அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
விளக்கம்:
நேரல்லாரென்றது கீழோரை.
தரித்து என்பது முதல் நீண்டது.
இருத்தல் - மேன்மேலுந் தனதொழுக்கத்திலேயே நிலைத்திருத்தல்.
‘ஞாலம்' என்றது உயர்ந்தோரை. கொண்டுவிடும் என்னும் முடிபு ஞாலம் என்னும் சொன்னிலை கருதியது.
சமழ்மை என்றது இழிவு;