வழித்தடம் தேடி
நான்
தேடி வந்த பாதைகள்
கற்களும்
முட்களுமான
பாதைகள்
தடம் பதித்த
வாழிடங்கள்
வாழ்ந்த வசிப்பிடங்கள்
வழக்கொழிந்த வாசகமாக
தத்தி தத்தி
நடைபயின்ற கானகம்
கண்மூடி
கண்திறப்பதற்குள்
கற்பனையாய் சென்றதோ...?
வாழிடம் தேடினேன்
வழித்தடம் தேடினேன்
திரும்பத்தான் நினைக்கின்றேன்
வந்த தடம்
தெரியவில்லை
வழித்தடம் தேடிய என்னை
மூர்க்கனென்று
வலைவீசி பிடிப்பீரோ...?
வசிப்பிடம் தேடிய என்னை
வளர்ப்பு பிராணியாக மாற்றுவீரோ...?
எம் இனம் தனை
மடக்கும் கும்கியாக
மாற்றுவீரோ...?
பசுமை கொண்டு
செழித்திருந்த
என் வழித்தடங்கள்
பண்பட்ட உன்னால்
பயனற்ற பாலையாக
என் தேடல்
வன வசிப்பிடம் தேடியே
உன் தேடலும்
என் தேடல்போல்
நிகழத்தான் வேண்டாமே...