வரம் பெற்றேன் வாழ்வதற்கு

#வரம் பெற்றேன் வாழ்வதற்கு..!
#இவளின் உலகம் - பகுதி-3

உனக்கான தேசம்
வா வந்து வாழ்ந்து கொள்
உன் ஆசை தீர…
அசரீரியாய் உரைத்தவர்கள்
தேவாதி தேவர்களின்
இனமாயிருக்கக்கூடும்..!

வெல்வெட்டின் மென்மையொத்த
சிவப்புக் கம்பளம்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை..!

மேற்கூரை பூக்களால் வேயப்பட்டு
வானத்தில்
தொங்கும் தோட்டமாய்
வானமே தெறியாதவாறு..!

தேவதைகளுக்குப் போட்டியான
யுவதிகள் எங்கெங்குமாய்
வண்ணச் சிறகுகளுடன்
மலர் தூவுகிறார்கள்
சிவப்புக் கம்பளத்தின்
மென்மைக்கு போட்டியான மலர்கள்
என் வழி நெடுகிலும்…

பூக்களை
மிதிக்கப் பிடிப்பதில்லை எனக்கு
மிதிக்காமல் சற்று விலகியே நடக்கிறேன்
இன்னவென்று இனமறியா வாசம்
நாசி நுகர்ந்ததில்
மயங்காமல் மயங்கினேன்..

நடை கூட சிறிது
தளர்ந்துதான் போனது..!

முயல்கள் ஓடிக்கொண்டிருந்தது
இங்குமங்குமாய்..
புறாக்கள் தத்திக் கிடந்தன
அங்கிருந்து
பறந்துவிடும் எண்ணமின்றி..!

ஒன்றிரண்டு மயில்கள்
தோகை விரித்திருக்க
என் இமைகள் விரித்து
இன்பம் நுகர்ந்து கொண்டிருந்தது
ஏகாந்தம்… ஏகாந்தம்..
முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன்..!

என்னிரு புறத்திலுமாய்
தேவதைகள்
என் கரங்களைப் பிடித்து
அழைத்துச் செல்கிறார்கள்..!

எங்கே என்று
கேட்கத் தோன்றாமல்
சுயம் இழந்து கொண்டிருக்கிறேன்..!

நடந்து செல்கிறேனா
இல்லை மிதக்கிறேனா..?

இப்போது
என் பிரியமானவனின் வாசம்
எங்கிருந்து வருகிறது..?
கேள்விகள் முடிக்கப்பெறும் முன்பாகவே
முறிக்கப்பட்டுவிடுகிறது..!

இதோ
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல்
இல்லை… இல்லை..
மலர்க் கொடிகளாலேயே
வடிவமைக்கப்பட்ட ஊஞ்சல்
அதில் ஒய்யாரமாய்
அமர்ந்து கொண்டிருக்கிறான்
என்னவன்..

வெட்கத்தில் சுற்றி நோக்குகிறேன்
தேவதைகள் ஒருவரையும்
காணவில்லை…
இங்கிதம் தெரிந்தவர்கள்..!

மெல்ல அவன் மடி சாய்கிறேன்
அவன் பேச்செனக்கு
தாலாட்டாய்…
விழிகளை மூடி ரசிக்கிறேன்
அவன் மட்டும் விழிகள் மூடாமல்...

நீங்களும்
இங்கிதம் தெரிந்தவர்கள்தானே..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (21-Mar-19, 7:08 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 68

மேலே