களைகளை களை
#களைகளை...களை..!
✂️✂️✂️✂️✂️✂️✂️✂️
செந்தமிழ் செழித்த நாட்டினில் பாவிகள்
இந்தியை விதைக்கின்றார்
முளை விடும்முன்னே எடு அருவாளை
களைவோம் இது வேளை….!
பொன்னென விளையும் பூமியில் இன்று
விடமிட வழி வகுத்தார் - மீத்தேன்
வழித்திட வருவார் உருவிடு வாளை
களைவோம் அவர் காலை..!
சுதந்திர நாட்டில் தந்திர நரிகள்
சாயமும் நீ களைவாய்
அடிமைத்தனத்தின் வேரினை அறுத்து
சரித்திரம் நீ படைப்பாய்..!
குடிமகன் குடியை குடியால் கெடுக்கும்
கூடாரம் தேடி அழி..
கொள்கையின்றி குரலை உயர்த்தும்
குரல்வளை பற்றி நெறி..!
உழைப்பவன் ஒருவன் உரிபவன் ஒருவன் - ஏழை
பிழைப்பது எக்காலம்..?
தரகுப்பேய்கள் கண்டு பொசுக்கு
அடங்கட்டும் எக்காளம்..!
வேலியைத்தாண்டும் காவல் அனைத்தும்
வெட்கக் கேடுகளாம்
போலி முகத்தின் வேடம் கலைத்து
வீதியில் நிறுதிடலாம்..!
நீதி நேர்மை நாட்டில் இங்கே
விலை போகுது போகுது காண் -
களைந்திட
அரிவாள் அதற்கு போதாதெனவே
எரிமலை நீ கொணர்வாய்..!
நாட்டில் மட்டும் களைகள் இல்லை
நம்மிலும் வளருது காண்
முளைவிடும் போதே கிள்ளியெறிந்திட
முன்னேற்றம் கண்டிடுவாய்….!
ஆதவன் உதித்தும் உறக்கமெதற்கு
அவன்முன் நீயெழுவாய்
உறக்கம் களைய விடியல் அருகில்
உண்மை இதையுணர்வாய்…!
களைகள் நாட்டில் பலவாய் வளருது
வாயினில் தீயிடுவாய்
களைகள் யாவும் களைந்து களைந்து - நாடும்
வளம் பெற உரமிடுவாய்..,!
🥁🥁🥁🥁🥁
# சொ.சாந்தி-
🥁🥁🥁🥁🥁
பண்ணைத்தமிழ் சங்கத்தில் வாசித்த கவிதை. தலைப்பினை அளித்து வாசிக்கும் வாய்ப்பினை அளித்த கவிக்கோ திரு துரை வசந்தராஜன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏🙏