கந்தனின் நிழலில்---சந்த வேற்றொலி வெண்டுறை ---

சந்த வேற்றொலி வெண்டுறை :


காலைநிதம் துயிலெழுந்து கண்ணெதிரில் நிற்குமவன்
காட்சிக் கண்டால்
சோலைமலர் மனமாகும் சோகமதும் வெண்பனியாய்த்
தொலைந்து போகும்
ஞாலம் புலரும் ஞானம் மலரும்
வேலன் படத்தை வீட்டில் வைத்தே...

பூவவிழ்ந்து கொடியாடும் பொன்வண்டும் தேடிவரும்
புலர்ந்த நேரம்
சேவடியில் மனந்தொழுது தேன்மலரைச் சூட்டியொளிர்
தீபம் தந்தால்
சேவற் கொடியோன் சேனைத் தலைவன்
காவற் புரிவான் கண்ணுள் வைத்தே...

பால்மனத்தி னாழத்தில் பக்திமணம் வேரூன்றும்
பனையாய் நீளும்
மால்மருகன் கொண்டவெழில் மரைவதனம் களிப்பென்ற
மழையைத் தூவும்
கால்நின் றுயிரோ?... கனிந்து ருகிடும்
வேல்நீங் கிவேலை வேறே திங்கே...

நன்றொன்றே செய்திடுவாய் நல்லெண்ணம் கொள்வாயே
நடந்து விட்டால்
குன்றேறும் செந்தூரன் குடிவருவான் நெஞ்சத்துள்
கோவில் கொள்வான்
மின்னற் பொழுதில் விழியின் முன்னும்
பொன்னின் சுடராய்ப் பொலிவாய் நிற்பான்...

காலத்திற் செய்தீங்கோ?... கடும்நஞ்சு நிறைநாகம்
காலைச் சுற்றும்
சூலத்திற் குத்து(ம்)பழம் துளிதுளியாய்ச் சாறிழந்து
சுருங்கு தற்போல்
சாலம் நிகழும் சாகத் தூண்டும்
பாலன் நிழலாற் பாவம் நீறே...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Mar-19, 10:47 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 98

மேலே