புளிய மரன்

புளிய மரன்

யார் வைத்தார்?
யார் வளர்த்தார்?
யாரென்று
யாரருக்கும் தெரியாது.

பாட்டி சொன்னாள்
அவள் குட்டியாய்
இருக்கும்போது
நீ பூப்பெய்திருந்தாயாம்.

பாட்டி பறித்து தின்ற
அந்த புலியாங்காயைத்தானே
நானும் அடித்துதின்றேன்.
அடித்து தின்றேன்-
நீ பெருமரமாய்
ஆனதால்.
காய்த்தமரம்தானே
கல்லடிபடும்.

ஒரு நூற்றாண்டை
கூறு போட்டு நடந்து விட்டாயாமே.
உன்னை எட்டிப்பார்க்கும்போது
எனக்குள் ஒரு பயம்.

எனது கதைகள்
நான் சட்டை போடாத
கதையிலிருந்து
எனக்கும் தெரியாத
பலநூறு கதைகள்
உனக்குத் தெரியும்.
வாழ்ந்தவர்கள்,
வாழ்கின்றவர்கள்
அவர்களின்
குழந்தைகள்
தந்தைகள்
தாய்கள்
ஏழைகள்
பணமுள்ள மனமில்லா ஏழைகள் .
பணமில்லா செல்வந்தர்கள்.
பாவிகள்
அப்பாவிகள்
கடவுளர்கள்
அய்யப்ப பக்தர்கள்
கடவுள் மறுப்பாளர்கள்
கள்ளக் காதலர்கள் முதல்
நல்லக் காதலர்கள் வரை,
உன் நிழலில்
டேரா போடும்
கம்மங்கட்டி வித்தைக்காரன் முதல்
நரிக்குறவர் கூட்டம்
ஈயம் பூசுவோர் பட்டறை
பூம் பூம் மாட்டுக் காரன் வரை
எல்லோரையும் 'அறிந்த நீ'
சுறாவளிப் புயலையும்
சுழற்றி அடித்துவிட்டுத்தான்
நிற்கின்றாய்.

'பொங்கும் காலத்திற்கு
புளி' என
ஊருக்கும்
பிள்ளைகளுக்கும்
புளியங்காய்
கொடுத்த நீ!
இறந்தவர்க்கு செய்யும்
கருமாதிக்கு
துறையாகவும்
ஆன நீ !
சுழலுகின்ற
வாழ்க்கை சுழற்சியின்
வரலாறு.

வரலாறு
வரலாற்றை
திருப்பி
வரலாறு
படைப்பதை
நீதான் படைக்கமுடியும்!
நீதான் சொல்லமுடியும்!
வாழ்கின்ற புளியமரனே
நீதான் சொல்லமுடியும்!

எழுதியவர் : இராமானுஜம் மேகநாதன் (5-Mar-19, 5:29 pm)
Tanglish : puliya MRN
பார்வை : 121

மேலே