நூலகம் பேசினால்---எண்சீர் விருத்தம்---

இளந்தமிழின் உயர்கவியே இருள்விலக்கும் தீபம்
*****ஏற்றிவைத்தார் அறிவரங்கில் உன்முன்னோர் அன்றே
வளம்நிறைந்தும் களர்நிலம்போல் மண்மிசையில் காட்சி
*****வரைந்துவிட்டார் என்னரங்கில் உன்போன்றோர் இன்றே
வளர்ந்துவிட்டேன் என்றெண்ணி வந்தெனைக்க வனிக்க
*****மறந்தாயோ?... நினைவிருந்தும் கடந்தேசென் றாயோ?...
வளர்ந்துவிட்டோம் என்றெண்ணி வாசலடி வைக்க
*****மறுத்தாயோ?... கனவுலகில் கரைந்தேநின் றாயோ?...

கருவறையில் சுமக்கின்றேன் கணக்கில்லா நூல்கள்
*****கலையிழந்தும் தவிக்கின்றேன் கால்தடங்கள் குறைந்து
கருத்துமழை மிகுந்தவொரு கார்முகிலாய்ச் சூழ்ந்தேன்
*****கன்னலுண்பார் காத்திருந்தேன் தாழ்திறந்த சிறைக்குள்
இருக்கைகளில் அமர்வதற்கே இடமில்லை வெறுத்தேன்
*****ஏனென்றால் இருக்கையெல்லாம் இலைச்சருகின் கூட்டம்
வருந்துயரில் வீழ்ந்திட்டால் மருந்தொன்று தருவேன்
*****வாராதோ?... சொந்தங்கள் வாயின்றி அழுதேன்...

மலர்வீசு தென்றலிங்கு வந்துலாவும் பொழுதில்
*****வண்டமிழின் ஏடுகளைப் புரட்டாதோ?... ஏக்கம்
மலராடும் சோலைக்குள் வண்டினங்கள் இலாது
*****வனப்பிருந்தும் வாடுகின்ற சூழ்நிலைதான் எனக்கும்
அலைபேசி திரைக்குள்ளே அனைத்துமடக் கமென்றாய்
*****அதன்பிடிக்குள் அடங்கிவெளி வரத்தயக்கம் கொண்டாய்
வலைவீசி மீன்பிடிப்பாய் வற்றாத செல்வம்
*****வைத்துள்ளேன் தருவதற்கே வருவாயோ?... உறவே...






(என் முதல் கவியரங்க கவிதை ஆகஸ்ட் 26 2018)

எழுதியவர் : இதயம் விஜய் (22-Mar-19, 5:45 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 149

மேலே