மூர்க்கங்கள்
பலர் முன்னிலையில் தூக்கிலிடுங்கள் எனப்
பரவலான பரிந்துரைகள்!
அரபு நாட்டுத் தண்டனைச் சட்டங்களை
அவசரமாய் அமல்படுத்தச் சொல்லும்
ஆத்திரக் குரல்கள்!
கவலை கலந்த வரிகளுடன்
கணக்கற்ற கண்டனக் கவிதைகள்!
பெண்களையும் சேர்த்தே பழிகூறும்
பெரும்புத்திசாலிகளின் பிதற்றல்கள்!
பெண்களுக்கெனவே பிரத்தியேகமாய்
எண்ணிலடங்கா அறிவுரைகள்!
ஆண்பிள்ளை வளர்ப்பு பற்றிய
ஆயிரம் அலசல்கள்!
என எதிலும் மனம் லயிக்காதபடி
அடிமனதில் பேரிரைச்சலாய் எதிரொலிக்கிறது
"பெல்டால அடிக்காதீங்கண்ணா.."
என்ற பெருவலி சுமந்த கதறல்!
கதவு சாத்தி
காது பொத்தி
உடைந்து விழுந்து
உள்ளுக்குள் அழுது
கெட்ட வார்த்தைகளற்ற
ஒற்றைக் கவிதைக்காய்
எட்டு முறை முயன்று
என எது செய்தும் தணியாத
எரிநிலை மனதில்
மறுபடி மறுபடி வந்து
அமிலம் வீசிச் செல்கின்றன
"உன்ன நம்பித்தான வந்தேன்"
என்ற உயிர் கொல்லும் வார்த்தைகள்!
புழுங்கித் தவிக்கும் இதயத்தின்
புகைச்சலுக்கு நடுவே
கலங்கி நிற்கும் சகோதரிகளுக்கு
கடைசியாய் ஒன்று சொல்லி
கவிதையை முடிக்கிறேன்.
இங்கு முகமூடிகளுக்குப் பின்னே
முகங்கள் மட்டுமல்ல
சில மூர்க்கங்களும் உண்டு!
அதனால்தான்
மதிப்பிற்குரியவர்களாகத் தெரியும்
ஆண்களில் சிலர்
மனிதர்களாகக்கூட இருப்பதில்லை!
- நிலவை பார்த்திபன்