எவருக்குள் எவர்
எவருக்குள்
எவர்?
எவருக்குள்
எவர்
அடக்கம் என்பது
அடக்கம் வரை
நீள்கிறது.
பாலுடன்
கலந்த
நீர் போல
பால் பேதங்கள்
பாலாடை முதல்
பாடை வரை
தொடர்கிறது.
கருவில் இருப்பது
மகள் என்றவுடன்
நெரிக்கப்படுகின்றனர்
திருமகள்கள்.
மழலையர்
வகுப்பிலேயே
தனித்தனியிடம்.
முடி வளர்ப்பது
ஆடை அணிவது
ஊண் உண்பது
ஆட்டம் பாட்டம்
சொத்துசுகம்
எல்லாவற்றிலும்
அரசியல் சட்டத்தை
மிஞ்சிய
சட்டங்கள்.
வல்லரசு
நல்லரசு
கனவு நாட்டில்
மகளிர்
ஆடவருக்கென்று
தனித்தனி
வகுப்பறைகள்.
வாழ்ந்த காலத்தில்
மலர்களாக
வாழ்ந்திட்ட பெற்றோர்கள்
தம் பிள்ளைகளை
வளர்க்கும்
காலத்தில்
முட்களானது ஏன்?
இடையில்
கறுத்த மேகத்தில்
காதல் நிலா
உலா வரும்போது
இனவேட்கையால்
கருத்து வேறுபாடுகள்
வருவதில்லை.
வந்தாலும்
புறந்தள்ளப்படுகின்றன.
அவளும்
அவனும்
சரிநிகர்சமானமாக
வாழும்
வசந்தகால
நாட்கள் அவை.
மணமான பின்
நிலா
நிறப்பிரிகையடைந்து
வானத்தைக்
கிழித்துவிடுகிறது.
புறம் மட்டும் பார்த்தவர்கள்
புறத்தைச் சார்ந்து
அறத்தைப்
புறந்தள்ளியதால்
அகத்தில்
புழுக்கள்
நெளிகின்றன.
பெண்மையும்
ஆண்மையும்
மென்மை
திண்மைகளில்
ஒன்றையொன்று
தின்று
புள்ளியில்லா
கோலங்களில்
அலைகின்றன.
அலங்காரங்களில்
மயங்கியவர்கள்
அகங்காரங்களில்
மிதந்ததால்
வழக்குமன்ற
கட்டுகளுக்குள்
உரசிக்கொள்கின்றனர்.
நெறிகள்
நெரிகளாகிப்
போனதால்
நைய்ந்துப்
போயின
இல்லத் தறிகள்.
ஆணை
அதே
ஆண் போல
பெண்ணை
அதே
பெண் போல
வரிக்கும்
யுகம் இது.
யுகங்கள்
ஆனாலும்
வேதத்தின்
வேர்கள்
சொல்கின்றன
நீவீர்
வேறுவேறு
என்று.
மக்களவையில்
மகளிர் மசோதா
அய்ந்தாண்டுக்கு
ஒருமுறை
நிறைமாத
கர்ப்பிணியாக
வலம் வந்தாலும்
குறைபிரசவம்
ஆகி
புகுந்தவீட்டுக்குள்
புகுந்துவிடுகிறது.
பூவுலகில்
தாய் மட்டும் தான்
தன்
கருவறையில்
உறைவது
பெண்ணா
ஆணா
என
பாராமல்
உயிர்கள் காக்கும்
உயிர்.
தாயென்னும்
பெண்ணில்
அடங்கிய
ஆண்
தானொரு
பெண்ணுக்கு
அடங்காதது
முரண்.
சுற்றத்திற்காகவும்
நட்புக்காகவும்
வாழ்ந்து
எழுகிறபோதும்
விழுந்து
வீழ்கிறபோதும்
மறந்தது
மறைத்தது
ஓட்டுக்குள்
ஒட்டியிருந்த
பொழுதுகளை அல்லவா?
இவன்
உயிருக்கு
ஒன்றென்றால்
குருதி
உடலுறுப்புகள்
தருவது
பெண் என
பார்ப்பதில்லை.
கண்மூடி
கண் திறப்பதற்குள்
கணங்கள்
கரைந்து
கன்னங்கள்
கறுக்கும் பொழுதும்
தேகங்கள்
சுருங்கும் பொழுதும்
பேதங்கள்
போதிக்கின்றன
ஓட்டுக்குள்
ஒடுங்குமுன்
ஒடுங்கென்று.
இரு கையால் விளைவது
இசை.
இருமனங்களும்
இசைவது தான்
வாழ்க்கை.
- சகுந்தலா சாமி எழிலன்
08 03 2019