அண்ணி

#அண்ணி

புகுந்த வீட்டிற்கு
குத்துவிக்கக்கேற்ற வந்தவள்
மருமகள் மட்டுமல்ல
வீட்டுப் பிள்ளைகளுக்கு
வெளிச்சமாய்
அண்ணியும்தான்..!

அண்ணி
குடும்பத்திற்கு கிடைத்த
இரண்டாவது அம்மா..!

ஆல மரத்தின் ஆணிவேர்களாய்
பெரியோர்கள் இருக்க
ஆலம் விழுதாய்
விழுந்து விழுந்து
பின் எழுந்து துளிர்ப்பவள்
அன்பான அண்ணிதான் !

இவள் வந்த பிற்பாடுதான்
சில மாமிகளுக்கு
அடுப்பங்கரை ஓய்வுகள்..!

நாத்திகளை திருமணத்தில்
தாரை வார்த்துக்
கொடுக்கும்போதெல்லாமும்
சில பல குடும்பங்களில்
அண்ணியின் நகைகளும் சேர்த்தேதான்
தாரை வார்க்கப்படுகிறது…!
சில அண்ணிகளின் ஆசிகளுடனும்
சில அண்ணிகளின் சாபங்களுடனும்..!

சில குடும்பங்களில்
நிதிபற்றாகுறையை எல்லாம்
அண்ணிகளின் நகைகள்தான்
ஆண்டாண்டு காலங்களாய்த்
தீர்த்து வைக்கிறது..!

பாசமான அண்ணிகள்
கொழுந்தன் கொழுந்திக்குக் கிடைத்த
தாய் மட்டுமல்ல
ஆத்மார்த்தமான சிநேகிதியும்தகான்..!

அம்மாவிடம் பகிர இயலாதவையும்
அண்ணிகளிடத்தில்தான்
பகிரப்படுகின்றன…

கணவனுக்கு மட்டுமல்ல
கொழுந்தன் கொழுந்திக்கு
நல்லதொரு அமைச்சராய்
செயல்படுவதெல்லாம்
இந்த அண்ணிதான்..!

காதல் பிரச்சினைகள் எல்லாம்
கனகச்சிதமாய்
முடித்துவைக்கும் சூத்திரதாரியும்
இந்த அண்ணிதான்..!

காதல் கல்யாணத்திற்கு
இரு குடும்பத்தாருக்குள்ளும்
சமரசம் உண்டாக்கி
ஜாதிப்போபோரை அடக்கி
சாகசம் படைக்கும்
சமாதானப் புறாவும்
இந்த அண்ணிதான்..!

அண்ணி... அண்ணி..
அண்ணி என்ன
அவ்வளவு உயர்ந்தவளா.?
நீங்கள் கேட்கலாம்…

கூறுகிறேன் எங்களின்
அம்மாவாகிய அண்ணியை

விபத்தொன்றில்
கால் எலும்புகள் முறிவடைந்த நிலையில்
இருந்த இடத்தில் படுக்கை எல்லாமும்
இரண்டு மாதங்கள் ஒரிடம்தான்
முடமாய் நான்தான்…

தாகமென்றால் தண்ணீர்
பசி என்றால் உணவு…

முகம் படித்து எல்லாமே அளித்தது
என் வணக்கத்திற்குரிய
அண்ணிதான்
இவைக்கும் மேலாய்
அசௌகரியங்களை
முகம் சுளிக்காது
அப்புறப்படுத்தியவளும் அண்ணிதான்
அண்ணியேதான்…

உங்களுக்கு இப்படியோர்
அண்ணி உண்டா..?
இருப்பார் என்றால் மகிழ்வேன்..!

சில அண்ணிகள்
வீட்டிற்கு வெளிச்சமாய்
சில அண்ணிகள்
அதிர்ச்சி உண்டாக்கும்
பூகம்பமாய்..!

அண்ணியை
அடுத்த வீட்டுப் பெண்ணாக
கருதாது உங்கள்
இரத்த சம்பந்த உறவாய் போற்றுங்கள்
இல்லம் சொர்க்கம் தான்..!

அண்ணி அம்மாவாக இருப்பதெல்லாம்
உங்கள் கைகளில்..
உங்களின் அன்பினில்..!

எங்களின் அம்மா நாத்திகளுக்கு
அண்ணியாகவோ, அந்நியமாகவோ
இருந்ததில்லை
என்றுமே அம்மாதான்..!

அதனால்தான்
எங்களுக்கு வாய்த்த அண்ணிகளும்
எங்களுக்கு அம்மாவாகவே…!

உங்களுக்கு..?

#சொ.சாந்தி

(16-03-2019 அன்று இலக்கியச் சோலை பத்திரிக்கையின் மகளிர் சிறப்பிதழ் வெளியீட்டின் போது திரு துருவன்சார் அவர்களின் அருமையான தலைமையில் நடந்த கவி அரங்கில் வாசித்தக் கவிதை. வாய்ப்பினை அளித்த திரு சோலைத் தமிழினியன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏🙏

மிக அருமையான நிகழ்ச்சி. எஸ்.பி. முத்துராமன் அய்யா அவர்களின் 75 நிமிடசொற்பொழிவு மிக அருமை. அருமையான தருணம்.😊😊)

எழுதியவர் : சொ.சாந்தி (25-Mar-19, 10:17 pm)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : Annaie
பார்வை : 162

மேலே