அபூர்வராகங்களுக்கு அங்கீகாரம் தந்திடுவீர்
ஆபூர்வராகங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கட்டும்....
மரவுறியோன் வரத்தாலே மாலைசூடும் முன்னே
மகவை ஈன்றாள் மன்னர்குல குந்தியவள்
மண்ணகத்தோர் மறுதலிப்பிற்கு அஞ்சி
சூரியப்புத்திரனை சுழல் ஆற்றில் ஓடவிட்டாள்
வரம்கொடுக்கும் சாமிகள் விரகம்தீர்த்து விலகுவதால்
கரகத்தை சுமந்த மங்கையர் நரகத்தில் வீழ்கின்றார்
இரவெல்லாம் பனியில் இடுகாட்டு மடியில்
மூச்சறைந்த நிலையில் முலைசுவையா மதலை
மீட்டெடுக்கப்பட்ட சேதி தினம் தினம் தலையங்கமாய்
அடிவயிற்றைப் பிழிகிறது இதயத்தை கிழிக்கிறது
இதிகாசம் புராணம் இலக்கியக் காலம் முதல்
ஈன்றாள் கைவிட்டக்கதை இன்றுவரை தொடர்கிறது
நாற்சந்தி புணரும் நாய் பிறப்புக்களும்
நரமாமிசம் உண்ணும் கொடூர மிருகங்களும்
தானீன்ற இளம்குருத்தை தாய்மையில் காத்திடும்
திரைமறை தீண்டலால் அடிசுமந்த மானிடமோ
விடைதெரியா தன் அபூர்வ ராகங்களை
கச்சேரி காணவிடாது கனக்கச்சிதமாய் தொலைத்திடும்
ஆசையில் அனுபவித்து திசைமறந்த துஷ்யந்தர்களை
விலாசம்தேடும் சகுந்தலைகள் தனித்துவாழ துணிந்தால்
வஞ்சக உலகின் பழிசொல்லுக்கு அஞ்சி அடங்கிடாது
நெஞ்சுறுதியோடு குந்திதேவிகள் நிமிர்ந்து நின்றால்
கருணை இல்லங்கள் காணாமல் தொலைந்திடும்
கர்ணன்களின் பிறப்புகள் சான்றாண்மைப் பெற்றிடும்!
கவிதாயினி அமுதா பொற்கொடி